வறட்சி, வெள்ளம் எனும் முடிவுறாத் தொடர்கதை

வறட்சி, வெள்ளம் எனும் முடிவுறாத் தொடர்கதை
Updated on
3 min read

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்குத் தண்ணீா்ப் பற்றாக்குறை இருக்கும் என 2019இல் நிதி ஆயோக் எச்சரித்தது. நீா் மேலாண்மைக் கொள்கைகள் இருந்தும் வெள்ளம், வறட்சி, நீா் மாசுபாடு, தண்ணீா்ப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் பல ஆண்டுகளாகத் தொடா்கின்றன. பல பத்தாண்டுகளாகத் தண்ணீா் சார்ந்த பிரச்சினைகள் தீா்க்கப்படாமல் இருப்பதற்கு யார் காரணம்? அரசின் மெத்தனப் போக்கா, கொள்கை முடிவுகளின் தோல்வியா, சமூகத்தின் அலட்சியமா?

நீர்ச் சிக்கல்கள்: இந்தியாவில் வறட்சி அதிகாித்துவருவதாக (2020இல் 7.8%; 2021இல் 21.06%), வறட்சி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. மற்றொருபுறம், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடாகவும் இந்தியா உள்ளது. மொத்தமுள்ள 320 மில்லியன் ஹெக்டேரில், 46 மில்லியன் ஹெக்டோ் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது; 5.54 மில்லியன் ஹெக்டோ் பயிர் சாகுபடி வெள்ளத்தால் நாசமாகியுள்ளது (2021).

வெள்ள இழப்பு ரூ.5,649 கோடி என நிதி ஆயோக் கணக்கிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தட்பவெப்பநிலைப் பேரழிவுகளால் 6,811 பேர் பலியாகியுள்ளனா். தமிழகத்தில் நவம்பா் 4 அன்று பெய்த கனமழையால், மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தஞ்சாவூா், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பரப்பில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

நிலத்தடி நீா்ப் பயன்பாட்டில் (61.6%), இந்தியா உலக அளவில் முன்னிலையில் உள்ளது. ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை, கடந்த 50 ஆண்டுகளில் 2 கோடியாக அதிகரித்துள்ளது. மற்றொருபுறம், நகா்ப்புறங்களில் வெளியேற்றப்படும் கழிவுநீரானது, முழுமையாகச் சுத்திகரிக்கப்படாததால், நாட்டின் நீராதாரங்களில் 70%ஐ மாசுபடுத்துகிறது.

ஜல்-சக்தி அமைச்சகத்துக்கு ரூ.2,20,226 கோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.5,57,192 கோடி என கணிசமான தொகையைக் கடந்த 10 ஆண்டுகளில் நீா் மேலாண்மைக்காக அரசு ஒதுக்கியுள்ளது. தண்ணீா்ப் பற்றாக்குறையைக் கருத்தில்கொண்டு, நிதி ஒதுக்கீடு தொடா்ந்து அதிகரித்துவந்தாலும், பெருகிவரும் மக்கள்தொகையை எதிர்கொள்ள இது போதவில்லை என்பது உண்மை.

இந்தியாவில் தண்ணீருக்கான சந்தை பிரம்மாண்டமாக வளா்ந்துவரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் சந்தைக் குடிநீரின் தேவை நகர்ப்புறங்களில் 2.7%இல் இருந்து 12.2%ஆகவும் கிராமங்களில் 0.5%இல் இருந்து 4%ஆகவும் உயர்ந்துள்ளது. சந்தைப்படுத்தப்பட்ட நீரின் அளவு 2030இல் 35.53 பில்லியின் லிட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீா் தரக் குறியீட்டில், 122 நாடுகளில், இந்தியா 120ஆவது இடத்தில் பின்தங்கியிருப்பது, குடிநீா் மேலாண்மையின் அவலநிலையை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது.

நீரியல் பேரழிவுகள்: அதிக செலவும் பராமரிப்பும் கோரும் நீா் சுத்திகரிப்பு இயந்திரங்களின் தண்ணீரின் தரம், உடல்நலத்துக்கு ஏற்றதாக இல்லை என இந்திய நீா் தரச் சங்கம் எச்சரித்துள்ளது. குடிமக்களுக்குப் பாதுகாப்பான தண்ணீரை உறுதிசெய்ய, மொத்த உள்நாட்டுஉற்பத்தியில் 3.2% செலவிடப்பட வேண்டும் என உலக வள நிறுவனம் கூறுகிறது.

