

சீனாவின் மேற்கு மாநிலங்களில் ஒன்று சின்ஜியாங்; அதன் தலைநகர் உரும்கி. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்த நகரம் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கில் இருக்கிறது. இதன் அடுக்ககம் ஒன்றில் நவம்பர் 24 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பத்துப் பேர் இறந்துபோயினர்.
தீயணைப்புப் படையினர் வருவதற்குத் தாமதமாயிற்று என்றனர் சிலர்; வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களால் பூட்டிய கதவுகளைத் தாண்டி வெளியேற முடியவில்லை. இரண்டுக்கும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளே காரணம் என்றனர் சமூக ஊடகர்கள். அண்டை அயலில் வசித்தவர்கள் பதிவிட்ட காணொளிகள் வேகமாய்ப் பரவின. அடுத்த நாள் நகரவாசிகள் அணிதிரண்டனர். மாண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கூடவே, அரசு ஊரடங்கைக் கைவிட வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இது உரும்கியோடு முடியவில்லை.
இரண்டு நாட்களில் ஷென்ஜன் நகரில் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அடுத்து பெய்ஜிங், நான்ஜிங், தொடர்ந்து பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் திரண்டனர். எல்லோருடைய கோரிக்கையும் ஒன்றுதான்; ‘வேண்டும் விடுதலை, வேண்டாம் ஊரடங்கு’. அரசை எதிர்த்துப் பேரணிகள் நடத்துவதென்பது சீனாவில் எளிதல்ல. எனினும், மாணவர்களும் மக்களும் வீதிக்கு வந்திருக்கிறார்கள்.
என்ன நடக்கிறது?: சீனா ‘கோவிட் சுழியம்’ (Zero Covid) எனும் மாதிரியைக் கடைப்பிடிக்கிறது. எங்கேனும் நோய் தட்டுப்பட்டால் ஊரிலுள்ள அனைவரும் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்படும். அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தேடப்பட்டு அவர்களும் பரிசோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள்.
ஊரடங்கு பிறப்பிக்கப்படும். அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் பள்ளிகளும் சந்தைகளும் மூடப்படும். டிசம்பர் 2019இல் வூஹான் நகரில் கோவிட் முதன்முதலாகப் பரவத் தொடங்கியபோது, வூஹானைத் தலைநகராகக் கொண்ட ஏழு கோடி மக்கள்திரள் அடங்கிய ஹூபை மாநிலம் முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று குறைந்ததும் ஊரடங்கு படிப்படியாக விலக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாகச் சீனாவில் கரோனா தலைகாட்டும் இடங்களில் எல்லாம் இது தொடர்கிறது.
சீனாவின் பல்வேறு ஊர்களில் வசிக்கும் சுமார் 40 கோடி பேர், இப்போதும் ஊரடங்கின்கீழ் இருக்கிறார்கள் என்கின்றன மேற்கு ஊடகங்கள். அறிவியல்பூர்வமான அணுகுமுறை, ஆய்வு அடிப்படையிலான கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு உலகின் பெரும்பாலான பாகங்களில் கோவிட் தீவிரமில்லாத நோயாகிவிட்டது. ஆனால், சீனா தன் மாதிரியை இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை.
மற்ற ‘மாதிரிகள்’: அமெரிக்கா, சீனாவுக்கு நேரெதிரான போக்கைக் கடைப்பிடித்தது. முகக்கவசம், தனிமனித இடைவெளி, கைத் தூய்மை முதலான தற்காப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா அக்கறை கொள்ளவில்லை. ஊரடங்கைப் பற்றிப் பேச்சே இல்லை. ஆனால், தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பிலும் உற்பத்தியிலும் பயன்பாட்டிலும் அக்கறை செலுத்தியது. தடுப்பூசி ஆய்வுக்கு ஏராளமாகச் செலவிட்டது.
ஃபைசர், மாடர்னா, ஜான்சன் முதலான தடுப்பூசிகளை உருவாக்கியது. குடிமக்களுக்கு அவற்றை இலவசமாகச் செலுத்தியது. குறைந்தபட்சம் 70% மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டால் திரள் எதிர்ப்புச்சக்தி உருவாகும் என்றார்கள் வல்லுநர்கள். 2021 ஆகஸ்டில் 70% அமெரிக்கர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது. இப்போது 70% மக்களுக்கு மூன்று ஊசிகள் போடப்பட்டுவிட்டன. இதற்குத் ‘தணிப்பு மாதிரி’ (mitigation model) என்று பெயர்.
‘தணிப்பு மாதிரி’க்கும் ‘கோவிட் சுழியம்’ மாதிரிக்கும் என்ன வேறுபாடு? மனித உயிர்கள்! கரோனாவால் அமெரிக்கா இழந்த உயிர்களின் எண்ணிக்கை 10.75 லட்சம். உலகம் முழுமையிலும் இந்த இழப்பின் எண்ணிக்கை 66.4 லட்சம். உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒருவர் சீனர். இந்தக் கணக்கின்படி, சீனா 13 லட்சம் பேரை இழந்திருக்க வேண்டும். ஆனால், கரோனாவின் கொடுங்கரத்துக்குச் சீனாவில் பலியானவை 5,300 உயிர்கள் மட்டுமே. இதற்குக் காரணம், ‘கோவிட் சுழியம்’ எனும் மாதிரிதான்.
