

கடந்த இரண்டு மாதங்களில் அமேசான், மெட்டா, இன்டெல், டிவிட்டர் உள்ளிட்ட பல அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. உலகளாவிய வேலைவாய்ப்பு - பயிற்சி நிறுவனத்தின் கூற்றுப்படி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பணிநீக்கங்களின் எண்ணிக்கை 60,000ஐத் தாண்டிவிட்டது. இத்தகைய அபரிமிதப் பணிநீக்கங்கள் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகளில், குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
பணிநீக்கங்கள் ஏன் அதிகரித்துள்ளன? உலகளவில் பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியம் என்பது வருங்கால நெருக்கடிகளை உணர்த்தும் ஓர் அபாய அறிகுறியாகும். உலகின் பெரும்பாலான பகுதிகளில் பணவீக்கம் அதிகரித்துவருகிறது. மத்திய வங்கிகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வட்டி விகிதங்களை உயர்த்திவருகின்றன. இதன் காரணமாக, கடன் வாங்குவதற்கும் நுகர்வுக்குமான செலவு அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சியையும் வேலைகளையும் பாதிப்பதிலேயே சென்று முடியும்.
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தொழில்நுட்பத் துறையில் வரவிருக்கும் பணிநீக்கங்கள் குறித்து எச்சரித்திருந்தார். 2022, 2023 இரண்டு ஆண்டுகளிலும் கரோனா பெருந்தொற்றுப் பரவல், ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக உலகளாவிய ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சிக்கான முன்னறிவிப்புகள் நம்பிக்கையளிக்கும் விதமாக இல்லை என சர்வதேச நாணய நிதியம் (IMF)கூறியுள்ளது. 2008 நிதி நெருக்கடி சூழலை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால், சர்வதேச நாணய நிதியத்தின் இந்த ஆண்டுக்கான நிதி மதிப்பீடு, 2001க்குப் பிறகான மதிப்பீடுகளில் மிகவும் பலவீனமானது.
அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரிகள் என்ன நினைக்கிறார்கள்? 2007-2009 மந்தநிலைக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகளில் உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகளின் நம்பிக்கை தற்போது உள்ள அளவுக்கு வீழ்ச்சியடையவில்லை என்று உயர்மட்டத் தலைவர்களின் மாநாட்டு வாரியம் காட்டுகிறது. அடுத்த 12-18 மாதங்களில் என்னென்ன பொருளாதார நிலைமைகளை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என 136 தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவர்களில் 98% பேர் அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கியும் 99% பேர் ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரம் மந்தநிலைக்கும் தயாராகிவருவதாகக் கூறியுள்ளனர்.
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் நிலை என்ன? எந்தவொரு உலகளாவிய பொருளாதாரப் போக்கும் இந்தியத் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றின் நிர்வாகங்கள் முதலீட்டாளர்களுக்குப் பதில் கூற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், செலவுகளைக் குறைக்கவும் லாப வரம்புகளைப் பாதுகாக்கவும் விரும்பும்போது, பணிநீக்க நடவடிக்கைகளையே தேர்வுசெய்கின்றன. இந்தியத் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் அடுத்த சில மாதங்களில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் தென்படுகின்றன.
விப்ரோவைத் தவிர, முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் வருவாயையும் நிகர லாபத்தையும் அதிகரித்துக்கொண்டுள்ளன. விப்ரோவின் நிகர லாபம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், முந்தைய ஆண்டைவிட 9% சரிந்துள்ளது. டிசிஎஸ், இன்ஃபோசிஸ் ஆகிய இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் பணியாளர்கள் தாமாக விரும்பி வெளியேறும் விகிதம் அதிகம் உள்ளது. இது, போட்டி நிறுவனங்கள் பணியாளர்களை அதிக ஊதியம் கொடுத்துக் கவர்ந்துசெல்லும் நிதி வலுவுடன் இருப்பதைக் காட்டுகிறது,
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் நிலை என்ன? இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் நிகழும் பணிநீக்கங்களைப் பொறுத்தவரை, கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் (EdTech) முன்னணியில் உள்ளன. கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்ததிலிருந்து கல்வி வலைதளங்களைப் பார்வையிடும் இணையப் பயனர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது இதற்கான முக்கியக் காரணம். இந்திய ஸ்டார்ட்-அப்களில் பணிநீக்கம் குறித்த Inc42இன் அறிக்கை, 2022இல் 15,700க்கும்மேற்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப் பட்டதைக் காட்டியது. கல்வி-தொழில்நுட்ப நிறுவனங்களை மட்டும் எடுத்துக்கொண்டால், 2022இல் 14 ஸ்டார்ட்-அப்கள் 6,900 ஊழியர் களைப் பணிநீக்கம் செய்துள்ளன.
அமெரிக்காவில் பணியமர்த்தல்கள் நடைபெறு கின்றனவா? அமெரிக்கவின் சில பகுதிகளில் பணிநீக்கங்கள் நிகழும்போது, அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் பணியமர்த்தல்களும் நடைபெறுகின்றன. நவம்பர் 4 நிலவரப்படி, சுகாதாரத் துறையில் 53,000 எனும் அளவிலும், உற்பத்தித் துறையில் 32,000 ஆகவும் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன என அமெரிக்கத் தொழிலாளர் புள்ளியியல் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவற்றின் வருவாயில் சுமார் மூன்றில் ஒரு பங்கானது, அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கு அளிக்கும் சேவைகளிலிருந்து கிடைக்கிறது. கடந்த ஆறு மாதங்களில், அமெரிக்க நிதித் துறையின் பணியமர்த்தல்களில் சிறிய மாற்றமே ஏற்பட்டுள்ளது என்பதை இங்கே நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
முந்தைய உலகளாவிய மந்தநிலையின்போது இந்தியாவில் என்ன நடந்தது? 2007இல் ஏற்பட்ட உலகளாவியப் பொருளாதார மந்தநிலையின்போது, நிறுவனங்கள் பணிநீக்கங்களைப் பகிரங்கமாக அறிவித்த தருணங்களில் எல்லாம், அவை அனைத்தும் செயல்திறன் ஏணியில் கீழே வரிசையில் இருக்கும் ஊழியர்களையே குறிவைத்தன. குறிப்பாக, மோசமான நிதி நெருக்கடியில் இருந்த நிறுவனங்கள், தங்கள் இருப்பில் இருந்த கூடுதல் ஊழியர்களின் வலிமையைக் குறைத்தன. தொகுப்பு: நிஷா