

வண்ணநிலவனின் கதைகளைப் பற்றிய வாசிப்பனுபவக் கட்டுரைகள், அவருடைய தொகுதிகள் வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ச்சியாக வரத் தொடங்கிவிட்டன. அவற்றின் வழியாக அவருடைய முக்கியத்துவம் சார்ந்த அடிப்படைகள் சிறிதுசிறிதாகத் திரண்டுவந்தன. எதார்த்த வாழ்க்கையையும் கண்முன்னால் உழலும் மனிதர்களையும் நேருக்குநேர் பார்த்துத் தன் மதிப்பீடுகளைத் தொகுத்துக் கொள்கிறவர்களால் வண்ணநிலவனுடைய சிறுகதைகளை எளிதாக நெருங்கிச் சென்றுவிட முடிகிறது. ஆனால், ஏற்கெனவே எழுதிவைக்கப்பட்ட கோட்பாடுகள் சார்ந்தும் தத்துவங்கள் சார்ந்தும் இலக்கியப் படைப்புகளை அணுகுபவர்கள் வண்ணநிலவனின் படைப்புகள் முன்னால் தடுமாறி அல்லது சலித்து விலகிச் சென்றுவிடுகிறார்கள்.
வண்ணநிலவனின் கதைகள் அன்பால் நிறைந்தவை எனப் போகிற போக்கில் ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டுச் செல்லும் பலரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர்கள் அது எத்தகைய அன்பு என்று உணரவோ ஆய்வுசெய்யவோ முற்படுவதில்லை. வண்ணநிலவனின் கதைகளில் காணப்படும் அன்பு என்பது, அன்பு மிகுந்த சூழலில் பிறந்து, அன்பார்ந்த மனிதர்களுடன் பழகி, கணந்தோறும் அன்பில் திளைத்து, எட்டிய தொலைவெங்கும் அன்பான மனிதர்கள் மட்டுமே நிறைந்த வாழ்க்கையில் பரிமாறிக்கொள்ளும் அன்பல்ல. அந்த அன்பு, அன்பு என்பதையே மறந்துவிட்ட ஓர் இருண்ட சூழலில் உழன்றுகொண்டே இருப்பவனின் வேட்கைக்கு எங்கிருந்தோ கிடைக்கும் ஒரு வாய்த் தண்ணீர். மனிதனையும் விலங்காக்கி வதைக்கும் வறுமையில் சிக்கி, மீட்சியின்றி வாடிக் கிடப்பவனின் கண்முன்னால் விழுந்து கிடக்கும் மணல்படிந்த நாவற்பழம். புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் மட்டுமே எல்லாத் திசைகளிலும் பெற்றுக் குறுகி நிற்பவன் முன்னால் வந்துநிற்கும் கனிவான முகம்.
வண்ணநிலவனுடைய சிறுகதைகளை வேகவேகமாக அசையும் காட்சிகளாக மனதில் நகர்த்திப் பார்க்கும்போது, அவருடைய ஆரம்பகாலச் சிறுகதை ஒன்றில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி உடனடியாக நினைவுக்கு வருகிறது. பள்ளிப்படிப்பை மட்டும் முடித்த ஒருவன், வேலை தேடிப் போன முயற்சியில் தோற்று, சங்கடமான மெளனமும் கசப்பும் கொண்ட மனநிலையுடன் நள்ளிரவில் குனிந்த தலையுடன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் காட்சியுடன் அக்கதையை ஆரம்பிக்கிறார் வண்ணநிலவன். ஒரு டீக்கடையின் முன்னால் கரித்தண்ணீர் குட்டையாகத் தேங்கிக் கிடக்கிறது. கால் படாமல் அதைத் தாண்டும்போது செருப்பு அறுந்துவிடுகிறது. அறுந்த செருப்பையும் அறாத செருப்பையும் குனிந்து கையில் எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்குகிறான். ஒரு குட்டையைக்கூட அவனால் வெற்றிகரமாகத் தாண்ட முடியவில்லை. வாழ்க்கையை அவன் எப்படித் தாண்டி வெற்றிபெற முடியும்? அவன் அணிந்திருக்கும் செருப்புகளே அவனுக்குத் தடையாக அமைந்துவிடுகின்றன. அவனுடைய குறைந்தபட்சக் கல்வித்தகுதியே அவனுடைய மிகப்பெரிய தடை. தோற்றவன் என எந்த இடத்திலும் அவனைப் பற்றி வெளிப்படையாக வண்ணநிலவன் குறிப்பிடவில்லை என்றபோதும், இப்படி மாற்றிமாற்றி யோசிக்கும்போது தோல்வியடைந்தவனின் உலகத்தையே அவர்எழுதிச் செல்வதாகத் தோன்றியது. ஒரு வகையில், அவருடைய ஒட்டுமொத்தக் கதையுலகமே தோல்வியடைந்தவர்களின் உலகம் என்றுதான் சொல்ல வேண்டும். எங்கோ, எப்படியோ கிட்டும் ஒரு துளி தேனின் சுவையில் தோல்விகளால் விளைந்த கசப்பை மறந்து அவர்களும் வாழத் தொடங்குகிறார்கள்.
