தொடக்க காலப் பெண் கதைகள் காட்டும் வேறு உலகம்

தொடக்க காலப் பெண் கதைகள் காட்டும் வேறு உலகம்

Published on

அம்பையின் ‘மானுடம் வெல்லும்’, அ.வெண்ணிலாவின் ‘மீதமிருக்கும் சொற்கள்’, அரவிந்த் சுவாமிநாதனின் ‘விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2’ ஆகிய பெண் சிறுகதைகள் அடங்கிய தொகை நூல்களின் வழியாக ஐம்பதுகளுக்கு முந்தைய பெண் சிறுகதைகளின் தன்மைகளை மதிப்பிடலாம். வடிவ உணர்வு குறித்த சிந்தனை ஐம்பதுகளுக்கு முன்பு எழுதிய பெண் எழுத்தாளர்களிடம் இல்லாமைக்கு, அவர்கள் வளர்ந்த சூழலும் குறுகிய வெளியுலகத் தொடர்புகளும் எனப் பல காரணங்கள் உண்டு. வி.விசாலாக்ஷி அம்மாள், கி.சாவித்திரி அம்மாள், அம்மணி அம்மாள், வை.மு.கோதைநாயகி, எஸ்.கமலாம்பாள், கு.ப.சேது அம்மாள், எஸ்.அம்புஜம்மாள், குகப்ரியை, ஸி.ஆர்.ஸரோஜா, கி.சரஸ்வதி அம்மாள், குமுதினி, சரோஜா ராமமூர்த்தி உள்ளிட்ட பல பெண் எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சூழல்கள் ஒன்றுபோலவே இருந்திருக்கின்றன. பெண் எழுத்தாளர்கள் பலருக்கும் இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது. அவர்கள் தம் கணவரின் ஆதரவுடன் கல்வி கற்றிருக்கின்றனர்; அவர்களது வழிகாட்டுதலில் சிறுகதைகளை எழுதியிருக்கின்றனர்.

தொடக்க காலக் கதைகளில் கற்பிதங்கள்: தொடக்க காலப் பெண் எழுத்தாளர்கள் கணவனுக்குத் தொண்டு செய்வதையே தமக்குக் கிடைத்த வரமாகக் கருதியிருக்கின்றனர்; இதனைத் தம் எழுத்திலும் பிரதிபலித்திருக்கின்றனர். பெண்கள் தியாக மனப்பான்மை கொண்டவர்கள்; கணவருக்காக எதையும் செய்யத் துணிபவர்கள். ஆண்கள் அறிவாளிகள்; முற்போக்குச் சிந்தனை உடையவர்கள் என்பது போன்ற தன்மைகளில் கதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்தியக் குடும்ப மரபு ஆண்களை மையப்படுத்தியுள்ளது. இந்த மையத்துக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் தாங்கள்தான் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம், இவ்வெழுத்தாளர்களின் மனதில் ஆழமாகப் படிந்திருப்பதை அவர்களது பிரதிகளின் வழியாக அறிய முடிகிறது. ஆண்களின் அதிகார மனநிலையையோ அல்லது பெண்களுக்கு எதிரான தொல்மரபுகளையோ விமர்சித்து எழுதினால் சமூகம் ஏற்காது என்ற மனநிலை பல பெண் எழுத்தாளர்களிடம் இருந்ததையே இதுபோன்ற சிறுகதைகள் சுட்டுகின்றன. சில கதைகளில் பெண்கள் தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த வீட்டைவிட்டு வெளியேற நினைக்கிறார்கள். ஆனால், அவர்களால் அதனைச் செய்ய முடியவில்லை. பெண்களுக்குள் படிந்துள்ள ‘குடும்பம்’ என்கிற கூட்டுணர்வு மீண்டும்மீண்டும் அவர்களைப் பழைய வாழ்க்கைக்கே இழுக்கிறது. பெண்களே பணிந்து போக வேண்டும்; அதுவே அவர்களுக்குப் பெருமைதரும் செயலாகும் என்ற பிரச்சாரத்தைப் பெண்களே முன்னெடுத்துள்ளனர். ஆங்காங்கே சில விதிவிலக்குகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஒட்டுமொத்தமாக, கணவனின் இருப்பைக் கடவுளின் இடத்துக்கு நகர்த்தும் வேலையையே இவர்களது கதைகள் செய்திருக்கின்றன. எவ்வளவு உன்னதமான கணவன்மார்கள் ஐம்பதுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கிறார்கள் என்ற வாசிப்பையே இக்கதைகள் தருகின்றன.

