மொழிப்பாடம்: பரிவட்டம் உண்டு, மரியாதை?

மொழிப்பாடம்: பரிவட்டம் உண்டு, மரியாதை?
Updated on
3 min read

தாய்மொழியின் மேன்மைகளையும் தேவைகளையும் அறிஞர்கள், கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பல தரப்பினரும் தொடர்ந்து முன்வைக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்திப் பின்பற்றும் நிலையில் இன்றைய மாணவர்களோ கல்விச்சூழலோ சமூகச்சூழலோ இல்லை என்பதுதான் கள நிலவரம். குறிப்பாக, கல்விச்சூழலில் தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் குறைந்துகொண்டே செல்வது வலிதரும் உண்மை.

தேர்ச்சி ஒன்றே போதுமா?: ‘தமிழ் என்பது தமிழ்த் துறைக்கு மட்டுமே’ என்கிற கருத்து பொதுவாக இருக்கிறது. எந்தப் பாடத்தில் பட்டம் படித்தாலும் சொந்த மொழியைக் கைவிடாமல் இருக்கும் அறிவுநிலைக்காகத்தான், ‘மொழிப்பாடம்’ எனும் அளவிலேனும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆனால், அப்பாடத்தில் தேர்ச்சி மட்டுமே அடைந்தால் போதும், மதிப்பெண் பட்டியலில் மதிப்பு இல்லை எனும் நடைமுறையே பல காலமாகப் பின்பற்றப்படுகிறது.

பிற பாடங்களில் பட்டம் பயிலும் பிள்ளைகள் தாய்மொழியின் மேன்மையை, வரலாற்றை உணரும் வகையில் கல்வியறிவு மொழிப்பாடமாகத் தரப்படுகிறது. கூடுதல் மொழியறிவுக்கு ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழைப் படிப்பதென்பது சமூக வரலாறு, பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் படிப்பதாகும். ஆனால், வெறும் ‘மொழிப்பாடம்’ என்ற நிலை இருப்பதாலும் பட்டப்படிப்பை மதிப்பிடும் மதிப்பெண் விழுக்காட்டுக்குள் இடம்பெறாததாலும் மாணவர்களிடையே மதிப்பிழந்து நிற்கிறது தமிழ் மொழி.

அக்கறையற்ற மாணவர்கள்: வகுப்பறையில் மொழிப்பாடத்தைக் கவனிப்பதிலோ தேர்வுகளைப் பொறுப்புடன் எழுதுவதிலோ பெரும்பாலான மாணவர்கள் அக்கறை காட்டுவதில்லை. மொழிப்பாட ஆசிரியர்களிடம் தக்க மரியாதையுடன் நடந்துகொள்வதும் இல்லை. இதனால் பயன்பெற வேண்டிய பாடத்தை, மாணவர்கள் உள்வாங்க முடியாமல் போகிறது.

மாணவர்களின் இந்தப் போக்குடன் போராட முடியாமல் மொழிப்பாடப் பேராசிரியர்களும் பிடிப்பற்றுப் போகின்றனர்; தமிழ் முதன்மைப் பாடமாக இல்லாத காரணத்தால் மாணவர்களைக் கவனித்துக் கையாள்வதும் இல்லை. பாடத்தின் ஆழத்தை உணர்த்தாமல் மேலோட்டமாகக் கடந்துவிடுகின்றனர். போதாக்குறைக்கு, பிற பாட ஆசிரியர்கள் தமிழாசிரியர்க்கான இடத்தையோ நல்லதொரு நட்பையோ அளிக்க முற்படுவதில்லை. பருவத் தேர்விலும் விடைத்தாள் திருத்தும் பணியிலும் மொழியைப் படிக்க, எழுதத் தெரியாத மாணவர்களைக்கூட மொழிப்பாடத்தில் தேர்ச்சியடையச் செய்வதே நடக்கிறது. தமிழில் தங்கள் பெயரையே சரியாக எழுதத் தெரியாத கல்லூரி மாணவர்களைப் பார்க்கும்போது நெஞ்சுவலியே ஏற்படுகிறது.

அப்படியான நிலையில் இருப்பவர்களும் ‘எப்படி எழுதினாலும் தேர்ச்சி அடைந்துவிடுவோம்’ என்கிற மனநிலையை முதல் பருவத் தேர்விலேயே பெற்றுவிடுகின்றனர். அடுத்தடுத்த மூன்று பருவத்துக்கும் இந்த மனநிலை அவர்களைப் பாடத்தோடு நெருங்கவிடுவதில்லை. மொழிப்பாட வகுப்பு நேரம் என்பது ஓய்வுகொள்ளும் அசட்டைப் பொழுதாகிவிடுகிறது. தமிழ்ப் பேராசிரியர்களை ‘ஐயா’, ‘அம்மா’ என்றழைக்கும் சொற்கள் மதிப்பிழந்த வடிவங்களாய், நகைப்புடன்கூடிய வெற்றுச் சொற்களாய் மாணவர்களிடையே புழங்குகின்றன.

இலக்கியப் பாடம்தான் வாழ்க்கையைக் கற்றுக்கொடுப்பது. சமூகம், மொழி எனப் பல கோணங்களில் வரலாற்றைக் கற்றுக்கொடுப்பது. அதைப் பொறுப்புணர்வுடன் கற்க வேண்டும். தமிழ் அனுபவிக்கும் அவலநிலைகளை, ஏறத்தாழ ஆங்கிலமும் அனுபவிக்கிறது. ஆனால், ஆங்கிலத்தின் பிற மொழித்தன்மை ஏற்படுத்தும் அச்சத்தால், அதற்குச் சற்றுக் கூடுதலாக மதிப்பளிக்கின்றனர்.

