இடையிலாடும் ஊஞ்சல் 7: அவமானமே பாராட்டு!

இடையிலாடும் ஊஞ்சல் 7: அவமானமே பாராட்டு!
Updated on
2 min read

உண்மையான சமூக மாற்றத்துக்காகப் போராடுகிற ஒருவரின் அடையாளம் என்ன? அவர் வாழும் காலத்திலேயே அவர் ஏசப்பட வேண்டும்; அவமதிக்கப்பட வேண்டும்; எதிர்க்கப்பட வேண்டும்; கூடவே சபிக்கப்படவும் வேண்டும் - இந்திய வரலாற்றில் இவை எல்லாமே அண்ணல் அம்பேத்கருக்கு நிகழ்ந்தன.

அவர் மறைந்த பிறகும் அவருக்கான அவமரியாதையை இடையறாது நிகழ்த்திக்கொண்டிருக்கிறது இந்தியச் சமூகம். அவரது 65ஆவது நினைவு தினத்திலும் (6 டிசம்பர் 2022) அவர் அவமதிக்கப்பட்டார். அவர் மறைந்த பிறகும் இது நடைபெறுவதற்குக் காரணம், இந்தச் சமூகம் எந்த மாற்றமுமின்றி இப்போதும் அவர் வாழ்ந்த காலம்போலவே இருக்கிறது என்பதால்தான்.

அவருக்குக் காவி உடை அணிவித்து நெற்றியில் திருநீறும் பொட்டும் வைத்து, கும்பகோணம் பகுதி முழுக்க சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். அவருக்குச் செருப்பு மாலை போடுவதுதான் நம் சமூகத்தின் வழக்கம். அம்பேத்கரைப் பொறுத்தவரை, இவை இரண்டும் ஒரே தரமான செயல்கள்தாம்.

“பிறக்கும்போது இந்துவாகப் பிறந்துவிட்டேன். சாகும்போது நான் நிச்சயமாக இந்துவாகச் சாகமாட்டேன்,” என 1935இல் பிரகடனம் செய்த அவர், பட்டியலின மக்கள் பத்து லட்சம் பேருடன், அவர் இறப்புக்கு இரண்டு மாதங்களுக்குமுன் 1956 அக்டோபர் 14 அன்று புத்த மதத்தைத் தழுவினார்.

அவருக்கு நெற்றியில் விபூதிப்பட்டை சாற்றுவது வரலாற்று அறிவற்ற செயலாகத்தான் இருக்க முடியும். சங் பரிவாரங்களின் பட்டியலில் கடைக்குட்டியாகச் சேர்ந்த ஒரு சுண்டான் குறுங்குழு, ஆண்டுதோறும் அவருடைய சிலைக்கோ படத்துக்கோ இப்படி ஏதாவது செய்து அவரைக் ‘காவித் தலைவன்’ ஆக்கும் ஆசையை வெளிப்படுத்திவருகிறது.

வரலாற்றிலிருந்து இன்னும் சிலவற்றை இங்கே நினைவுபடுத்தலாம். 1923 மே மாதம் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில், தீண்டாமை குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது: ‘தீண்டத்தகாதவர்களின் பிரச்சினை, குறிப்பாக இந்துச் சமுதாயம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் இந்துச் சமுதாயத்தினரிடையே இருந்து இத்தீமையை அகற்றும் கடும் முயற்சிகளை மேற்கொள்ளவும் இந்த விஷயத்தைத் தன் பொறுப்பில் ஏற்றுக்கொள்ளவும் அகில இந்திய இந்து மகாசபையை அது கேட்டுக்கொள்கிறது’ எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தத் தீர்மானம் பற்றி அம்பேத்கர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்: ‘இப்பிரச்சினையை இந்து மகாசபையிடம் ஒப்படைத்ததன் மூலம், அது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியிருக்க வேண்டியதில்லை. தீண்டத்தகாதவர்களின் மேம்பாடு குறித்த பணியை மேற்கொள்வதற்கு, இந்து மகாசபையைவிட சற்றும் பொருத்தமற்ற ஓர் அமைப்பு வேறெதுவும் இருக்க முடியாது.

