

தமிழ்நாடு அரசின் ஒரு முக்கிய முன்னெடுப்பாக ‘மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி’கள் நடந்து வருகின்றன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் மாணவ - மாணவியரும் பங்கேற்கும் மாபெரும் கலாச்சாரத் திருவிழாவாக இது நிகழ்ந்துவருகிறது. அறிவைப் பரவலாக்கும் பணியை யார் செய்தாலும் வரவேற்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு செய்யும்போது, அது இன்னும் சக்திமிக்க முறையில் சென்று சேரும்.
சுவாசித்த புத்தகங்கள்: நூலக இயக்கத்தின் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்க வேண்டும். புத்தகக் காட்சிகளுக்குள் சென்று மீளும்போதெல்லாம் ‘நூலக இயக்கத்தின் தந்தை’ எஸ்.ஆர்.ரங்கநாதனின் நினைவும் மாட்டுவண்டியில் புத்தகங்களைச் சுமந்து சென்று, கிராமம் கிராமமாகப் புத்தகங்களை விதைத்த அய்யங்கி வெங்கட்ரமணய்யாவின் நினைவுகளும் வந்து தாக்குகின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூலகராகப் பணியாற்றிய காலத்தில் (1924) எஸ்.ஆர்.ரங்கநாதன் நூலகக் கல்வி பெறுவதற்காக இங்கிலாந்து சென்றார்.
அங்குள்ள பல கிளை நூலகங்களுக்கும் சென்று பணியாற்றிக் கற்ற அனுபவத்தின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டிலும் பொது நூலகத் துறையை உருவாக்கச் சட்ட முன்வரைவைத் தயாரித்தார். தனிநபர் வீடுகளிலும் கோயில் சார்ந்த மடங்களிலும் கட்டுண்டு இருட்டில் கிடந்த நூல்கள், பொது நூலகங்களுக்கு வந்து வெளிச்சம் பெற ரங்கநாதனே காரணம். கணினிப் பயன்பாடு வரும்வரை ரங்கநாதன் உருவாக்கிய கோலன் பகுப்பு முறையே உலகெங்கும் நூலகங்களில் நூல்களைப் பகுத்து வைக்கப் பின்பற்றப்பட்டது. நூலக இயக்கத்துக்கென அவர் உருவாக்கிய ