டிசம்பர் 11: பாரதி 140ஆவது பிறந்த நாள் | வ.ரா. கண்ட மகாகவி

மகாகவி பாரதியார் | ஓவியம்: ஆதிமூலம்
மகாகவி பாரதியார் | ஓவியம்: ஆதிமூலம்
Updated on
3 min read

தமிழ்ப் புலமனைத்திலும் தன்னெழுச்சியுடன் ஒருவரின் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒவ்வோர் ஆண்டும் நினைவுகொள்ளப்பட்டுக் கொண்டாடப்படுகிறதென்றால் அது மகாகவி பாரதிக்கு மட்டும்தான். ஒரு சிற்றுரையைத் தயாரிப்பவர்கூடத் தமிழ்மொழிச் சிறப்பினைக் கூறுவதாகவோ, பெண்ணுரிமை பற்றியதாகவோ, பக்தியுணர்வினை ஊட்டுவதாகவோ, தேசியம் பற்றியதாகவோ, சமத்துவம் பற்றியதாகவோ எதுவாக இருப்பினும் பாரதியின் மேற்கோள்களைத் தவிர்ப்பதில்லை. தமிழ் நெடுங்கணக்கில் வேறு எவருக்கும் இல்லாத தனிச் சிறப்புகள் பாரதிக்கு உண்டு.

பாரதி மகாகவியா?: இன்று பாரதியை வானளாவப் புகழ்வது நமது பாரம்பரியத்தின்பாற்பட்ட எளிய செயலாகிவிட்டது. ஆனால், பாரதியைப் பரவலாக அறியத் தொடங்கியிருந்த காலத்தில் அவரை ‘மகாகவி’ என்று கூறியபோது எதிர்ப்பும் சர்ச்சைகளும் எழுந்தன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். வ.ரா. என்றழைக்கப்படும் வ.ராமஸ்வாமிதான் முதன்முதலாக பாரதியை மகாகவி என்றழைத்தார். ஜனரஞ்சகமான எழுத்தின் முன்னோடியாகக் கருதப்படும் கல்கி, வ.ரா.வின் கூற்றினை எதிர்த்தார். வேறு பலரும் அவர் அணியில் கூடினர். பாரதி நல்ல கவிஞர்தானேயொழிய மகாகவி அல்ல என்பதைத் தங்களுக்கே உரிய புரிதல்களுடன் வ.ரா.வுடன் சமர் புரிந்தனர். மரக்காலால் மகாநதியை அளந்துவிட முடியாதல்லவா? வ.ரா. தனது புலமைமிக்க வாதங்களுடன் அவர்களை எதிர்கொண்டார். கம்பனைப் போல் இளங்கோவைப் போல் பாரதியும் ஒரு மகாகவி என்பது இறுதியில் முடிவானது. பாரதி மணிமண்டபத்தை எட்டயபுரத்தில் கட்டுவதற்கு கல்கி உறுதுணையாக விளங்கினார் என்பதும் இதனையொட்டிய ஒரு சிறப்புச் செய்தியாகும்.

வ.ரா.
வ.ரா.

பாரதியும் வ.ரா.வும்: வ.ராமஸ்வாமி 7 செப்டம்பர் 1889இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் திங்களூரில் பிறந்தார். மாணவப் பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டார். கல்லூரியில் படித்தபோது ‘வந்தே மாதரம்’ கோஷம் எழுப்பியதற்காக அபராதம் செலுத்தினார். தனது கல்விக்காகப் பொருளுதவி புரிந்த கொடியாலம் ரங்கசாமியின் விருப்பத்திற்கிணங்க அரவிந்தரைச் சந்திக்க 1911இல் புதுச்சேரி சென்றார். பாரதியைப் போல் அரவிந்தரும் பிரிட்டிஷ் இந்திய ஆட்சியை எதிர்த்ததால் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்திருந்தார். பாரதியைப் பற்றி வ.ரா.வுக்கு அப்போது அதிகம் தெரியாது. பாரதியுடன் அவர் தங்க நேரிட்டது. முப்பத்தியொரு மாதங்கள் அவருடன் நெருங்கிப் பழகிவிட்டுச் சென்னை திரும்பினார். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதற்காக அவர் அலிப்பூரில் ஆறு மாதங்கள் சிறைவைக்கப்பட்டார். ‘மணிக்கொடி’ சிற்றிதழை நண்பர்களுடன் தொடங்கினார். சமூகச் சீர்திருத்த நாவல்கள், சிறுகதைகள் எழுதினார். அவரது உரைநடை மிகவும் பாராட்டைப்பெற்றது.23 ஆகஸ்ட் 1951இல் தனது 62ஆம் வயதில் அவர் காலமானார். அவர் பல நூல்களை எழுதியிருந்தாலும் பாரதியைப் பற்றிய அவரது வாழ்க்கை வரலாற்று நூலான ‘மகாகவி பாரதியார்’ அவற்றில் மிகவும் சிறப்பானது. அது மட்டுமல்லாது பிற பாரதி வாழ்க்கை வரலாற்று நூல்கள் எட்டவியலாத சிகரமாகவும் அது அமைந்துள்ளது.

