Last Updated : 05 Dec, 2022 06:51 AM

2  

Published : 05 Dec 2022 06:51 AM
Last Updated : 05 Dec 2022 06:51 AM

பெயர்ச்சிமை: நாம் ஏன் கைக்கொள்ள வேண்டும்?

சர்வதேச சரக்குப் போக்குவரத்தில் இன்று தவிர்க்க முடியாத ஒரு பதம் பெயர்ச்சிமை (Logistics). இந்தச் சொல்லாடல் பிரபலமாவதற்கு முன்பும் சரக்குப் போக்குவரத்து நடந்துகொண்டுதான் இருந்தது; ஆனால் சரக்குகளின் இடப்பெயர்ச்சி துண்டாடப்பட்டு, பெரும் நடைமுறைச் சிக்கல்களோடு இருந்தது. இப்படியான சூழலில், ஏற்றுமதி, இறக்குமதியில் சரக்குகளின் வரத்து, அவற்றின் அளவு, தரம், நேரம் குறித்த தரவுகளைப் பெறுவதில் இருந்த பிரச்சினைகளுக்கு, நவீனத் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு தீர்வுகண்ட பெருமை பெயர்ச்சிமைக்கு உண்டு. பொருளாதாரச் செயல்பாடுகளில் தவிர்க்க முடியாத அம்சமான பெயர்ச்சிமையை நாம் கைக்கொள்ள வேண்டிய தருணம் இது.

மந்திரச் சொல்: சதுரங்க விளையாட்டில் சமயோசிதமாகக் காய்களை நகர்த்துவதுபோல, தனது படைகளைப் பெயர்ச்சிமை செய்யும் வித்தையை அறிந்திருந்தார் பிரான்ஸ் மன்னர் நெப்போலியன். 1800 ஜூன் 14, மரேங்கோ போர்க்களத்தில் தன் வெற்றிக்குப் பின்னான உரையில், ‘‘இந்த வெற்றி பெயர்ச்சிமையால் வந்தது’’ என்று முழங்கினார். உண்மையில் ‘லாஜிஸ்டிக்ஸ்’ என்ற பெயர்ச்சொல்லின் மூலமும் பிரெஞ்சு மொழிதான்.

‘சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்காப் பணம்’ என்பது நம் ஊர்ப்புறங்களில் மிகச் சாதாரணமாய்ப் பயன்படுத்தப்படும் சொலவடை. சுமைகூலி என்ற பதத்தில் உருவகிக்கப்படும் செயலான பெயர்ச்சிமைதான், பொருட்களின் விலையில் முக்கியக் காரணி என அன்றே நம் முன்னோர் அறிந்திருந்தார்கள். இன்று ஒரு மந்திரச்சொல்லாக மாறியிருக்கும் இந்தப் பெயர்ச்சிமை, விதவிதமான கப்பல், விமானம், ரயில், சாலை வழிகளிலான போக்குவரத்தை மட்டும் உள்ளடக்கியதல்ல. மாறாக, சரக்குகளின் தேவை, அளவு, சேமிப்பு, ஒருங்கிணைத்தல், கையாளுமை, பொதிதல், திட்டமிட்டுக் கொண்டுசேர்த்தல் போன்ற இதரச் சேவைகளையும் உள்ளடக்கியது.

வகைமைகள்: கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச சரக்குப் போக்குவரத்தில் இருக்கும் ஒரு முக்கியப் பிரகடனம்: ‘உருவாக்கு தளத்திலிருந்து நேரடியாக உபயோகத் தளத்துக்கு’. ஆனால், அதன் போக்கை மடைமாற்றிய பெருமை அமெரிக்காவில் 1956இல் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்குப் பெட்டகங்களைச் சாரும். இன்று பிரபலமாக உள்ள மூன்றாம் நபர் பெயர்ச்சிமை (3PL) என்ற வியாபார உத்தியும், 1970-களில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. அதுவே, படிப்படியாகப் பல துறைகளில் ஊடுருவி, சேவைக்கான தேவையை உணர்த்தி, உலகெங்கும் உள்ள வியாபார வர்க்கத்தால் 1990-களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தனது உற்பத்தியைத் தானே தலைச்சுமையாகவோ அல்லது தனக்குச் சொந்தமான வாகனங்களிலோ எடுத்துச் சென்று நுகர்வோரிடம் சேர்ப்பது என்பது முதல் நபர் பெயர்ச்சிமை (1PL - First Party Logistics). ‘நீங்கள் உற்பத்தி மட்டும் செய்யுங்கள், அதைப் பக்கத்து ஊர்களுக்கு வண்டி வைத்து நான் கொண்டுபோய்க் கொடுக்கிறேன்’ என ஒருவர் முன்வந்தால் அது இரண்டாம் நபர் பெயர்ச்சிமை (2PL, Second Party Logistics). உற்பத்தியாளர்களையும் சரக்கு வாகனங்களை இயக்குபவர்களையும் தமது அனுபவ அறிவால், தொடர்பால் இணைத்து புதிய வியாபார வழியை உலகுக்குக் கொடுத்தது மூன்றாம் நபர் பெயர்ச்சிமை (3PL - Third Party Logistics).

