

நாடே எதிர்பார்த்திருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (டிசம்பர் 1) நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல் 27 ஆண்டு கால பாஜக ஆட்சி தொடர வழிவகுக்குமா அல்லது முற்றுப்புள்ளி வைக்குமா எனும் விவாதங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
தேர்தலில் எதிரொலிக்கும் முக்கியப் பிரச்சினைகள் என்னென்ன என குஜராத்திகளிடம் கேட்டால் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தேர்வு முறைகேடுகள் என அடுக்குவார்கள். ஆனால், பாஜகவைத் தவிர்த்துவிட்டு வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பீர்களா எனக் கேட்டால், ‘நம்பிக்கையளிக்கும் வகையில் வேறு கட்சி இல்லை’ என்பதே பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் பலவீனம் தங்களுக்கு வலுசேர்க்கும் எனும் நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது; அதற்கான வியூகத்தையும் வலுவாக அமைத்திருக்கிறது.
விமர்சனங்களை மறைக்கும் வியூகங்கள்: சௌராஷ்டிரா - கட்ச் பகுதிகள், தெற்கு குஜராத் ஆகியவற்றில் 89 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. சௌராஷ்டிரா - கட்ச் பகுதிகளில், பாடிதார் எனப்படும் படேல் சமூகத்தினர் அதிகம் வாழ்கின்றனர். 2017 தேர்தலில் இந்தப் பகுதிகளில் உள்ள 30 தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியது. இடஒதுக்கீடு கோரி ஹர்திக் படேல் தலைமையில் பாடிதார் சமூகத்தினர் நடத்திய போராட்டங்களின் விளைவாக, பாஜகவுக்கு எதிராக அப்பகுதி மக்கள் அணிதிரண்டிருந்தனர்.
தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஹர்திக் படேல் அக்கட்சிக்கு வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் குமுறிக்கொண்டே இருந்தவர், கட்சித் தலைமை கண்டுகொள்ளாததால் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். எனவே, இந்த முறை பாடிதார் வாக்குகள் பாஜகவுக்கே பெருவாரியாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், அதே பாடிதார் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் மோர்பி மாவட்டத்தில்தான் நூற்றுக்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கிய தொங்குபால விபத்தும் நேர்ந்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக எழுந்திருக்கும் விமர்சனங்கள் தேர்தல் வெற்றியைப் பாதிப்பதைத் தவிர்க்கும் முயற்சியில் மோர்பி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ பிரிஜேஷ் மெர்ஜாவுக்குப் பதில், முன்னாள் எம்எல்ஏ காந்திலால் அம்ருதியாவை நிறுத்தியிருக்கிறது பாஜக. விபத்தைத் தொடர்ந்து மச்சூ நதியில் நீந்தியபடி, மீட்புப் பணிக்காகச் சென்றதன் மூலம் காந்திலாலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்கிறார்கள்; அவர் அருகிலேயே முழங்கால் அளவு நீரில் சிலர் நடந்துசென்றது கேலிக்குள்ளானது தனிக்கதை.
ஆனால், விமர்சனங்களுக்கு முகங்கொடுத்து முதல்வர் தொடங்கிவேட்பாளர் வரை எல்லாவற்றிலும் மாற்றம் செய்வதுதான் பாஜகவின் பலம். இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வரவால், வாக்குகள் பிரிந்து தனக்குத்தான் வெற்றிவாய்ப்பு அதிகமாகும் எனக் கணித்திருந்தாலும், பிரச்சாரத்தில் பாஜக அசட்டையாக இருக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்லாமல், அமித் ஷா, ஜே.பி.நட்டா, யோகி ஆதித்யநாத் எனப் பலரும் மும்முரமாகப் பிரச்சாரம் செய்வதே இதற்கு சாட்சி.
முதல்வர் முகமாக முன்னிறுத்தப்படும் தற்போதைய முதல்வர் பூபேந்திர படேலுக்குத் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. இந்த முறையும் மோடியின் பிரம்மாண்ட பிம்பம்தான் பாஜகவின் துருப்புச்சீட்டு. இத்தனை ஆண்டுகளில் குஜராத்துக்குச் செய்த பணிகள் என்ன என்பதையெல்லாம் தாண்டி, ஜன சங்க காலத்திலிருந்து முன்வைக்கப்பட்ட, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுதல், காஷ்மீர் 370ஆவது சட்டக்கூறு ரத்து, முத்தலாக் தடை போன்ற வாக்குறுதிகள் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதைச் சொல்லி வாக்கு கேட்கிறது பாஜக.
