

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வழியாக மருத்துவ சிகிச்சைகள், உளவியல் ஆலோசனைகளை நாடும் போக்கு அதிகரித்துவருவது குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஷங்கர் (36) என்பவர், மன அழுத்தத்துக்கு இன்ஸ்டகிராம் வழியாக உளவியல் சிகிச்சை எனும் பெயரில், சஞ்சனா (28) என்பவர் மூன்றேகால் லட்சம் ரூபாய் வரை வசூலித்து ஏமாற்றியதாகப் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை ரத்துசெய்யக் கோரிய ‘நல சிகிச்சையாளர்’ சஞ்சனாவின் வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, ‘சமூக ஊடகங்களில் பொதுமக்களிடம் செல்வாக்கு செலுத்தும் தெரபிஸ்ட்கள் பலரும் போலிகளாக இருக்கிறார்கள். குறிப்பாக, ஏராளமானோர் உளவியல் சிகிச்சை அளிப்பதாகக் கூறுகிறார்கள். இவர்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் அரசு உடனடியாக ஒழுங்குமுறை விதிகளை உருவாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
இன்றைக்கு ஏராளமான மாற்று சிகிச்சை முறைகள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளன. ஆனால், அவர்களில் முறைப்படி பயிற்சிபெற்று, பதிவுசெய்து சிகிச்சை அளிக்கிறவர்கள் குறைவு. எவ்வித மருத்துவப் பயிற்சியும் இல்லாமல் பாரம்பரியச் சிகிச்சை முறை, இயற்கை வைத்தியம், மாற்று மருத்துவம் என்ற பெயர்களில் அறிவியலுக்குப் புறம்பான சிகிச்சை முறைகளில் பலர் ஈடுபடுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் அறிவியலுக்கு அல்லது நவீன மருத்துவத்துக்கு எதிரான தகவல்களைப் பரப்புவது, தடுப்பூசிக்கு எதிரான மனநிலையை மக்களிடையே உருவாக்குவது, உடற்பயிற்சி, உடல் எடை குறைப்பு - உணவுக் கட்டுப்பாடு தொடர்பான பரிந்துரை, பால்வினை நோய்கள், குழந்தையின்மை ஆகியவற்றுக்கான சிகிச்சை, உளவியல் ஆற்றுப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இன்னும் சிலர் நீரிழிவு நோயை ஒரே வாரத்தில் தீர்ப்பது, எளிய மருந்துகள் மூலம் புற்றுநோயிலிருந்து பூரண குணம் அளிப்பது போன்ற சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளுடன் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் சிகிச்சைகளையும் பரிந்துரைக்கின்றனர்.
இதுபோன்ற போலி மருத்துவச் சிகிச்சையாளர்கள் / தெரபிஸ்ட்களின் தாக்கத்தால் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் முறையும் சமீப காலமாக மக்களிடையே கவனம்பெறத் தொடங்கியுள்ளது. 2018இல் திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவருடைய கணவர் யூடியூப் காணொளியைப் பார்த்துப் பிரசவம் பார்க்க முயன்றதில், அந்தப் பெண் பலியான சம்பவம், சமூக ஊடகங்களில் கொட்டிக்கிடக்கும் போலி சிகிச்சை முறைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை உணர்த்தும். சில நாட்களுக்கு முன்பு செங்காந்தள் செடியின் கிழங்கைச் சாப்பிட்டு வாலிபர் ஒருவர் மரணமடைந்ததற்கும் இதுபோன்ற சமூக ஊடக வழியிலான போலி மருத்துவ ஆலோசனைகளே காரணம்.
எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் குழு இருப்பதைப் போல, அனைத்து வகை மாற்றுமருத்துவ முறைகளுக்கும், சமூக ஊடகங்களின் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்குவோருக்கும் அரசு உறுதியான கண்காணிப்புஏற்பாடுகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டியது அவசியம். இது பொதுமக்களின்ஆரோக்கியத்துடனும் நோய்ப் பரவலுடனும் நேரடியாகத் தொடர்புகொண்ட விஷயம் என்பதால் அரசு விரைந்து செயல்பட வேண்டும்.