

சார்லி சாப்ளின் ‘த கிட்’ முழு நீளத் திரைப்படத்துக்குப் பிறகு குறுகிய காலகட்டத்தில் எடுத்த இரண்டு ரீல் படம் ‘பே டே’. பிரிட்டிஷ் உலகை ஆண்ட காலகட்டத்திய இங்கிலாந்தின் தினசரிப் பாட்டை ஒரு கட்டிடத் தொழிலாளியின் ஒரு நாளைச் சாரமாகக் கொண்டு சொன்ன படம் இது.
சார்லி சாப்ளின் கட்டிடத் தொழிலாளி, குடிகாரன், மனைவிக்குப் பயப்படும் கணவன் ஆகிய மூன்று நிலைகளில் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். கட்டிடத் தொழிலாளியாக அவர் கண்காணிப்பாளரிடம் படும்பாட்டை நகைச்சுவைக் காட்சிகளாக மாற்றியிருப்பார். கூடுதல் நேரம் வேலை பார்த்ததற்கான கூலி அவருக்குக் கிடைக்காமல் போகும். அதைக் கேட்டுப் போனால் நல்ல பூசை கிடைக்கும். வெளியே வந்தால் மனைவி சம்பளக் காசை வாங்கக் காத்திருப்பார். கொஞ்சம் காசை எப்படியோ ஏமாற்றிக் கொண்டுபோய் சம்பள நாளைக் குடித்துக் கொண்டாடுவார். அங்கிருந்து பேருந்தைப் பிடிக்க சாப்ளின் முயலும் காட்சிகளில் அவரது தனித்துவமான சேட்டைகள் வாய்விட்டுச் சிரிக்கவைக்கின்றன. மக்கள்தொகை குறைவாக இருந்த இங்கிலாந்தில் பேருந்தில் மக்கள் இடித்துப் பிடித்து நிற்கக்கூட இடமில்லாமல் பொதிகளைப் போல் ஏறுவது அதிசயம்தான். வீடு போய்ச் சேர்வதற்குள் மறுநாள் காலை 5 மணி ஆகிவிடும். வீட்டுக்குச் சென்றால், மனைவி பூரிக்கட்டையைப் பிடித்தபடி தூங்கிக்கொண்டிருப்பார். இந்தப் படத்தில் இரவுக் காட்சிகள், மழைக் காட்சிகள் திறம்படக் கையாளப்பட்டிருக்கும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படத்தின் தயாரிப்பு இப்போது பார்த்தாலும் மெச்சத்தகுந்த வகையில் உள்ளது.