பாரதியுடனான தனது நெருக்கத்தை முற்றாக ரசித்து அக்கணங்களை உயிரோட்டத்துடன் படைத்ததுதான் அதன் தனிச்சிறப்பு. பாரதியின் ஒவ்வொரு அசைவினையும் பார்த்து உள்வாங்கி அசைபோட்டு ரசித்தார் வ.ரா. பாரதி நின்றால் அழகு.. நடந்தால் அழகு.. உண்டால் அழகு.. உடுத்தினால் அழகு.. பாடினால் அழகு என அவரது அனைத்து நடவடிக்கைகளிலும் பாரதியின் கம்பீரத்தைக் கண்டார் வ.ரா.

பாரதியின் இயல்புகள்: அன்றாட வாழ்வில் பாரதி எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை வ.ரா. பதிவுசெய்துள்ளார். அவை ஒவ்வொன்றிலும் பாரதியின் மேதைமை வெளிப்படுகிறது. ஒரு சமயம் பாரதிக்கு ஒரு சிறு தொகை தேவைப்பட்டது. அதற்காக அவரது நண்பருக்குக் கடிதம் அனுப்புகிறார். நண்பர் பணம் தராதது மட்டுமின்றி, பாரதியின் ஏழ்மையைப் போக்கினால் அவரது கவித்திறன் போய்விடும் என்றும் கருத்து தெரிவிக்கிறார். பாரதி அவர் மீது ஆத்திரத்துடன் பாய்கிறார்: ‘ஓய்! அளப்பை நிறுத்தும். உம்முடைய மனப்பான்மையைச் சீர்திருத்த முடியாது. அதை அடியோடு தலைகுப்புற அடிக்கும் புரட்சித் தத்துவம் இந்த நாட்டுக்குத் தேவை’. வறுமைக்கும் புலமைக்கும் போடப்பட்டுள்ள இறுக்கமான முடிச்சை பாரதி அறுத்தெறிகிறார். பாரதியின் தாக்கம்பெற்ற வ.ரா.வும் தரித்திரத்தை வழிபடும் நமது பாரம்பரிய வழக்கத்தைக் கடுமையாகச் சாடுகிறார். அதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை என்கிறார். ‘செல்வ நாகரிகத்தையும் சுகபோகக் கருவிகளையும் இந்த நாட்டுக்குக் கொண்டுவந்ததும் நமது பண்டைய எளிமை வாழ்க்கையும் விரக்தியும் எங்கேயோ பறந்து போய்விட்டன’ என்பதை அதற்குச் சான்றாகக் காட்டுகிறார். பாரதி விரக்தி மனம் படைத்த வேதாந்தி அல்ல என்கிறார். அரவிந்தருடன் நட்பு பாராட்டி நெருங்கிப் பழகிய பாரதி, அரவிந்தர் அரசியலை விடுத்து வேதாந்தியாக மாறியவுடன் அவருடன் தொடர்புகொள்வதையே நிறுத்திவிட்டதையும் வ.ரா. சுட்டிக் காட்டுகிறார். பாரதி கவிதை எழுதும்போது எவ்வாறு தோன்றுவார் என்பதையும் எழுதியுள்ளார். ‘கவிதை பிறக்குந் தருணத்தில் காட்சியளிக்கும் பாரதியாரின் ஜோதி முகத்தைத் தமிழர்களில் ஆயிரம் பேர் பார்த்திருந்தாலும் போதுமே! நம் நாடு நிச்சயமாய் இதற்குள் கடைத்தேறி இருக்குமே?’ என்று தன் ஆதங்கத்தை வ.ரா. வெளிப்படுத்துகிறார்.

பாரதி-காந்தி சந்திப்பு: பட்டியல் வகுப்பைச் சேர்ந்த கனகலிங்கத்திற்கு பாரதி பூணூல் போட்டதையும் காந்தியுடனான அவரது சந்திப்பையும் அருகிலிருந்து வ.ரா. பார்த்திருக்கிறார். முன்னதற்கான காரணத்தை பாரதி விளக்கிய பிறகும் அதை முழு மனதாக வ.ரா. ஏற்கவில்லை. காந்தியிடம் பாரதியைச் சரிவர அறிமுகப்படுத்தவில்லை என்பதற்காக அங்கிருந்த ராஜாஜி, சத்தியமூர்த்தி ஆகியோர்மீது அவர் கோபம் கொண்டதும் நூலில் பதிவாகியுள்ளது.

வ.ரா., பாரதியை அளவுக்கு அதிகமாக நேசித்தார். ஆனால்,வழிபடவில்லை. தமிழில் எழுதப்படும் வாழ்க்கை வரலாற்றுநூல்களை எழுதும் அவர்களது அபிமானிகள், தங்கள் நாயகர்களைத் தொழுகிறார்கள். வ.ரா. பாரதியின் ஒவ்வாமைகளை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகிறார். தான் அவருடன் கொண்ட கருத்து வேற்றுமைகளைப் பதிவுசெய்கிறார். மானுட இயல்புகள் வழியாகப் பார்க்கப்படுவதால்தான் ‘மகாகவி பாரதியார்’ யதார்த்தமான வாழ்க்கை வரலாற்று நூலாக உள்ளது.

‘மகாகவி பாரதியார்’ சிற்சில காரணங்களால் ஒரு முழுமையான வாழ்க்கை வரலாற்று நூலாகவில்லை. ஆனால், வ.ரா.வின்நூலைப் படிக்காமல் பாரதியை எவராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in