நீர் மேலாண்மை: தவறவிட்ட மரபுக் கொடை

நீர் மேலாண்மை: தவறவிட்ட மரபுக் கொடை
Updated on
2 min read

சென்னை நகரவாசிகளுக்குப் பயத்தையும் எரிச்சலையும் தருவது அடைமழைக் காலமான வடகிழக்குப் பருவமழைக் காலமாகும். முன்பு கோடை காலக் கத்தரி வெயில், இப்போது வ.கி. பருவமழை. நகரத்தின் காலி நிலப்பரப்புகள் குறைந்து, கட்டிடங்களைப் பெருக்கியது ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம் மழைநீர் வடிகால்களின் ஆக்கிரமிப்பும் முறையான பராமரிப்பின்மையும் ஆகும். மக்களின் பயன்பாட்டுக்கான சுரங்கப்பாதைகள் நீர்த்தேக்கங்களாகக் காட்சியளிக்கும். மழையை எதிர்நோக்காது வாழ்ந்தவர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாக அமைந்துவிடும்.

இந்த ஆண்டு சென்னையில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட அதிகமாகவும் வடகிழக்குப் பருவமழை சராசரி அளவிலும் பொழிந்துள்ளன. இருப்பினும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் நாட்கணக்கில் தேங்கவில்லை. மழைநீர் வடிகால்கள் நீரை வெளியேற்றும் திறன்குன்றாது செயல்பட்டன. மழையை எதிர்நோக்கி அதன் பாதிப்புகளுக்கு உள்ளாகாத வழிமுறைகள் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் நல்விளைவுகள்தாம் இவை.

நீர் மேலாண்மை: அணைகள் கட்டித் தண்ணீரைச் சேமிப்பது, அதை முறையாக விளைநிலங்களுக்கு மடைமாற்றி அனுப்பவது, அது இன்னலாக மாறிவிடாமல் தடுப்பது ஆகியவை அரசின் கடமைகளாகும்; இந்த மூன்று கடமைகளை உள்ளடக்கியதே ‘நீர் மேலாண்மை’. இதுவொரு புதிய கலைச்சொல் என்றாலும் தமிழர்களின் நாகரிக வரலாற்றில் தொன்மையான ஒன்றாகும். சங்க நூல்களிலும் தமிழ்க் கல்வெட்டுகளிலும் நீர் மேலாண்மை பற்றிய செய்திகளைப் பரவலாகக் காண முடிகிறது..

ஒரு நிலப்பகுதியில் விளைவிக்கப்படும் பயிர்கள் அப்பகுதியின் நீர்வளத்தை வெளிப்படுத்தும் தன்மையன. இவ்வகையில் சங்க இலக்கியங்கள், பல்லவர் காலம், பிற்காலச் சோழர் காலம், பாண்டியர் காலம் சார்ந்த கல்வெட்டுகள், இலக்கியங்கள்வழி சில முக்கியப் பயிர் வகைகளை அறிய முடிகிறது. இவ்வகையில் நெல், கரும்பு, வாழை, கமுகு (பாக்கு), வெற்றிலை, தென்னை என்பன பரவலாக அறிமுகமாயிருந்ததும் மன்னர்களின் வரிவிதிப்புக்கு இவை உள்ளாகி இருந்ததும் தெரியவருகிறது.

இப்பயிர்கள் அனைத்தும் அதிகளவில் நீர் தேவைப்படும் பயிர்களாகும். முறையான நீர் மேலாண்மை இன்றி இவற்றைப் பயிரிட்டிருக்க முடியாது. எனவே தமிழர்களின் நீர் மேலாண்மை வரலாறானது பொ.ஆ.மு. 6 அல்லது 7ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. இவ்வரலாற்றின் முக்கியப் பகுதியாக அமைவது ஆற்று நீரின் பயன்பாட்டைப் பரவலாக்கல்.

புதிய ஆறுகள்: வளம்மிகுந்த ஆற்றின் நீரை வளமற்ற பகுதிகளில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் பிற்காலச் சோழர் காலத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. தமிழகத்தின் நிலமானிய வரலாற்றில் விளைநிலங்களுக்குத் தண்ணீர் வழங்குவதில் சோழர் ஆட்சி தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தது. இங்கு பாயும் காவிரியாற்றின் நீரை மடைமாற்றும் வகையில், புதிய வாய்க்கால்களை மட்டுமின்றி புதிய ஆறுகளையும் அவர்கள் உருவாக்கினர்.

