

வாசிப்பு எல்லா நிலைகளிலும் வடிவம் கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்தில், அரசியல் முதல் பண்பாடுவரை சுவரொட்டிகள்வழி வாசித்துவிட முடியும். ஒவ்வொரு சாதிக்குமான பண்பாட்டை, மற்ற சாதிகளுடனான நுணுக்கமான வேறுபாட்டைத் திருமண அழைப்பிதழ்களில் வாசிக்க முடியும்.
ஒரு நூற்றாண்டு காலத் திருமண அழைப்பிதழ்களின் உள்ளடக்கங்களைக் கொண்டு காத்திரமான சமூக வரலாற்றை எழுதிவிட முடியும். மத நிறுவனங்களின் துண்டுப் பிரசுரங்களில் தனித்த ஒரு நடை இருந்தது; இடதுசாரி இயக்கங்களின் துண்டுப் பிரசுரங்கள் உலக அரசியல் குறித்த சாமானிய மக்களின் பார்வையை வளர்த்தன. அச்சுத் துறையின் அதீத வளர்ச்சியால், பத்திரிகைகள் ஏராளமாக வெளிவரத் தொடங்கின.
1950களில் திராவிட இயக்கப் பற்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து நிறுவன முதலாளிகள் சிலர், பயணச்சீட்டின் பின்புறத்தில் அச்சிட்டு விநியோகித்த சாதி-கடவுள் மறுப்பு, பகுத்தறிவு வாசகங்கள் ஆயிரக்கணக்கான பயணிகளிடம் ஒருவித வாசிப்பை உருவாக்கின. 1990க்குப் பிறகு, இரவுப் பள்ளிகள் மூலம் அறிவொளி இயக்கம் உருவாக்கிய வாசிப்பு ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது.
1990களில் பொங்கலுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவது முக்கியக் கலாச்சாரச் செயல்பாடாக இருந்தது. கடைகளில் பொட்டலமாகும் நாளிதழ்-பத்திரிகைத் தாள்களை வாசிக்காதவர்கள் சென்ற தலைமுறையில் இருக்க முடியாது. டீக்கடை செய்தித்தாள் வாசிப்பு, பல இடங்களில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் அளவுக்குத் தீவிரம் கூடியிருந்தது.
இப்படியான வாசிப்பு முறைகள், கல்விப் புலத்துக்கு வெளியே வரையறுக்கப்படாத ஒரு வாசிப்பை உயிரோட்டமாக வைத்திருந்தன. அது கல்விப் புலத்திலும் ஆரோக்கியமான தாக்கம் செலுத்தியது. அப்போதெல்லாம் வாசிப்பு ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால், வாசிப்பின் வழிகள் இன்று அழிவின் விளிம்பில் இருக்கின்றனவோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. அச்சுப் பதிப்பைவிடக் காணொளி வடிவிலான அழைப்பிதழ்களும் இன்னும் பிறவும் இன்று பரவலாகியுள்ளன; அதிகம் பகிரப்படுகின்றன.
துண்டுப் பிரசுரம் தொடங்கி பாடப் புத்தகம்வரை அனைத்தும் காட்சி வடிவத்துக்கு மாறிக்கொண்டிருக்கின்றன. இது ‘காகிதமில்லாப் பண்பாடு’ எனப்படுகிறது. அச்சு வடிவங்கள், காட்சி வடிவங்களாக மாறுவது வாசிப்பிலும் புரிந்துகொள்வதிலும் சமமின்மையை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, கல்லூரி மாணவர்களிடம்கூட வாசிப்பின் தன்மை மாறியிருக்கிறது.
உச்சரிப்பில் தயக்கமும் தடுமாற்றமும் கூடியிருக்கிறது. காரணம், நாளொன்றுக்குச் சாராசரியாக 15 மணி நேரம்வரை காட்சி ஊடகத்தில் அவர்கள் கவனம் குவித்திருக்கிறார்கள், தொடர்பில் இருக்கிறார்கள். கண்டு அறிவதை மட்டுமே விரும்பத் தொடங்கிவிட்ட இன்றைய தலைமுறை, காட்சி வடிவத்தில் வரும் எழுத்துகளைக்கூட வாசிக்கத் தயாராக இல்லை.
இது, தகவல்தொடர்பில் காலந்தோறும் ஏற்படும் மாற்றங்களின் விளைவுதான். எனினும் வாசிப்பினால் விளைந்த பண்பாட்டு வெளிக்கும் காட்சிச் சூழல் உருவாக்கிக்கொண்டிருக்கும் பண்பாட்டு வெளிக்குமான அடிப்படைப் பண்பு முற்றிலும் வேறுபட்டது. இது வாசிப்பு உருவாக்கும் பிழையற எழுதும் பழக்கத்தைச் சிதைத்துக்கொண்டிருக்கிறது. வாசிப்பிலிருந்து அந்நியப்படுதலும் பிழையோடு எழுதுதலும் அறிவுச் சமூகத்தை முழுமைப்படுத்தாது. இதற்குத் தீர்வு காண அறிவுச் சமூகம் தலைப்பட வேண்டும். - ஞா.குருசாமி தமிழ்ப் பேராசிரியர், அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை, தொடர்புக்கு: jeyaseelanphd@yahoo.in