கரோனா தடுப்பூசிகளைப் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா விநியோகித்ததுகூட பாஜகவின் சாதனையாக முன்வைக்கப்படுகிறது. 2034இல் ஒலிம்பிக்கை அகமதாபாதில் நடத்தும் அளவுக்கு மைதானங்களை அமைக்கப்போவதாகவும் அக்கட்சி வாக்குறுதி கொடுத்திருக்கிறது. கூடவே, வழக்கமான இந்துத்துவ அஸ்திரங்களையும் வாக்குறுதிகளாக ஏவி எதிர்க்கட்சிகளின் வெற்றிவாய்ப்பைக் குறைக்க முயல்கிறது. இலவசம் குறித்த விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் மீது எறிந்தபடியே, அக்கட்சியும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
மும்முனைப் போட்டி: நீண்ட காலத்துக்குப் பின்னர் குஜராத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த தேர்தலில் ஒரு இடத்தில்கூட வென்றிராத ஆம் ஆத்மி கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு வந்ததைத் தனது சாதகமான அம்சமாகக் கருதுகிறது. இரட்டை என்ஜின் அல்ல, புதிய என்ஜின்தான் குஜராத்துக்குத் தேவை என்று அர்விந்த் கேஜ்ரிவால் முழங்குகிறார். டெல்லி மாடலை அக்கட்சி முன்வைக்கிறது; காங்கிரஸோ ராஜஸ்தான் மாடலை முன்வைக்கிறது. ஆனால், ஏற்கெனவே பிரபலமான குஜராத் மாடல் பாஜகவிடம் இருக்கிறது.
அது ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பம் என விமர்சனங்கள் இருந்தாலும், அதைத் தகர்க்க காங்கிரஸ் தரப்பிலிருந்து காத்திரமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. கூடவே, ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைக்கவிருக்கும் வாக்குகள் காங்கிரஸ் ஆதரவு வாக்குகளாகத்தான் இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. 2002இல் பெரும் கலவரத்தைச் சந்தித்த கோத்ரா போன்ற பகுதிகளில்கூட, இந்த முறை காங்கிரஸுக்குப் பதிலாக ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கலாம் என்கிற எண்ணம் முஸ்லிம்கள் மத்தியில் வலுப்பெற்றிருக்கிறது. காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்உள்ளிட்ட பலர் பாஜகவுக்குத் தாவிவிட்டனர். குறிப்பாக, செளராஷ்டிரா பகுதியைச் சேர்ந்தகாங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பலர் கட்சி மாறிவிட்டனர். ஆம் ஆத்மி கட்சியிலும் காங்கிரஸார் பலர் சேர்ந்திருக்கின்றனர்.
பாஜகவுக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையிலான பிரச்சினைகளைத் தொகுத்து மக்கள் பார்வைக்குக் கொண்டுசெல்வதற்கான வியூகங்கள் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை. பஞ்சாப் தேர்தலில் வென்ற உற்சாகத்தில் ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்ட தீவிரப் பிரச்சாரமும் முன்வைத்திருக்கும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும் அக்கட்சிக்கு குஜராத்தில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தரக்கூடும். அதேவேளை, கருத்துக்கணிப்புகளில்கூட அக்கட்சிக்கு மூன்றாவது இடம்தான் கிடைத்திருக்கிறது.
அமித் ஷாவே வெளிப்படையாகச் சொல்வதுபோல, குஜராத்தில் இன்னமும் காங்கிரஸுக்கெனக் கணிசமான வாக்கு வங்கி இருக்கவே செய்கிறது. ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அவற்றை அறுவடை செய்வதில் அக்கட்சி ஆர்வம் காட்டவில்லை. ‘ஒற்றுமை நடைப்பயண’த்துக்கு நடுவே குஜராத் சென்று பிரச்சாரம் செய்ததைத் தாண்டி, இந்தத் தேர்தலில் ராகுல் காந்தியிடம் பெரிய வியூகங்கள் இல்லை. இதற்கிடையே, டெல்லி மாநகராட்சித் தேர்தல் வேறு குறுக்கிடுவதால் ஆம் ஆத்மி கட்சியின் கவனம் அந்தப் பக்கமும் குவிந்திருக்கிறது. தவிர, அக்கட்சியின் வேட்பாளர்களில் பலர் புதுமுகங்கள். இவை அனைத்தும் பாஜகவுக்கு வலுசேர்க்கும் அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.
மொத்தத்தில், கோல் கீப்பரே இல்லாத கால்பந்து மைதானத்தில் கோல் போடத் தயாராக இருக்கிறது பாஜக. அர்ஜெண்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியாவைப் போல அதிசயங்கள் நிகழ்த்த எதிர்க்கட்சிகளிடம் வியூகங்கள் இல்லை என்பதே நிதர்சனம். எனினும், விளையாட்டைப் போலவே தேர்தலிலும் முடிவுகள் மாறலாம். யார் கண்டார்! - வெ.சந்திரமோகன்
தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in