

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் கொலீஜியம் அமைப்பு முக்கியப் பங்காற்றுவதைப் போல, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விஷயத்திலும் அது போன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசமைப்பு அமர்வு விசாரித்துவருகிறது.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்குப் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு சுதந்திரமான அமைப்பை உருவாக்குவது தொடர்பான கருத்தை இந்த அமர்வு வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும், தேர்தல் ஆணையர்கள் குறுகிய காலம் மட்டுமே பதவியில் இருப்பதைக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. தேர்தல் ஆணையர்கள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள்?
தோற்றம்: தேர்தல் ஆணையம் என்பது இந்திய அரசமைப்புக் கூறு 324இன்படி, தேர்தல்களை நிர்வகிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சி பெற்ற ஓர் அமைப்பு. தேர்தல் ஆணையம் இந்திய அரசமைப்பின் நிரந்தர அமைப்பாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. இது 1950 ஜனவரி 25 அன்று செயல்பாட்டுக்குவந்தது. நாட்டில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டப்பேரவைகளின் தேர்தல்களைச் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்திமுடிப்பதும் அதற்கான முன்தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுவதுமே இதன் பணி.
தேர்தல் ஆணையர் நியமனம்: அரசமைப்புக் கூறு 324இன் பிரிவு 2, தேர்தல் ஆணையர்களைக் குடியரசுத் தலைவர் நியமிக்கும் அதிகாரத்தைப் பேசுகிறது. தேர்தல் ஆணையரைக் குடியரசுத் தலைவர்தான் நியமிக்கிறார் என்றாலும், மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றே இந்த நியமனம் நடைபெறும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே தேர்தல் ஆணையர் பதவிக்கு நியமிக்கப்படுவார்கள். 1950 முதல் தேர்தல் ஆணையரைக் கொண்ட அமைப்பாகவே ஆணையம் செயல்படத் தொடங்கியது. நாட்டின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக சுகுமார் சென், 1950 மார்ச் 21 அன்று பொறுப்பேற்றார்.
மூவர் அமைப்பு: ஒரே ஒரு ஆணையரைக் கொண்டிருந்த தேர்தல் ஆணையம், 1989 அக்டோபர் 16 முதல் கூடுதல் ஆணையர்களைக் கொண்ட அமைப்பானது. ஆனால், 1990 ஜனவரி 1ஆம் தேதியோடு மிகக் குறுகிய காலத்திலேயே கூடுதல் ஆணையர்கள் நியமனம் முடிவுக்குவந்தது. பிறகு, நாடாளுமன்றத்தில் தேர்தல் ஆணையர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இத்திருத்தம் 1993 அக்டோபர் முதல், தேர்தல் ஆணையத்தில் கூடுதலாக இரண்டு ஆணையர்களை நியமிக்க வழிசெய்கிறது. (துணிச்சலான பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்திய டி.என்.சேஷனின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் நடைபெற்றதாக அப்போது சர்ச்சை எழுந்தது). எனவே, அப்போதிருந்து தேர்தல் ஆணையம் 3 ஆணையர்களைக் கொண்ட அமைப்பாகச் செயல்பட்டுவருகிறது. அதில் ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பார். முடிவெடுப்பதில் கருத்து வேறுபாடுகள் தோன்றினால் பெரும்பான்மை வாக்குகள் மூலம் இறுதி முடிவு எட்டப்படும்.
பதவிக் காலம்: தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை. இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை ஆணையர் பதவியில் இருப்பார். கடைசியாக 6 ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் இருந்தவர், நாட்டின் 10ஆவது தலைமைத் தேர்தல் ஆணையரான டி.என்.சேஷன் (1990-96). தேர்தல் ஆணையர்கள் பதவியில் இருக்கும் கால அளவு, 2004இலிருந்து தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பணி ஓய்வு வயதை நெருங்குவோர் தலைமைத் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுவதுதான் இதற்குக் காரணம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையர்களையே தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி உயர்த்தும் நடைமுறை நிலவுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையரை ஏன் நேரடியாக நியமிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பதவி நீக்கம்: தலைமைத் தேர்தல் ஆணையரைத் தன்னிச்சையாக யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. தவறான நடத்தை உள்ளிட்ட காரணங்களுக்காகத் தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பதவிநீக்கத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் அடிப்படையிலேயே குடியரசுத் தலைவர், தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்கம் செய்ய முடியும். இது தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அரசமைப்பு வழங்கியுள்ள சட்டப் பாதுகாப்பாகும்.
இப்போதைய நடைமுறையில் தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையர்களைக் குடியரசுத் தலைவர் பதவிநீக்கம் செய்யமுடியும். தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப் பாதுகாப்பு மற்ற இரண்டு ஆணையர்களுக்கும் வழங்கப்பட்டால் தேர்தல் ஆணையம் சுதந்திரத்துடன் செயல்பட முடியும் என்னும் வாதம்முன்வைக்கப்படுகிறது. - தொகுப்பு: டி.கார்த்திக்