அஞ்சலி: மனோகர் தேவதாஸ் | பார்வையிழத்தலும் பார்த்தலும்!

அஞ்சலி: மனோகர் தேவதாஸ் | பார்வையிழத்தலும் பார்த்தலும்!
Updated on
3 min read

“மதுரை கோரிப்பாளையத்தின் மேற்கு எல்லையில் ஒரு வீட்டில் நாங்கள் இருந்தோம். வீட்டிலிருந்து சற்றுத் தொலைவிலிருந்த வாய்க்கால் செல்லூர்க் கண்மாயிலிருந்து வரும் உபரி நீரைத் தாங்கிவரும். நான் சிறுவனாக இருந்தபோது அதில் வாத்துகள் மேயும் அளவுக்குத் தண்ணீர் தூய்மையாக இருக்கும்; தவளைகள், மீன்களைக்கூடப் பார்த்திருக்கிறேன். வாய்க்காலுக்கு அடுத்த வயக்காடுகளில் வரிசையாக ஆங்காங்கே தென்னை மரங்கள். அந்த வயக்காடு தாண்டியதும் அலங்காநல்லூர் ரோடு. அதற்கு அப்பால் செல்லூர்க் கண்மாய். மற்றொரு பக்கம் ரயில்வே ட்ராக் வளைந்து மேற்காகச் செல்லும். அதற்கும் அப்பால் மேற்கு மலைத் தொடரை நீங்கள் பார்க்க முடியும். டிசம்பரில் சூரிய அஸ்தமனம் ஓர் அற்புதம். சிறு வயதில் அவ்வளவு அழகான காட்சிகளோடுதான் நான் வளர்ந்தேன்!” — இந்த விவரிப்பை நீங்கள் மனோகர் தேவதாஸின் சொற்களில் கேட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்கு முந்தைய ‘பார்வை’யை, பார்வையிழத்தலுக்குப் பிறகு, திகைக்கச் செய்யும் துல்லியத்துடன் அவர் விவரிப்பது ஒரு சொல் ஓவியம்.

ஒளி இழக்கும் ஓவியனின் கண்கள் இருளில் எதைப் பார்க்கின்றன? அதுவரை அவன் பார்த்த ஒளியின் பிரதிபலிப்பையா, அது உருவாக்கிய நினைவுகளையா? பார்வையிழக்கும் ஓவியன், கைகளால் அல்லாமல் நினைவுகளால் மனக்குகையில் வரையத் தொடங்குகிறான். ஆதி மனிதன் பாறைகளில் தீட்டிய ஓவியங்களைப் போல், மனக்குகையின் பாறைகளில் அவன் வரையும் ஓவியங்கள் முடிவற்ற காலத்துக்கு நித்தியத்துவம் அளித்துவிடுகின்றன. ஓவியனின் மனக்கூடத்தில் நிற்கும் அவை, பார்வையாளனுக்குக் காட்சிப் படுத்தப்படுவதில்லை.

ஒளியின் கடைசிக் கீற்று கண்களை ஊடுருவிய அந்த நொடியில், பார்வை இழத்தலுக்குப் பிறகான வாழ்வுக்குத் தன் நினைவுகளால் ஆன பிரபஞ்சம் ஒன்றைக் கட்டத் தொடங்கிய மனோகர் தேவதாஸ், மனத்தில் மஹிமாவின் ஒளியை ஏந்தியிருந்தார். பார்த்தலுக்கு நினைவின் துணை தேவையில்லை; பார்வையிழத்தலுக்குத் துணை நினைவு மட்டுமே என்கிற நிலையில், மஹிமாவின் நினைவுகளால் நிறைந்திருந்த மனோகர், அவருக்குப் பிடித்த டிசம்பர் மாத அதிகாலை ஒன்றில் மஹிமாவின் ஒளியுடன் கலந்துவிட்டார்.

