

விளிம்புநிலை மனிதர்கள் எதிர்கொள்ளும் அல்லல்களையும் அவர்களின் உளவியல் சிக்கல்களையும் தன் எழுத்துகளில் அழுத்தமாக முன்வைத்தவர் இராசேந்திர சோழன். தமிழில் இதுவரை பலரும் அறிந்திராத எளிய மனிதர்களின் வாழ்வு, அன்றாடப்பாடுகள், அதை அவர்கள் போகிற போக்கில் எப்படிக் கையாள்கிறார்கள் என விரியும் இராசேந்திர சோழனின் படைப்புகள் அத்தனையும் நம்மைப் பிரமிக்க வைப்பவை. அவற்றைத் தம் படைப்புகளில் காட்சிப்படுத்தியதில் அவருடைய பாணி தனித்துவமானது.
இராசேந்திர சோழன் ஒரு படைப்பாளி மட்டுமல்ல, களப்போராளி. ஆசிரியர் பயிற்சி முடித்த இராசேந்திர சோழன், மயிலம் ஒன்றியத்தில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றினார். கோடை விடுமுறை முடிந்தது. ஆனால், அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்படவில்லை. பள்ளி நிர்வாகம் என்னென்னவோ காரணங்களை அடுக்கியது. ஒரு முடிவெடுத்தார். அந்த இளம் வயதிலேயே, தனக்குத் திரும்ப ஆசிரியர் பணி வேண்டும் என்ற கோரிக்கையோடு நீதிமன்றப் படியேறினார்; வழக்கில் வெற்றிபெற்று மீண்டும் பணிக்குத் திரும்பினார். ஒரு லட்சியத்தோடு வாழ்ந்துகொண்டிருப்பவர் இராசேந்திர சோழன். அவர் செய்துகொண்டது சாதி மறுப்புத் திருமணம். மார்க்சியத்தில் ஈடுபாடுகொண்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ‘செம்மலர்’ மாத இதழில் ‘அஸ்வகோஷ்’ என்ற பெயரில் பல சிறுகதைகளை எழுதினார். ‘இயக்க வாழ்க்கை, இலக்கியத்துக்குச் சாபக்கேடு’ என்பது எழுத்தாளர் இராசேந்திர சோழனுக்கு முற்றும் பொருந்தும். இயக்க வேலைகளும் பொதுநலப் பணிகளும் அவரை எழுதவிடாமல் பெருமளவு கட்டிப்போட்டன.
ஒரு கட்டத்தில் ‘செம்மல’ரின் இலக்கியக் கோட்பாட்டோடு அவர் முரண்பட்டார். அதில் எழுதுவதை நிறுத்திக்கொண்டார். ‘பிரச்சினை’, ‘உதயம்’ ஆகிய இதழ்களை அவரே நடத்தினார். நிறைய எழுதினார். கூடவே களப்பணிகளையும் செய்யத் தவறவில்லை. நாடகத் துறையிலும் அவருக்கு ஆர்வம். அதற்காகத் தம் மாத வருமானத்தை இழக்கத் துணிந்தார். திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில், பத்து வார காலம் நடைபெற்ற நாடகப் பயிலரங்கில் கலந்துகொள்வதற்காக, ஊதியமில்லா விடுப்பு எடுத்துக்கொண்டார். அந்தப் பயிற்சியில் பெற்ற அனுபவத்தில் பல ஊர்களிலும் தன் நாடகங்களை மேடையேற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்த அவர், ஒருகட்டத்தில் ‘தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி’யில் இணைந்தார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்தும் விலகி, ‘தமிழ் தேச மார்க்சியக் கட்சி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். ‘மண்மொழி’ என்கிற இலக்கிய இதழையும் ஐந்தாண்டுகள் நடத்தினார். அப்போது, ஆசிரியர் பணியிலும் அவருக்கு ஈடுபாடு குறைந்துபோனது. விருப்ப ஓய்வுபெற்று வந்துவிட்டார். ஒரு படைப்பாளி குறித்த சரியான புரிதல் எல்லோருக்கும் வேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.
தென்தமிழக மக்களின் வாழ்க்கையை வரிசைப்படுத்தும் படைப்புகள் இங்கே ஏராளம். ஆனால், தமிழ்ப் படைப்புலகம் அறிந்திராத, தமிழகத்தின் மத்தியப் பகுதியிலுள்ள மக்களின் வாழ்க்கையைத் தன் கதைகளின் வழியே முன்வைத்தவர் இராசேந்திரசோழன். அவர் எழுதிய ‘புற்றில் உறையும் பாம்புகள்’ சிறுகதை அதிகமான எதிர் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஒரு பெண்ணின் உரையாடலாகத் தொடங்கும் அந்தக் கதை, அன்றைய சூழலில் படித்தவர்களை விதிர்க்க வைத்தது. ஓர் ஆணின் பார்வையில் கதைக்கான இறுதித் தீர்வு முன்வைக்கப்பட்டிருந்தாலும், சில பெண்களுக்குத் தங்கள் உடல் மீதிருந்த அதீத கவனிப்பையும் பெருமிதத்தையும் உடைத்துப்போட்ட சிறுகதை. அந்தச் சிறுகதையை இராசேந்திர சோழன் எளிய மனிதர்களின் வாழ்க்கை வழியே சொன்னதுதான் அதன் சிறப்பு.