அது ஒரு தீவிரவாத இந்து அமைப்பாகும். மதரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் இந்து மதத்தின் எல்லா அம்சங்களையும் எல்லா வழிகளிலும் பேணிக் காப்பதே அதன் நோக்கமும் குறிக்கோளுமாகும். அது சமூகச் சீர்திருத்த சங்கமல்ல; அது ஓர் அப்பழுக்கற்ற அரசியல் அமைப்பு. அதன் பிரதான குறிக்கோளும் நோக்கமும் இந்திய அரசியலில் முஸ்லிம்களின் செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதே ஆகும். தனது அரசியல் வலிமையைப் பேணிக் காப்பதற்காக அது தனது சமூக ஒருமைப்பாட்டைப் பராமரிக்க விரும்புகிறது.

சமூக ஒருமைப்பாட்டைப் பராமரிக்கும் அதன் வழிமுறை சாதி அல்லது தீண்டாமையைப் பற்றிப் பேசாதிருப்பதே ஆகும். தீண்டத்தகாதவர்கள் சார்ந்த பணியை மேற்கொள்வதற்காக இத்தகைய ஓர் அமைப்பைக் காங்கிரஸ் எவ்வாறு தேர்வுசெய்தது என்பது எனது புலன்களுக்கு எட்டாத ஒன்றாக இருக்கிறது’. (‘காந்தியும் காங்கிரசும் தீண்டாதோருக்குச் செய்தது என்ன?’ நூலிலிருந்து)

இந்து மதத்தையும் அம்பேத்கர் நிராகரித்தார்; சங் பரிவாரங்களின் முன்னோடி அமைப்பான இந்து மகாசபையையும் அவர் நிர்தாட்சண்யமாக நிராகரித்தார். 1925இல் ஆர்எஸ்எஸ் தொடங்கப்படுவதற்கு முன், ‘இந்துத்துவ அரசியலை’ முன்னெடுத்த அமைப்பு இந்து மகாசபை என்பது வரலாறு. இந்த வரலற்றை மறைத்து அவரைப் புகழ்ந்துரைத்தாலும் மணிமண்டபங்களைத் திறந்தாலும் அம்பேத்கர் இவர்களின் பிடிகளுக்குள் ஒருபோதும் சிக்கமாட்டார். வாழ்ந்த காலம் முழுவதும் அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் மட்டுமே தின்று செரித்து வாழ்ந்தவர் அம்பேத்கர்.

தான் சந்தித்த அவமானங்களை, ‘Waiting For a Visa’ என்கிற தன்வரலாற்றுச் சிறு நூலில் அம்பேத்கர் பட்டியலிட்டிருப்பார். இந்துக்கள்தாம் தீண்டாமை பாராட்டுவார்கள்; பார்ஸிக்கள் அப்படி அல்ல என நம்பி பரோடாவில் பார்ஸிக்களின் சத்திரம் ஒன்றில் தங்கியிருப்பார். அதைக் கேள்விப்பட்ட பார்ஸிக்கள் சிலர், கைகளில் தடிகளுடன் வந்து அன்றே சத்திரத்தைக் காலிசெய்ய நெருக்கடி கொடுத்தனர். ‘உன்னால் எங்கள் சத்திரமே தீட்டாகிவிட்டது’ எனக் கூச்சலிட்டனர். பகல் முழுக்க ஒரு பூங்காவில் இருந்துவிட்டு அன்றிரவே பம்பாய்க்கு ரயில் ஏறினார் அம்பேத்கர்.

‘அந்த நிகழ்வைப் பற்றி எப்போது நினைத்தாலும் என் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடுவதை என்னால் தடுக்க முடியவில்லை’ எனத் தனது நினைவலைகளில் அம்பேத்கர் எழுதுகிறார். அமெரிக்காவிலும் லண்டனிலும் படித்த பாரிஸ்டரான அவர், குடிநீருக்காகவும் குடியிருப்புக்காகவும் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமா? அம்பேத்கருக்கு நிகழ்ந்த அவமானம் இன்றைக்கும் நம் ஊர்களில் பட்டியலின சகோதர, சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. நாம் ஒரு நாகரிகமான சமூகமாக மாறுவதுதான் எப்போது? - ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர், பண்பாட்டுச் செயல்பாட்டாளர் தொடர்புக்கு: tamizh53@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in