

தமிழகப் பள்ளிக் கல்வித் துறை முன்னெடுத்திருக்கும் சில புதிய முயற்சிகள் நம்பிக்கையளிக்கின்றன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான களப்பயிற்சி அவற்றில் ஒன்று. தொழில் துறைக்கும் கற்றல் உலகத்துக்கும் இடையே ஒரு பாலம் அமைப்பதே இந்த உள்ளுறைப் பயிற்சியின் நோக்கம் என்கிறது அரசு. இதுவரை நடந்திருக்கும் பயிற்சிகளும் அதை உறுதிப்படுத்துகின்றன.
திறன் வளர்க்கும் பயிற்சி: பாடப்புத்தகங்களில் படித்தவற்றை நடைமுறையில் பொருத்திப் பார்ப்பதும் செய்து பார்ப்பதும் உள்ளுறைப் பயிற்சியின் அடிப்படை அம்சங்கள். வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல் படிக்கும் மாணவர்களுக்கெனப் பள்ளிகளில் பரிசோதனைக் கூடங்கள் உண்டு. ஆனால், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான பரிசோதனைக் கூடங்களாகத் தொழில் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. ஆகவே, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அப்படியானதொரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியின் மூலமாகத் தங்கள் துறையில் என்ன நடக்கிறது என்பதை நேரடிக் கள அனுபவம் மூலமாக அவர்கள் அறிந்துகொண்டனர். இப்படியான உள்ளுறைப் பயிற்சிகள் அவர்களின் துறை குறித்த கூடுதல் புரிதலை உருவாக்கும். இதுவரை பள்ளியைத் தாண்டிச் சென்றிடாத மாணவர்கள், வெளியே சென்று இத்தகைய உள்ளுறைப் பயிற்சியில் ஈடுபடும்போது அவர்களுடைய தொடர்பாடல் திறன், இணையத் தொடர்புத் திறன், குழுவாகப் பணியாற்றும் திறன், சிக்கல்களை எளிதில் தீர்க்கும் திறன் போன்றவை வளர்கின்றன.
அனைத்தையும்விட முக்கியமாக, தங்கள் தொழில் சார்ந்து முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய திறனை மாணவர்கள் இதன்மூலம் பெறுகின்றனர். மேலும் புதிய மனிதர்கள், புதிய களம், புதிய சந்திப்புகள், புதிய விஷயங்களைக் கற்றல் என ஒரு பெரும் திறப்பு அவர்களுக்குக் கிடைக்கிறது. தொழில் துறை வல்லுநர்களைச் சந்திப்பதுடன், அவர்களின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் மாணவர்கள் பெறுகின்றனர்.
அவர்கள் மூலம் எங்கெங்கே வேலைவாய்ப்பு உள்ளது என்று கண்டறியும் வாய்ப்பும் கிடைக்கிறது. பாடத்திட்டத்தைத் தாண்டி, உள்ளுறைப் பயிற்சியைச் சிறப்பாக முடிக்க அனுபவமிக்க வல்லுநர்கள் மாணவர்களை ஊக்குவிக்கின்றனர். மொத்தத்தில், தொழில்முனைவோராக மாறுவதற்கான மனநிலையை மாணவர்களிடையே உள்ளுறைப் பயிற்சி முன்கூட்டியே உருவாக்கிவிடுகிறது.
பல மணி நேரப் பயிற்சி: தமிழ்நாட்டில் தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படும் 696 அரசுப் பள்ளிகளில் 470 பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி மாணவர்கள், உள்ளுறைப் பயிற்சிக்கு இந்தக் காலாண்டில் சென்றுள்ளனர். 9,180 மாணவர்கள் வெற்றிகரமாக உள்ளுறைப் பயிற்சியை முடித்திருக்கின்றனர். அக்டோபர் 31 முதல் நவம்பர் 30 வரை நடந்த இந்தப் பயிற்சியில் மாணவர்கள் ஒவ்வொருவரும் 40 மணி நேரப் பயிற்சியை முடித்தார்கள். கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருநள்ளாறு அருகில் உள்ள மாதூர் வேளாண் அறிவியல் நிலையம், தர்மபுரி அரசு விதைப் பண்ணை, அரூர் தண்டக்குப்பம் வனவியல் விரிவாக்க மையம், போளூர் வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் மாணவர்களுக்கு உள்ளுறைப் பயிற்சி நடைபெற்றது.