தவிர்க்க முடியாத சமன்பாடு: உற்பத்திக்கான கச்சா பொருளைத் தருவித்தலிலும், அதன் தயார் இருப்பிலும் வீணாகப் பணம் முடங்கிக் கிடந்ததை உற்பத்தியாளர்களுக்குப் புரியவைத்ததோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பான, வேகமான, செலவு குறைந்த உள்நாட்டு - பன்னாட்டுப் பாதைகளையும், அதில் சேவை புரிவோரையும் கண்டறிந்து பெயர்ச்சிமையின் செலவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என மூன்றாம் நபர் பெயர்ச்சிமையாளர்கள் உணர்த்தினார்கள். நுகர்வோரின் தேவைக்கேற்ற சரக்குப் பொதிமானங்களால் (Packing), வியாபாரத்தை மேலும் விருத்தி செய்யமுடியும் என்ற அவர்களது யதார்த்தமான கருத்தை உலக வியாபாரிகளால் மறுக்க முடியவில்லை.

பன்னாட்டுப் பெயர்ச்சிமையில், புதிதாக நடைமுறைக் கோட்பாடுகள் புகுத்தப்பட்டன. அவற்றின் மூலம் வியாபார வாய்ப்புகளும் பெருகின. உற்பத்தியாளர்களின் ஆலைகளுக்குத் தேவையான இயந்திர உதிரி பாகங்கள், கச்சா பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்டாலும், தேவைக்கேற்ப ஓரிடத்தில் அவற்றை ஒருங்கிணைத்து ஒரே கப்பலிலோ அல்லது சரக்குப் பெட்டகத்திலோ கொண்டுவந்து நுகர்வுக்காகக் கொடுத்தார்கள். சரக்குகள் குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச்சேர வேண்டிய காலக்கெடுவை மனதில் கொண்டு, மாறுபட்ட பயண ஏற்பாடுகளைத் (Multimodal Transport) தேர்ந்தெடுத்து, அவற்றையும் ஒரே குடையின்கீழ் கண்காணித்துச் செயலாற்றி, வியாபார உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.

இந்தியா செய்ய வேண்டியது என்ன? பெயர்ச்சிமையின் இந்த வளர்ச்சி இந்தியாவையும் தொட்டுவிட்டது. ஆனால் கப்பலோட்டம் போலவே பெயர்ச்சிமைத் தொழிலும் வெளிநாட்டவர் கைகளிலேயே இருக்கிறது. அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலையில், நமது தொழில்முனைவோரால் சர்வதேசச் சந்தைகளில் போட்டியிட முடியவில்லை. காலனிய ஆட்சிமுறையால், கப்பல் உரிமை சார்ந்து ஏற்பட்டிருந்த தயக்கம், பெயர்ச்சிமைத் தொழிலிலும் இங்கு தொடர்கிறது.

சர்வதேசப் பெயர்ச்சிமைக் கட்டணங்கள் இந்தியாவில் அதிகமாக இருப்பதற்கு இதுவே முக்கியக் காரணம். ஏற்றுமதியில் முதல்கட்ட இணைப்பும் (First mile connectivity), இறக்குமதியில் இறுதிக்கட்ட இணைப்பும் (Last mile connectivity) இங்கு சாதகமில்லாச் சூழலில் இருக்கின்றன. செப்டம்பர் 17 அன்று இந்தியாவின் பெயர்ச்சிமைக் கொள்கையை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி, “சர்வதேச அளவில் 8%க்கும் குறைவாக இருக்கும் பெயர்ச்சிமைக் கட்டணங்கள், இந்தியாவில் 15% மேல் இருக்கின்றன” என்றார். கட்டணம் குறைக்கப்படும் என்றும் கூறினார்.

பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் இந்தச் சூழலை, போர்க்கால அடிப்படையில் அரசு அணுக வேண்டும். சரக்குப் போக்குவரத்தின் முக்கிய அம்சமான கப்பல், சரக்குப் பெட்டக உரிமைக்கு முக்கியத்துவம் அளித்து, உலக அளவிலான நமது பங்களிப்பை உறுதிசெய்ய வேண்டும். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளோடு பெயர்ச்சிமை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட வேண்டும். சர்வதேசக் கப்பலோட்டத்தின் பிரதான சக்தியாக விளங்கும் இந்திய மனிதவளம், இந்தியக் கப்பல்களிலேயே பணியமர்த்தப்படும் சூழல் உருவாக வேண்டும்.

இந்தியத் துறைமுகங்களிலிருந்து சராசரியாக 600 கி.மீ. தொலைவு வளைவுக்கு உள்ளிருக்கும் சரக்கு உருவாக்கு தளங்கள், சர்வதேச சூழலான 200 கி.மீ.தொலைவு வளைவுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். பிரதான சாலை, ரயில் வழித்தடங்கள், தேசத்தின் சரக்கு உருவாக்கு தளங்களை நவீன கட்டமைப்போடு கூடிய பிராந்திய துறைமுகங்களோடு இணைக்க வேண்டும். பழமையான சட்டதிட்டங்கள் திருத்தப்பட்டு, நடைமுறைக்குச் சாத்தியமான புதிய பெயர்ச்சிமைச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். துறைமுகம், சுங்கம், சாலை, கப்பலோட்டம்சார் அரசின் கண்காணிப்பு மையங்களில் பணிசெய்வோர், சர்வதேசப் பெயர்ச்சிமையில் தாங்களும் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். - ஆர்.என்.ஜோ டி குருஸ்
எழுத்தாளர், வணிகக் கப்பல் நிறுவன ஆலோசகர்; தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com

To Read in English: Need for our country to play greater role in global logistics

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x