ஈரோட்டு அடிச்சுவட்டில் தொடரும் நெடும்பயணம்

ஈரோட்டு அடிச்சுவட்டில் தொடரும் நெடும்பயணம்
Updated on
3 min read

நீதிக் கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது தமிழக வரலாற்றின் மிக முக்கியமான திருப்பங்களில் ஒன்று. கல்லூரிப் படிப்பை முடித்துப் பொதுவாழ்வில் அடியெடுத்துவைத்த இளைய தலைமுறையினரின் ஆதரவோடு 1944இல் சேலம் மாநாட்டில் அந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது.

ஆனால், அதற்கடுத்த ஐந்தாண்டுகளிலேயே அந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள், தேர்தல் அரசியலை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பாகத் தனியாகப் பிரிந்து, புதிய கட்சியைத் தோற்றுவித்தனர். அதே சேலம் மாநாட்டில், பள்ளி மாணவராகக் கலந்துகொண்டவர்தான் திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் கி.வீரமணி. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவரது மூத்த சகாக்கள், பெரியாரிடமிருந்து பிரிந்து நின்றபோது, பள்ளி மாணவராக இயக்கத்தில் சேர்ந்த வீரமணி, பெரியாரின் நம்பிக்கைக்குரிய மாணவராக அவரை உறுதியாகப் பற்றி நின்றார்.

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு காட்சிகள் மாறின. தேர்தல் அரசியலை நோக்கி நகர்ந்து, புதிய கட்சியைக் கண்டவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதோடு தங்களது தலைவர் பெரியாருக்கு அதைக் காணிக்கையாக்குவதாகவும் அறிவித்தார்கள். ‘நானே வெட்கப்படும்படியாகிவிட்டது’ என்று பெரியார் வர்ணித்த அந்தத் திருச்சி சந்திப்பு நடந்தபோது, திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பு வீரமணியிடம் இருந்தது.

பொருளியல் துறையில் பல்கலைக்கழகத்தின் முதல் மாணவராகத் தங்கப் பதக்கம் பெற்ற அவர், அதைத் தொடர்ந்து சட்டப் படிப்பையும் முடித்திருந்தார். அவர் படித்த சட்டமும் பொருளியலும் திராவிட இயக்கத்துக்கு இன்றளவும் பலம் சேர்த்துக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் அரசமைப்பு குறித்து ஆழமான புரிதலுடன் அவற்றின் கூறுகளையும் முக்கியமான தீர்ப்புரைகளின் பத்திகளையும் அடிக்கடி மேற்கோள் காட்டி விவாதிக்கும் தமிழக அரசியல் தலைவர்களில் முதன்மையானவர் வீரமணி. சட்டக் கல்லூரி மாணவரைப் போல, அவரது கைகளில் இந்திய அரசமைப்புப் புத்தகம் எப்போதும் இருக்கும். பக்கங்கள்தோறும் முக்கியப் பகுதிகளை வண்ணமிட்டுக் குறிக்கப்பட்ட அடிக்குறிப்புகள், இடையிடையே பல வண்ணங்களில் பக்க அடையாளத் தாள்கள் என அந்தப் புத்தகம், பார்ப்பவரின் ஆர்வத்தைத் தூண்டும். சமூக நீதி உரிமைகளுக்கு நீதிமன்றத்திலும் பொது அரங்கத்திலும் வாழ்நாள் முழுவதும் ஊதியம் பெறாமல் வாதாடிக்கொண்டிருக்கும் வழக்கறிஞர் அவர்.

இந்திய அரசமைப்பு குறித்து ஆங்கில நாளிதழ்களிலும் பருவ இதழ்களிலும் வெளிவரும் கட்டுரைகளை உடனுக்குடன் மொழிபெயர்த்து, அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திவரும் ‘விடுதலை’ நாளேட்டில் வெளியிடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார். பத்திரிகை எழுத்தில் மட்டுமல்ல, சொற்பொழிவாற்றும் மேடைகளிலும் வீரமணி புத்தகங்களோடுதான் பயணிக்கிறார். தனது வாதங்களுக்கு ஆதாரமாக பார்வையாளர் முன்னிலையில் புத்தகங்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக்காட்டிப் பேசும் பெரியாரின் அணுகுமுறையை அவர் இன்றும் கடைப்பிடிக்கிறார்.

ஒரு வாசகராக வீரமணியின் இடைவிடாத வாசிப்பும் உழைப்பும் அதிசயிக்கத்தக்கவை. ஒவ்வொரு நாளும் அவர் எந்த ஊரில் இருந்தாலும் அங்கு கிடைக்கக்கூடிய தமிழ், ஆங்கில நாளிதழ்கள், பருவ இதழ்கள் அனைத்தையும் வாசித்துவிடுவார். அவற்றிலிருந்து உடனுக்குடன் குறிப்புகள் எடுப்பார். சமூக நீதிக்கு எதிரான கருத்துகளை எந்தப் பத்திரிகையில் கண்டாலும் உடனுக்குடன் மறுப்பு எழுதி அறிக்கை வெளியிடுவார்; ஆதரவான கருத்துகள், அன்று மாலை வெளியாகும் ‘விடுதலை’யில் மறுபிரசுரமாகும். சமூக, அரசியல், பொருளாதாரம் குறித்து தமிழ், ஆங்கிலத்தில் வெளியாகும் புதிய புத்தகங்கள் எதுவென்றாலும் உடனடியாகப் படித்து, அதை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதும் அவரது வழக்கமாக இருந்துவருகிறது.