ஆனால், சீனா அதற்குக் கொடுத்துவரும் விலை மிக அதிகம். வேலையின்மை கழுத்தை நெரிக்கிறது. பணப்புழக்கம் குறைந்துவிட்டது. மக்கள் செலவழிக்க அஞ்சுகிறார்கள். சந்தை சரிந்துகொண்டிருக்கிறது. 5.2%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி 3.9%இல் நிற்கிறது. சீனாவின் பொருட்களுக்காகக் காத்திருக்கும் பல நாடுகளிலும் வணிகம் முடங்கியிருக்கிறது. முக்கியமாக, சீனர்கள் பொறுமை இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு வேலை, தொழிலுக்குத் திரும்ப வேண்டும். கடை கண்ணிக்குப் போக வேண்டும். பிள்ளைகள் படிக்க வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் ஊரடங்கு விலக்கப்பட வேண்டும். ஆனால், அரசு விட்டுக்கொடுக்க மறுக்கிறது. ஏன்?
சீனாவின் நிலை: கிழக்காசிய நாடுகளும் சிலவும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் ‘கோவிட் சுழியம்’ மாதிரியைத்தான் கடைப்பிடித்தன. ஆனால், மக்களுக்குத் திரள் எதிர்ப்புச்சக்தி வந்ததும் கடும்போக்கு ஊரடங்கிலிருந்து அவை மெல்ல வெளியே வந்துவிட்டன.
‘இந்திய மாதிரி’ இந்த இரண்டு மாதிரிகளுக்கும் இடைப்பட்டது. இந்தியா இழந்த உயிர்கள் 5.31 லட்சம் (இந்த அதிகாரபூர்வ எண்ணிக்கையை உலக சுகாதார மையம் ஏற்கவில்லை). நாளது வரை இந்தியாவில் 67% பேருக்கு இரண்டு ஊசிகள் போடப்பட்டிருக்கின்றன. அதாவது, வல்லுநர்கள் குறிப்பிடும் திரள் எதிர்ப்புக்கான இலக்கை அடைவதற்கு முன்பே தடைகள் இங்கே தளர்த்தப்பட்டுவிட்டன.
இந்தியாவில் கணிசமானோர் கரோனா தாக்கி மீண்டதால், அவர்களுக்கு எதிர்ப்புச்சக்தி உருவாகிவிட்டதும் இதற்கு ஒரு காரணம். சீனர்கள் ஊரடங்குச் சிமிழுக்குள் பாதுகாக்கப்பட்டதால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு. எனினும் சீனாவிலும் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விகிதம் 70%ஐத் தாண்டிவிட்டது. ஆனாலும் சீன அரசு ஏன் இன்னும் தடைகளை விலக்க மறுக்கிறது?
சீனாவில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் சரி பாதிப்பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. 60-79 வயதினரில் 40% பேர் தடுப்பூசி வளையத்திற்குள் வரவில்லை. அதனால், ஊரடங்கு விலக்கப்பட்டால் மூத்த குடிமக்களின் மரணம் அதிகரிக்கும் என்பது சீன அரசின் அச்சமாக இருக்கலாம் என்கிறது பிபிசி. அடுத்து இன்னொரு அச்சமும் தெரிவிக்கப்படுகிறது. சீனா பயன்படுத்தும் தடுப்பூசிகள் இரண்டு: சைனோவாக், சைனோபார்ம்; இரண்டும் சீனத் தயாரிப்புகள். 2021 இறுதியில் மேலெழும்பி உலகை உலுக்கிய ஒமைக்ரான் எனும் மாற்றுருவை இந்தச் சீனத் தடுப்பூசிகளால் எதிர்கொள்ள முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள் சிலர். சீனா மறுக்கிறது. ஆனால், சீனாவுக்கு இந்த உண்மை தெரியும். வெளிநாட்டுத் தடுப்பூசிகளை வாங்க அதன் போலி கௌரவம் இடம்கொடுக்கவில்லை என்கின்றன மேற்கு ஊடகங்கள்.
உலக சுகாதார மையம், சீனா தனது ‘கோவிட் சுழியம்’ எனும் சித்தாந்தத்தை மாற்றிக்கொள்ள வலியுறுத்திவருகிறது. ஆனால் சீனாவோ அதை இறுகப் பற்றியிருக்கிறது. அதற்காகப் பெரும் விலையையும் கொடுத்துவருகிறது. அறிவியலை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும், அறிவியல்பூர்வமாக செயல்படுவதாகவும் கூறிவரும் சீன அரசு தனது நிலைப்பாட்டைத் தளர்த்துமா? இப்போதைக்கு அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. - மு.இராமனாதன் எழுத்தாளர், பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com