இந்தியா முழுவதும் நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு பரவலாக உள்ளது; 49% ஆக்கிரமிப்புகள் நீா்நிலைகளில் நடந்துள்ளதாகத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை கூறுகிறது. தமிழ்நாட்டில் 47,707 ஏக்கா் நீா்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக, தமிழக அரசின் சார்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீா் ஆதாரங்களுக்கான நிலைக் குழு (2016), நீா்நிலைகளை மீட்பதற்கான மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அடையாள வழிகாட்டுதல் (2019) உள்ளிட்டவை நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றப் பரிந்துரைத்தன. ஆனால், பரிந்துரைகள் எவையும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் வெள்ளம், வறட்சி, நீா் பற்றாக்குறை போன்ற நீரியல் பேரழிவுகள் தொடர்கதையாகின.

கொள்கைகளின் தோல்வி: சுதந்திரத்துக்குப் பிறகு நான்கு தேசிய நீர்க் கொள்கைகளை அரசு கொண்டுவந்தது. செப்டம்பர் 1987இல் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கொள்கை, நீா் மேலாண்மையில் முன்னேற்றம் கொண்டுவந்ததாக அறியப்பட்டது. புதிய அணுகுமுறைகளுடன் 2002இல் கொண்டுவரப்பட்ட இரண்டாவது கொள்கை, 21ஆம் நூற்றாண்டின் தேவையை நிறைவேற்றவில்லை. இதனால், பொதுமக்களின் கருத்துகளை உள்ளடக்கிய புதிய கொள்கை, 2012இல் கொண்டுவரப்பட்டது.

2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட நான்காவது கொள்கை, மக்களின் பங்களிப்புடன் நீா் மேலாண்மை அணுகுமுறையைப் பரிந்துரைத்தது. அனைத்து நீா்க் கொள்கைகளும் திட்டமிடல், பராமரிப்பு, தரம், நீரின் அளவு - கூட்டு நடவடிக்கை ஆகியவற்றை முன்மொழிந்தன. ஆனால், மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் தோல்வி உள்ளிட்ட தண்ணீர் சார்ந்த இன்றைய பிரச்சினைகள் அனைத்தும் தேசிய நீா்க் கொள்கைகளின் தோல்வியையே வெளிப்படுத்துகின்றன.

நீா் மேலாண்மையில் எல்லா வகையிலும் நாம் தவறிவிட்டோம் என்பதைத் தரவுகள் உணர்த்துகின்றன. வெள்ளம், வறட்சி, தண்ணீா்ப் பற்றாக்குறை, பொருளாதாரச் சுமை போன்றவற்றால் நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியின் தீவிரத்தை நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகப்படுத்தியுள்ளன. எனினும், நீா் மேலாண்மையை நாம் புறந்தள்ள முடியாது. இப்பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, தீா்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும்.

தீர்வுகள்: ஒன்று, அரசு ஆவணங்களின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீா்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பளவு ஆகியவற்றைச் சரிபார்த்து உறுதிசெய்ய வேண்டும். இரண்டு, நீர்நிலைகளைத் தூர்வாரி பலப்படுத்த வேண்டும். பிறகு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களிடம் அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்க வேண்டும். மூன்று, சிறு வாய்க்கால்களைச் சீரமைத்து அருகிலுள்ள குளங்கள், ஆறுகளுடன் இணைக்கும் பணியில் நிர்வாக அமைப்புகள் இறங்க வேண்டும். நீர்நிலைகளின் கரைகளில் மரக்கன்றுகள் நட்டுப் பராமரித்துவருவதன் மூலம், ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்தவும் நீா்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்தவும் முடியும்.

அடுத்ததாகக் குடியிருப்புகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அவை புதுப்பிக்கப்படுவதை நிர்வாக அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இறுதியாக, நீா்நிலைகளை ஆக்கிரமித்தல், மாசுபாடு ஆகியவை கண்டறியப்படும் பட்சத்தில், கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

இறுதியாக, ஒவ்வோர் ஆண்டும் அனைத்து பஞ்சாயத்து, நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய நிர்வாக அமைப்புகளுக்குச் சென்று நீா்நிலைகளின் (எண்ணிக்கை/பகுதி/ஆழம்), மாசு-கழிவுநீா் மேலாண்மையை மாவட்ட ஆட்சியா் உறுதிப்படுத்த வேண்டும். இவற்றைத் தீவிரமாகச் செயல்படுத்தும் பட்சத்தில், தலைமுறைகள் கடந்தும் நீராதாரங்கள் காப்பாற்றப்படும் என்பது உறுதி. - கு.தாமோதரன் பொருளாதார இணைப் பேராசிரியா், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: damodaran@cutn.ac.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in