இந்திய அரசமைப்பு உறுதிப்படுத்தியுள்ள சமூக நீதி உரிமைகளை உறுதிப்படுத்தவும் அவற்றை விரிவுபடுத்தவும் அந்த உரிமைகளுக்குப் பாதிப்புகள் ஏதும் நேரக் கூடும் என்ற சூழல் எழும்போது, அவற்றைத் தயக்கமின்றிக் கண்டிக்கவும் எப்போதும் தயார்நிலையில் இருப்பவர் வீரமணி. சமூக நீதித் தளத்தில் இந்தியத் தலைவர்கள் அனைவருடனும் கைகோத்து நிற்பவர். சமூக நீதியே அவருடைய பிரதான கொள்கை.

அதற்காக யாருடனும் கைகோக்க அவர் தயங்குவதில்லை. யாரையும் விமர்சிக்கவும் தயங்குவதில்லை. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் முடிவெடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்களை நடத்தினார். அம்முடிவை எம்ஜிஆர் திரும்பப் பெற்றுக்கொண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தியபோது, கண்டனக் கூட்டங்களுக்குப் பதிலாக, நன்றி அறிவிப்புக் கூட்டங்களை நடத்தினார்.

பின்பு, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 69% இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டபோது, அவரை வாழ்த்தி ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டத்தை வழங்கினார். அதற்கான அரசமைப்புத் திருத்தத்திலும் வீரமணியின் பங்கு குறிப்பிடத்தக்கது. அன்று ஜெயலலிதாவைப் பாராட்டி எந்தக் காரணங்களுக்காகப் பட்டம் அளித்தாரோ, அதே காரணங்களுக்காக இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினை, ‘சமூக நீதியின் சரித்திர நாயகர்’ என்று பாராட்டுகிறார்.

நெருக்கடிநிலை காலகட்டத்தில் மிசா சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுச் சென்னை மத்திய சிறையில் கடும் சித்ரவதைகளுக்கு ஆளானவர் வீரமணி; இன்றைய முதல்வர் ஸ்டாலினுடன் சிறையின் அறைகளைப் பகிர்ந்துகொண்டவர். அவரோடு சேர்ந்து கொடூரமான தாக்குதலை அனுபவித்தவர். இருவருக்கும் இடையிலான நெருக்கத்துக்கு அவர்கள் பெற்ற விழுப்புண்களும் ஒரு காரணம்.

வீரமணியின் நீண்ட, நெடிய அரசியல் வாழ்வைத் திரும்பிப்பார்த்தால், சமூக நீதியே தலையாய தத்துவமாக அவரை வழிநடத்தி வந்திருப்பதைப் புரிந்துகொள்ளலாம். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அங்கீகாரம் அளித்ததற்காகப் பாஜக அரசைப் பாராட்டினார். அதேவேளை, அந்த ஆணையத்துக்குப் போதுமான அதிகாரங்கள் அளிக்கப்படவில்லை என்று விமர்சிக்கவும் செய்தார்.

தமிழக அரசியல் களத்திலும் திமுக, அதிமுக இரண்டையும் வெவ்வேறு காலங்களில் அவர் ஆதரித்துள்ளார். 2001இல் அதிமுகவுக்கு ஆதரவாகப் பெரும் கூட்டணி அமைந்ததில் வீரமணியின் பங்கு மிக முக்கியமானது. அன்று பாஜக கூட்டணியிலிருந்த திமுகவை வீழ்த்துவதற்கு அவர் வகுத்த வியூகம் வெற்றியைப் பெற்று ‘ராஜகுரு’ என்ற பெருமையைத் தேடித் தந்தது.

இன்று, பாஜகவின் கைப்பாவையாக மாறிவிடக் கூடாது என்ற அறிவுறுத்தலை அதிமுக தலைவர்களுக்குத் தொடர்ந்து அளித்துவருகிறார். அரசியல் பயணத்தில் நிலையான நண்பரும் இல்லை, பகைவரும் இல்லை என்பது வழக்கம். தேர்தல் அரசியலுக்கு வெளியில் நின்றபடி, கொள்கையின் பெயரால் அதே அணுகுமுறையை அவர் பின்பற்றிவருகிறார்.

படிப்பறிவும் பட்டறிவும் பெற்ற அறிஞர்கள் பலரிருக்க, இளைஞரான வீரமணியைத் தனது பிரச்சார ஏட்டுக்கு ஆசிரியராக நியமித்தார் பெரியார். அவரது தீர்க்கதரிசனம் பலித்துவிட்டது. அத்துடன், பெரியாருக்கு முன்பே ஒன்பது வயதில் வீரமணியை மேடையேற்றிய கடலூர் ஆசிரியர் திராவிட மணியின் தீர்க்க தரிசனமும்கூட நிறைவேறிவிட்டது. டிசம்பர் 2 – கி.வீரமணி 90ஆவது பிறந்த ஆண்டு தொடக்கம் - ம.இரா.மேகநாதன், தொடர்புக்கு: editpage@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in