தஞ்சைக்கு அருகிலுள்ள திருவையாற்றிலிருந்து சில கி.மீ. தொலைவில் ஓடும் ஆறுகளின் எண்ணிக்கை ஐந்து (காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு). இதன் அடிப்படையிலேயே அந்த ஊருக்குத் திருவையாறு என்ற பெயர். மற்றொரு ஊரான நீடாமங்கலத்தில் பாமணி, கோரையாறு, வெண்ணாறு என மூன்று ஆறுகள் ஓடுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தின் ஒரு பகுதியில் மட்டும் பதினாறு பெரிய வாய்க்கால்கள் புதிதாக வெட்டப்பட்ட உண்மையை நன்னிலம் கல்வெட்டுக்களைப் பதிப்பித்த ஆய்வாளர் பத்மாவதி குறிப்பிட்டுள்ளார். இந்தியா குறித்த தமது பதிவில் கார்ல் மார்க்ஸ் இதைப் பற்றி எழுதியுள்ளார்.

வாய்க்காலும் வடிகாலும்: நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி ஊரின் கைலாசநாதர் கோயிலில் உள்ள இருபத்தியிரண்டு கல்வெட்டுக்களை ஆராய்ந்தும் கள ஆய்வு மேற்கொண்டும் சோழர் காலப் பாசனமுறை குறித்த புதிய செய்திகளைப் பேராசிரியர்கள் என்.கதிரவனும் ந.அதியமானும் வெளிப்படுத்தி உள்ளனர். அதன்படி வதி, கண்ணாறு (கிளை ஆறு), வாய்க்கால் என்ற பெயர்களில் நீர் வழிகள் உருவாக்கப்பட்டிருந்தன: இவற்றுள் வாய்க்கால் என்பது கிராமம் முழுமைக்கும் நீர் வழங்கியுள்ளது; வாய்க்காலிலிருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்காலே கண்ணாறாகும் (தற்போது கன்னிவாய்க்கால்). வதி என்பது வடிகாலாகும்; இது வாய்க்காலில் நீரைச் சேர்க்கும்.

விரும்பும்போது பாசன நீரை வெளியேற்றவும் தேவை இல்லாதபோது தடுத்துநிறுத்தவும் மடை, மதகு, தூம்பு, குமிழி போன்ற அமைப்புகள் நீர்நிலைகளில் இருந்துள்ளன. பெருமழைக் காலங்களில் நீர்நிலைகளின் கொள்ளளவு மிகுந்து, நீர்நிலைகள் அழிவுறாதவாறு இவை பாதுகாத்துள்ளன. இப்பணிகளுக்கு ஏற்றாற்போன்று இவை ஒவ்வொன்றும் வெளியேற்றும் நீரின் அளவு வேறுபடும்.

இவற்றில் பயன்படுத்தப்படும் கருவிகள் உள்ளூர் அல்லது பக்கத்து ஊரின் தச்சர்கள், கல்தச்சர்கள், கொல்லர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. வடிகால்களின் தேவை குறித்த சிந்தனையும் அன்றைய மன்னர்கள் சிலரிடம் இருந்தமைக்கான அற்புதமான சான்று, கொள்ளிடம். கல்லணையிலிருந்து வெளியேறும் காவிரி ஆற்றின் வெள்ளநீரைக் ‘கொள்ளும் இடம்’ என்பதால் இப்பெயர் உருவானது என்ற மக்கள் வழக்காறும் உண்டு.

ஆனால், சூழலியல் முக்கியத்துவத்தை உணராது மத்திய அமைச்சர் ஒருவர் உருவாக்கிய இறால் பண்ணைத் திட்டமோ, நாகை மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களில் சேரும் மழைக்கால வெள்ள நீரானது கடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும் அரணாக நிற்கிறது. இதனால் தலைஞாயிறு கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் வாழும் மக்கள் அடையும் துன்பங்களுக்கு அளவில்லை. ‘செய்தக்க அல்ல செயக்கெடும்’ (குறள்: 466) - ஆ.சிவசுப்பிரமணியன்
பேராசிரியர், பண்பாட்டு ஆய்வாளர், தொடர்புக்கு: sivasubramanian@sivasubramanian.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in