தமிழ்நாட்டு வாழ்க்கையின் – குறிப்பாக நெல்லை மாவட்ட வாழ்க்கையின் - பலவிதமான கோலங்களைத் தன் கதைப்பரப்புக்குள் கொண்டுவரும் முயற்சியில் வண்ணநிலவன் அடைந்திருக்கும் வெற்றி மிகமுக்கியமானது. வாய்ப்புகளையும் வாழ்க்கையையும் தொலைத்த அல்லது பலிகொடுத்துவிட்டுக் கையறு நிலையில் நின்ற அறுபதுகளின் காலகட்டம் மிகவும் கசப்பும் வலியும் நிறைந்த ஒன்று. அதன் இலக்கியச் சாட்சியமாக நிற்பவை வண்ணநிலவனுடைய சிறுகதைகள்.
அக்காலகட்டம் ஊட்டிய கசப்புகளால் ஒருவர் தீராத வன்மத்தின்பால் திசைதிரும்பியிருக்கலாம். மிக வேகமாக ஒருவர் அத்தகு முடிவையே எடுத்திருக்க முடியும். ஆனால், அக்கசப்புகள் அனைத்தையும் விழுங்க உதவும் ஒரு துளி தேனாக அன்பைப் பற்றிக்கொண்டு அவர்கள் மீண்டுவந்தனர். வண்ணநிலவன் சிறுகதைகளில் காணும் அன்பில், நாம் அந்த அன்பின் இனிமையையே உணர்கிறோம். வண்ணநிலவனின் சிறுகதைகளில் நாம் காணும் அறுபதுகளின் சித்திரங்களைப் பார்க்கும்போது, ஓர் ஓவியத் தொகுப்பைப் புரட்டிப் பார்த்த அனுபவம் கிடைக்கிறது. ‘காரைவீடு’ என்றொரு சிறுகதை. அதிகாலையில் எழுந்து பேச்சியம்மன் படித்துறைக்குக் குளிக்கச் செல்வதற்குப் புறப்படுகிறார் குடும்பத் தலைவர். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ அவர் ஆசையாகக் கட்டிய வீடு அது. ஆனால், அவர் கனவில் கொஞ்சம்கொஞ்சமாக மண் விழுகிறது. தொடக்கத்திலேயே அவருடைய மனைவி உயிர்நீத்துவிடுகிறாள். வளர்ந்து திருமணம் செய்துகொண்டு வாழும் இரண்டு பிள்ளைகளில் ஒருவரும் திறமைசாலி இல்லை. ஏதோ ஒரு நெருக்கடிக்காக அவர் அந்த வீட்டை விற்க முடிவெடுக்கிறார். அன்று காலையில்தான் விற்பனைப் பத்திரத்தில் அவர் கையெழுத்துப் போட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் அவர் அந்தக் காரை வீட்டின் திண்ணைகளைப் பார்ப்பதுபோல ஒரு காட்சியைச் சித்தரித்திருக்கிறார் வண்ணநிலவன்.
‘கடன்’ என்பது வண்ணநிலவனின் முக்கியமான கதைகளில் ஒன்று. வாடகை வீட்டுக்கு முன்பணம் கொடுக்கத் தன் அத்தையிடம் வட்டிக்கு ஆயிரம் ரூபாய் கடன் வாங்குகிறான் ஒருவன். வட்டிக்கு ஆசைப்பட்ட அத்தை தன் பிள்ளைகளுக்குக்கூடத் தெரியாமல் கொடுக்கிறாள். ஆனால், ஒரே மாதத்தில் திருப்பித் தருவதாகச் சொன்ன தொகையை ஓராண்டாகியும் அவனால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. சங்கடத்தில் அவளைப் பார்ப்பதையே தவிர்த்து ஊருக்குள் நடமாடுகிறான். எதிர்பாராத விதமாக ஒருநாள் அத்தை மரணமடைந்துவிடுகிறாள். அவளுக்குக் கடன் பாக்கி இருக்கிறது என்பதையே அவன் மறைத்துவிடுகிறான். ஆனால், ஆழ்துயிலில் அவளுக்குக் கடன்பட்ட எண்ணம் கனவாக வந்து அவனை ஒவ்வொரு நாளும் அலைக்கழித்தபடி உள்ளது. வண்ணநிலவனின் சிறுகதைகளில் தன்னிச்சையாக வெளிப்படும் காலகட்டத்தின் சுவடுகளைப் படிக்க நேரும்போதெல்லாம், காலகட்டத்தை ஒரு தெய்வமாக மாற்றித் தன்னோடு எடுத்துச் செல்கிறவராகத் தோற்றமளிக்கிறார். காலத்தைத் தெய்வமாக்கி, அத்தெய்வத்தைத் தன் கதைகளில் வீற்றிருக்க வைக்கும் மாபெரும் கலைஞன் வண்ணநிலவன் எனத் தோன்றுகிறது.