

வளைகுடா நாடுகளின் மன்னர்களும் ஆட்சியாளர்களும் கத்தார் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை உற்சாகத்துடன் ரசிக்கின்றனர். ஆனாலும், கத்தாரை நினைத்து உள்ளுக்குள் ஒருவிதப் பதற்றத்திலேயே உள்ளனர்.
காரணம் என்ன? - கால்பந்து வரலாற்றில் குர்-ஆன் வசனங்கள் வழியாக நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது இதுவே முதல் முறை. ஹோட்டல் அறைகளிலும் பொதுவெளியிலும் இஸ்லாத்தின் போதனைகள், நபிகளார் பொன்மொழிகள் இடம்பெற்றிருப்பது, மசூதிகளில் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது போன்ற ஏற்பாடுகள் கத்தார் மீது கால்பந்து தாண்டிய கவனத்தைக் குவித்திருக்கிறது.
இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் உலகெங்கும் கட்டமைக்கப்பட்டது. இதனால், இஸ்லாத்துக்கும் பயங்கரவாதச் செயலுக்கும் தொடர்பில்லை என நிரூபிக்க இஸ்லாமிய நாடுகள் முனைகின்றன. அதன் ஓர் அங்கமாக கத்தாரின் நடவடிக்கையும் பார்க்கப்படுகிறது.
நட்புக்கரம் நீட்ட இஸ்ரேல் விரும்பினாலும் அந்நாடு தொடர்பான எந்த வாசகமும் உலகக் கோப்பைப் போட்டிகளின்போது இடம்பெறாமல் பார்த்துக்கொள்கிறது கத்தார் அரசு. மற்றபடி, பொது இடங்களில் பாலஸ்தீன ஆதரவுப் பதாகைகள், கோஷங்கள் எழுப்பப்படுவது வேறு விஷயம். வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகள் கருத்தரங்கம் - கருத்துருவாக்கம் உள்ளிட்ட பல விஷயங்களுக்கான மாநாடுகள் கத்தாரில் அடிக்கடி நடைபெறும்.
பிற நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவது, தீவிரவாதிகளுக்கு உதவுவது, வளைகுடாவில் நாட்டாண்மை செய்வது போன்ற விமர்சனங்களும் கத்தார் மீது உண்டு. ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறுவது அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் சவாலாக இருந்தது. கத்தார் தான் அதற்கான ஏற்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தது. மனிதநேயப் பணிகளுக்கு ஐநாவுக்கு உதவுவதிலும் கத்தாரின் பங்கு முக்கியமானது.
கத்தார் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘அல் ஜஸீரா’ தொலைக்காட்சி அலைவரிசை சர்வதேச முக்கியத்துவம் கொண்டது. ஒருகாலத்தில் பின்லேடனின் காணொளிகளை ஒளிபரப்பியது, ஆப்கானிஸ்தான் போர்ச் செய்திகளை வெளியிட்டது என அதன் செயல்பாடுகள் அமெரிக்காவை அதிருப்திக்கு உள்ளாக்கின.
ஆனால், அமெரிக்காவின் படைத்தளம் கத்தாரில் உண்டு. வளைகுடா நாடுகளும் அவ்வப்போது அல் ஜஸீராவுக்குத் தடைவிதிக்கும். ஐந்தாண்டுகளுக்கு முன் வளைகுடா நாடுகளெல்லாம் ஒன்றிணைந்து கத்தார் மீது பொருளாதாரத் தடைவிதித்தன. இந்தியா, ஓமன், ஈரான், துருக்கி போன்ற நாடுகளின் உதவியுடன் பொருளாதாரக் கட்டமைப்பைக் கத்தார் உருவாக்கிக்கொண்ட நிலையில், தடை விலக்கப்பட்டது.
எந்த ஒரு கருத்தையும் அரபுலகத்தைத் தாண்டி உலக அளவில் கொண்டுசெல்லும் வல்லமை கத்தாருக்கு உண்டு. வல்லரசு நாடுகளும் அக்குரலை மதிக்கின்றன. இந்தச் சூழலில், சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் வகையில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நடத்திவருவது, கத்தார் குறித்த கவலையை அரபு நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை! - புதுமடம் ஜாபர் அலி, தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com