அண்மையில், நவம்பர் 18ஆம் நாள் நடந்த பல்கலைக்கழகப் பருவத்தேர்வில் பொதுத்தமிழ் வினாத்தாளில் நிகழ்ந்த குளறுபடிக்கும் இந்தக் காரணிகள் பங்களித்திருக்கின்றன. இளங்கலை இரண்டாமாண்டு மொழிப்பாடத்துக்கு உரிய மூன்றாம் பருவப் பொதுத்தமிழ் தேர்வெழுத இருந்த மாணவர்களுக்கு நான்காம் பருவப் பாடத்துக்குரிய வினாத்தாள் கொடுக்கப்பட்டது எத்தனை பெரிய அவலம்? மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் என எல்லோருக்கும் மனஉளைச்சலையும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்குப் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திவிட்டது இந்தக் குளறுபடி.

இதற்கு முந்தைய காலங்களிலும் எழுத்துப் பிழை உள்ளிட்ட பிழைகளுடன் மொழிப்பாட வினாத்தாள்கள் வந்திருக்கின்றன. கல்லூரிகளில் மேற்கொள்ளப்படும் அகமதிப்பீட்டுத் தேர்வு போன்று குறுவட்டத் தேர்வுகளுக்கே வினாத்தாள்கள் கவனமாகச் சரிபார்க்கப்படுகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு சாரா கல்லூரிகள் பல இயங்குகின்றன. எனில், ஐந்து மாதப் படிப்பை எடைபோடும் பருவத் தேர்வில் எவ்வளவு கவனம் இருந்திருக்க வேண்டும்?

அலட்சியம் காட்டும் எழுத்தாளர்கள்: இலக்கிய வட்டாரத்தில், காதல் கடிதங்களிலும் ஒற்றுப் பிழைகள் பார்ப்பதாக அங்கதக் கவிதைகள் எழுதப்படுகின்றன. நவீன எழுத்தாளர்கள் பலரும் மொழியின் முழுத்தன்மைக்கு உறுதியளிப்பதில்லை. மொழி குறித்த புரிதல்களைச் சரிவர உள்வாங்காமலே படைப்புக்கு மட்டும் கவனம்தந்து கடந்துவிடுகின்றனர். பிறமொழிச் சொற்கள் கலப்பும் நீண்ட காலத்துத் தொடர்ச்சி.

இவர்கள் அறிந்தும் அறியாமலும் அச்சொற்களில் கூடுதல் பயன்பாடுகளை நிகழ்த்துகின்றனர். ஓரளவாவது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படித்த, தமிழ்ப் படைப்புலகத்துடன் இயங்குகின்றவர்களே இப்படி இருக்கையில், மொழிப்பாடத்தில் என்ன படித்தோம் என்பதே தெரியாமல் கடமைக்குத் தேர்ச்சிபெற்று வருபவர்களால் எதிர்காலத்தில் எப்படித் தமிழை வாழவைக்க முடியும்?

தமிழுக்கு அளிக்கப்படும் மரியாதை, முன்னுரிமை என்பதெல்லாம் கடமைக்குக் கட்டப்படும் பரிவட்டமாகவே எஞ்சுகின்றன. தலைமைத்துவம் நிறைந்த பரிவட்டத்தை அணிவிப்பவர்க்கே, தற்போது அது வெறும் தலைப்பாகைதான் என்று தெரிகிறது. பட்டுத்துணியாக, சரிகைத்துணியாக இருந்தாலும் இந்தத் துண்டு கோமாளித்தனமாகத் தெரிவதை, அணிந்துகொள்ளும் தமிழும் உணருகிறது.

வரவேற்கத்தக்க முயற்சி: தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட துறைசார்ந்த படிப்புகளுக்கு 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்விலேயே மொழிப்பாடத்தைத் தவிர்த்துதான் தரம் பார்க்கப்படுகிறது; இங்கிருந்தே மொழிப்பாடத்தின் பின்னடைவு தொடங்குகிறது. இதற்கு முன் பி.காம்., பி.சி.ஏ., போன்ற படிப்புகளில் முதலாமாண்டு மட்டுமே மொழிப்பாடம் எனும் நிலை இருந்தது. வரும் கல்வியாண்டு முதல், பிற துறை மாணவர்களைப் போல், இரண்டாம் ஆண்டிலும் அம்மாணவர்கள் தமிழ் பயில வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது.

கூடவே, பொறியியல் படிப்பிலும் தமிழ் படிக்க வேண்டிய அவசியத்தை அரசு ஏற்படுத்தியிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் நோக்கம் சரிவர ஈடேற வேண்டுமெனில், மாணவர்களை முழுமதிப்புடன் தமிழை நோக்கி நெருங்கச் செய்ய வேண்டும். அதற்கு ஒரேவழி மொழிப்பாடத்தில் தேர்ச்சி என்ற அளவில் மட்டும் நிறுத்திவிடாமல், மதிப்பெண் விழுக்காட்டளவிலும் இறுதிவரை கொண்டு நிறுத்த வேண்டும். அப்படி இருப்பின் மட்டுமே பெருநிறுவனங்களுக்கு இயந்திரங்களைத் தயாரிப்பதுபோல் அல்லாமல் மானுடத்தன்மையுடன் கூடிய அறிவாளிகளைக் கல்விமுறை உருவாக்கும். - வீரபாண்டியன் ‘பருக்கை’, ‘செத்தை’ நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: vvraa.s@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in