திகட்டும் காந்தியப் பிரச்சாரம்: இக்காலகட்டத்தில் எழுதிய பெண்களின் கதைகளில் காந்தியத் தாக்கம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. படித்த உயர் வர்க்கத்துப் பெண்கள் காந்தியத்தின்மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட்டிருக்கின்றனர். வை.மு.கோதைநாயகி, எஸ்.அம்புஜம்மாள் போன்ற பலர் கதராடைகளை அணிந்து, தம்மைக் காந்தியவாதிகளாக அறிவித்துக்கொண்டனர். இது அவர்கள் எழுதிய புனைவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமத்தைக் கொண்டே பொருளாதாரத்தைக் கட்டமைக்க வேண்டும் என்கிற காந்தியின் கிராம ராஜ்ஜிய சிந்தனைக்குப் பல பெண் எழுத்தாளர்கள் புனைவு வடிவம் கொடுத்துள்ளனர். கிராம வாழ்க்கையே சிறந்ததென வலியுறுத்தும் லட்சியவாதக் கதைகள் அதிகளவில் எழுதப்பட்டிருக்கின்றன. பெண்களுக்குரிய முக்கியப் பணியாக ராட்டை சுற்றுதல் கூறப்பட்டுள்ளது. பெண்கள் எளிமையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்னும் குரலும் பல சிறுகதைகளில் ஒலிக்கிறது. புனைவின் ஒரு பகுதியாகக் காந்தியம் வெளிப்படும்போது பிரச்சாரமாகத் தெரியாது; ஆனால், இவர்கள் காந்தியத்தைப் பிரச்சாரம் செய்யவே புனைகதைகளை எழுதியுள்ளனர். இதனால், இக்கதைகள் நீதி இலக்கியத்தின் நவீன வடிவங்களாகக் காட்சி தருகின்றன. இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்தப் போகிறேன் என்ற முன்திட்டமிடல் கதைக்குள் அப்பட்டமாகத் தெரிகிறது. இவர்களது கதைகளில் வரும் பெண்கள் லட்சியவாதிகளாகவும் கிராமத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். கிராம வாழ்க்கையின்மீது நம்பிக்கையிழந்த இளைஞர்களுக்குக் கிராமத்தின் சிறப்பைத் தம் அன்றாட வாழ்க்கையின் மூலமாக அப்பெண்கள் உணர்த்துகிறார்கள்.

செயற்கை விவரிப்புகள்: நீதி இலக்கியங்களும் தொடக்க காலப் புனைகதைகளில் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன. குறிப்பாகத் திருக்குறள். திருக்குறளின் கருத்தை விளக்குவதற்குக் கதைகளை எழுதியிருக்கின்றனர். இதை ஒரு பாணியாகவே பல கதைஞர்கள் தொடக்கத்தில் செய்திருக்கின்றனர். மூடநம்பிக்கை, பால்ய விவாகம், பெண்களின் தியாகம், காந்தியம், குடும்பப் பிரச்சினைகள், பழம்பெருமை, கலாச்சாரம் என எந்தப் பொருள் குறித்து எழுதினாலும் முடிவு மகிழ்ச்சியானதாகவே இருக்க வேண்டும் என்பதில் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றுபடுகிறார்கள். அதாவது, ஒவ்வொரு கதைக்கும் முடிவுரையொன்று தனியாக எழுதப்பட்டிருக்கிறது. சிறுகதை எழுதிய பெண்களில் பலர் வசதியான குடும்பப் பின்புலம் உடையவர்கள். உயர்குடியில் பிறந்தவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இவர்களது குடும்பத்தைச் சார்ந்த ஆண்கள் உயர் பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள். வெளியுலகத் தொடர்பும் தனிமனித வாழ்க்கையில் சமூகம் ஏற்படுத்தும் இடையீடுகளும் இப்பெண்களுக்கு அந்நியமானவையாகவே இருந்திருக்கின்றன. வீட்டு வேலையாட்கள் மூலமாகப் புற உலகை அறிந்தவர்கள். அதனைக் கதைகளாக எழுதியிருக்கிறார்கள். வறுமை குறித்து எழுதினாலும் செயற்கையாக இருக்கிறது. யாருக்கோ நடக்கிறது என்ற எண்ணத்தையே இக்கதைகள் அளிக்கின்றன. துயரமென்றால் என்னவென்றே அறியாத ஒரு சமூகம் ஐம்பதுகளுக்கு முன்பு இருந்திருக்கிறது என்ற தோற்றத்தையும் இப்புனைவுகள் ஏற்படுத்துகின்றன. பெண்கள் அவர்களுக்குக் கிடைத்த வெளிக்குள் செயல்பட்டிருக்கின்றனர். அவர்கள் பார்த்த நிகழ்வுகளையும் சமூகத்தையும் புனைவுகளாக எழுதியிருக்கிறார்கள். அவர்களது புனைவுகள் கணவர்களின் தணிக்கைக்கு உட்பட்டே பிரசுரமாகியிருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் முக்கியமான பிரச்சினைகள் குறித்துக் கதைகள் ஆரம்பித்தாலும் முடிவு வெகுசனத்திற்கு உரியதாக மாறிவிட்டிருக்கிறது. கணவரின் அறிவின்மையைச் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, அவரது மனதைத் தன் அறிவுக்கூர்மையால் மாற்றும் மனைவியின் சாமர்த்தியங்களாகக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

பெண்களுக்கு அமைந்த குடும்பப் பின்னணியே அவர்களை எழுத்தாளராக்கியுள்ளது. இன்றும்கூடப் பெண்கள் சுதந்திரமாக எழுதுவதற்குத் தடைகள் உள்ளன. வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நின்றுதான் பெண்கள் இயங்கியிருக்கிறார்கள்; எழுதியிருக்கிறார்கள். அந்த எல்லையே அவர்களது புனைவையும் தீர்மானித்திருக்கிறது. தன் எழுத்து குடும்பத்தை எவ்விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்பதில் கவனமாகச் செயல்பட்டிருக்கின்றனர். அதனால்தான் அவர்கள் எழுதத் தெரிவு செய்திருக்கும் பொருண்மைகளும் புறவயமானதாகவே இருக்கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in