கடந்த மே மாதமும் இது போன்றதொரு பயிற்சிக்கு, தமிழகம் முழுவதும் உள்ள 24 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். வேளாண் அறிவியல், அடிப்படை இயந்திரப் பொறியியல், அடிப்படை மின்பொறியியல், அடிப்படை மின்னணுப் பொறியியல், நெசவு - ஆடை வடிவமைப்பு போன்ற துறைகளில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பெற்றனர். ஒவ்வொருவருக்கும் 80 மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட்டது.
அவர்கள் பயிலும் பள்ளிக்கு அருகில் உள்ள குறு, சிறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகளே இதற்காகத் தேர்வுசெய்யப்பட்டன. பெற்றோர் அல்லது காப்பாளரின் அனுமதி பெற்று, தலைமையாசிரியரின் ஆதரவோடு மாணவர்கள் களமிறக்கப்பட்டனர். இந்தப் பயிற்சி மூலம் மாணவர்கள் பெறவிருக்கும் பலன்கள் குறித்தும் பயிற்சியின் இறுதியில் வழங்கப்படும் சான்றிதழ்களின் முக்கியத்துவம் குறித்தும் முன்னதாக விளக்கப்பட்டது.
வகுப்பறைக்கு வெளியே… வேளாண் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறையை மிக எளிதாகக் கற்றுக்கொண்டனர். உரத்துக்குக் கலவை எப்படித் தயாரிக்க வேண்டும் எனச் செய்துபார்த்துக் கற்றுக்கொண்டு, 200 பைகளில் இயற்கை உரங்களை உருவாக்கினர். இந்தப் பைகளில் எவ்வாறு செடிகளை நட்டு வைத்து வளர்ப்பது என்றும் கற்றுக்கொண்டனர்.
இதேபோல, ஒவ்வொரு துறையில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களும் கள அனுபவங்களை நேரடியாகப் பெற்றனர். குறுகிய காலத்துக்குள் முடித்துவிடக்கூடிய திட்டங்களில் பங்கேற்றுத் தங்கள் வகுப்பறையில் கற்ற விஷயங்களை நடைமுறையில் செய்துபார்த்து மகிழ்ந்தனர். ஒட்டுமொத்தப் பயிற்சியையும் தொழில்முறைப் பயிற்றுநர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று நடத்தினர்.
“விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். என் தந்தை வயலில் வேலை செய்வதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஆகவே, எனக்கு வேளாண்மை பற்றிக் கொஞ்சம் தெரியும். அந்த அனுபவத்துடன் பள்ளிப் பாடங்களில் படித்ததை, இந்தப் பயிற்சியின்போது நேரடியாகவே செய்துபார்த்தது சுவாரசியமாக இருந்தது. எட்டு நாட்கள் இந்தப் பயிற்சி கிடைத்தது.
பல நிபுணர்களிடம் நிறைய நுட்பங்களைக் கற்றுக்கொண்டோம். நர்சரி, உரக்கடை, விவசாய நிலங்களுக்கெல்லாம் சென்று, படித்தவற்றைச் செய்துபார்த்தோம். புத்தகத்தில் படித்ததைவிட நண்பர்களோடு ஒன்றை நாமே செய்ய முயல்வது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை நம் வீட்டில் செய்யும் விவசாயத்திலும் முயலலாமே என்கிற எண்ணமும் வந்தது.
இயற்கை உரங்கள் தயாரிப்பது எப்படி, எந்தெந்த உரங்களை எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும், எந்தப் பயிருக்கு எது தேவை என்பன போன்ற பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அதுபோலவே நர்சரிக்களில் உள்ள செடிகள், அவற்றை வளர்க்கும் முறைகள், பதியன் போடும் முறை எனப் பலவற்றைச் செய்துபார்த்தோம். இந்தக் களப் பயிற்சி எனக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்திருக்கிறது” என்கிறார் இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த ப்ரதீப். இவர் சீர்காழி அருகே உள்ள நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேளாண் தொழிற்கல்வி பயில்கிறார்.
வகுப்பறைக்கு வெளியே கிடைக்கும் அனுபவக் கல்வி, புத்தகங்களையும் தாண்டி புத்தாக்கச் சிந்தனைக்குத் தொடக்கப்புள்ளி வைக்கும். உள்ளுறைப் பயிற்சிகளால் பலன் பெற்ற மாணவர்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்வது அதைத்தான்! வகுப்பறைக்கு வெளியே கிடைக்கும் அனுபவக் கல்வி, புத்தகங்களையும் தாண்டிய புத்தாக்கச் சிந்தனைக்குத் தொடக்கப்புள்ளி. - கவின்மலர்
பத்திரிகையாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: jkavinmalar@gmail.com