நிறைவு ஒன்றையே மனிதர்கள் சதா வேண்டுகிறார்கள். ஆனால் மேல்தட்டு, நடுத்தட்டு வர்க்கத்துக்குக் கிடைக்காத நிறைவு எளிய ரிக்ஷாக்காரருக்குக் கிடைத்துவிடுகிறது என்பதை முன்னிறுத்தும் இராசேந்திர சோழனின் சிறுகதை, ‘காசுக்காக அல்ல’.
பஸ் ஸ்டாண்டில் சவாரிக்காகக் காத்திருக்கும் ரிக்ஷாக்காரர் ஒருவர், வாடிக்கையாளர் ஒருவரிடம் பேரம் பேசிப்பேசி நொந்துபோகிறார். பிறகு, வேறு வழியில்லாமல் ‘கொடுக்கிற காசைக் கொடு சார்’ என்ற மனநிலையோடு அவரை ஓர் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அவரை இறக்கிவிட்டுத் திரும்பும் வழியில், ரோட்டில் அவருக்குப் பத்து ரூபாய்த் தாள் ஒன்று கிடைக்கிறது. ஒரு நாளைக்கு ரிக்ஷா மிதித்துச் சம்பாதிப்பதைவிட அதிகப் பணம் அது. அதை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என அவர் கனவு காண்கிறார். கள்ளுக்கடைக்குப் போகலாம். சினிமா பார்க்கலாம். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டுத் தூங்கக்கூடச் செய்யலாம். அந்த நேரத்தில் ஒருவர் அவரிடம் சவாரிக்கு வருகிறார். அவரிடமும் பேரம் நடக்கிறது. ஏதாவது கிடைத்தால் போதும் என்று அவரை ஏற்றிக்கொண்டு ரிக்ஷாவை மிதிக்கிறார். ஆனால், அவரை இறக்கிவிட்டபோது அந்தப் பயணியிடம் போதுமான சில்லறை இல்லை. கொஞ்சம் காசு குறைகிறது. ‘அது பரவாயில்லை’ என்று அதையும் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்கிறார் ரிக்ஷாக்காரர். அப்போது அவர் சொல்லும் வசனம் மிக முக்கியம். ‘எவ்வளவோ துட்டு, எப்படியெப்படியோ செலவு பண்றோம். இந்த ரெண்டு பைசாவுலதானா வந்துடுது... நீதான் சாப்பிடு போ சாமி...’ என்கிறார் ரிக்ஷாக்காரர். அன்றாடப்பாடுகளின் அல்லலை அனுபவிக்கும், உடல் உழைப்பை அதீதமாகச் செலுத்தும் ஒரு தொழிலாளியின் வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகள் அவை. இந்த இடத்தில்தான் தன்னை வெகு அழுத்தமாக நிறுவிக்கொள்கிறார் இராசேந்திர சோழன்.
இராசேந்திர சோழனின் படைப்புலகம் வேறு எந்தப் படைப்பாளியையும் ஒத்திராதது. அவர் விளிம்புநிலை மாந்தர்களுடனேயே பயணித்து, தனக்கான தேடலைக் கண்டடைந்து, அந்தத் தரிசனத்தை வாசகர்களின் முன் வைத்தவர். ஒரு நேர்காணலில் ‘வாழ்க்கையின் பொருள் என்ன?’ என்று கேட்கப்பட்டபோது, இராசேந்திர சோழன், ‘ஒரு மனிதன் வாழும் காலத்தில் எவ்வளவு மனிதர்களை நேசித்தான், எவ்வளவு மனிதர்களால் நேசிக்கப்பட்டான் என்பதன் விடைதான் வாழ்வின் சாரம்’ என்று சொல்லியுள்ளார். இன்றைக்கும் இராசேந்திர சோழனின் படைப்புகளை மட்டுமல்ல, அவரையும் நேசிக்கும், கொண்டாடும் ஒரு கூட்டம் இருப்பதுதான், அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பதாக இருக்கிறது. எழுத்தாளர் இராசேந்திர சோழனின் படைப்புகளால் மட்டுமல்ல, சமூக அக்கறைகொண்ட ஒரு மனிதராகவும் அவர் நேசிக்கப்பட வேண்டிய மனிதரே.