1936 செப்டம்பர் 10 அன்று மதுரையில் பிறந்த மனோகர் தேவதாஸ், சிறு வயதிலிருந்தே கோட்டுச் சித்திரங்கள் வரைவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். கல்லூரிக் காலம்தொட்டு மதுரையின் கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், சிற்பங்கள், வீதிகள், வீடுகள் ஆகியவற்றை வரைந்துவந்தார். அமெரிக்கன் கல்லூரியில் வேதியியலில் பட்டம்பெற்ற மனோகர், 1956இல் சென்னையில் குடியேறி தன் படிப்பு சார்ந்த தொழிலில் சேர்ந்தார். ‘சர்வ வல்லமை படைத்த தேவன்’, மஹிமாவை அவர் ‘கைகளில் ஒப்படைக்க’, மிகச் சிறந்த காதல் அத்தியாயத்தை இருவரும் இணைந்து எழுதத் தொடங்கினர். இக்காலகட்டத்தில் வேதியியலில் மேற்படிப்புக்காக அமெரிக்காவின் ஓபர்லின் பல்கலைக்கழகத்தில் 1969இல் சேர்ந்த மனோகர், மஹிமாவையும் உடனழைத்துச் சென்றார். தங்கள் வாழ்வின் மிகச் சிறந்த நாட்களாக மனோகர் குறிப்பிட்டது அமெரிக்காவிலிருந்த 1970-72 காலகட்டத்தைத்தான்.

முன்னதாக, மனோகரின் விழித்திரை ‘ரெடினிடிஸ் பிக்மென்டோசா’ என்ற குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. சிறிதுசிறிதாகக் குறைந்து, இறுதியில் முற்றிலும் பார்வையைப் பறித்துவிடும் அபாயத்தை மனோ எதிர்கொண்டிருந்தார். எனினும், மனம்தளராது ஓவியங்கள் வரையத் தொடங்கினார்; மஹிமா அவருக்குத் துணையிருந்தார். ஓவியங்களை வாழ்த்து அட்டைகளாக விற்றுக் கிடைத்த நிதி முழுவதையும் தொண்டுக்கு அளித்தனர். வாழ்வு நிலைபெற்று நீண்டுகொண்டிருந்தபோதுதான் அந்தக் கொடூரம் அரங்கேறியது.

மனோ-மஹியின் ஒன்பதாவது திருமண ஆண்டான 1972 டிசம்பர் 30 அன்று நிகழ்ந்த சாலை விபத்து, அவர்கள் வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. மனோகர் பெரிய காயங்களுடன் தப்பிக்க, மஹிமாவின் கழுத்துக்குக் கீழுள்ள உறுப்புகள் செயலிழந்துவிட்டன. மஹிமா சக்கர நாற்காலியிலேயே மீதி வாழ்நாளைக் கழிக்க நேர்ந்தது. ஏற்றுக்கொள்ளவே முடியாத நிலைதான் எனினும் மனவலிமையால் அதை எதிர்கொண்டு வாழ்வை எப்போதும்போல் தொடர்ந்தனர். இருவரின் கலைவாழ்வும் தீவிரம்பெறத் தொடங்கின. தங்கள் நிலையால் வருந்தாது உடலும் உணர்வும் கலந்துநின்றனர். கோடுகளைப் போலவே எழுத்தையும் கைக்கொண்ட மனோகரின் மிகச் சிறந்த வாழ்வனுபவப் பதிவுகளாக ‘Green Well Years’ (1997), ‘A Poem to Courage: Dreams, Seasons & Promises’ (2002), ‘எனது மதுரை நினைவுகள்’ (2008) ஆகிய நூல்கள் அமைந்தன; மதுரையைக் கோடுகளுக்குள் அடக்கிய ‘Multiple Facets of My Maudrai’ (2007) மனோகரின் மிகப் புகழ்பெற்ற சித்திர நூலாகும். 2020இல் அவருக்கு பத்ம  விருது அறிவிக்கப்பட்டது. 2021இல் குடியரசுத் தலைவரிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்டபோது, ‘இது என் முதல் விருது’ என மகிழ்ச்சியுடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
பெருவாழ்வு வாழ்ந்து நிறைந்திருக்கும் மனோகர் தேவதாஸின் வாழ்க்கை, என்னை காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் சொற்களில் கொண்டு நிறுத்துகிறது: “வாழ்க்கையில் முக்கியமானது, உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதல்ல - நீங்கள் எதை நினைவில் கொள்கிறீர்கள், எப்படி நினைவில் கொள்கிறீர்கள் என்பதுதான்.”

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in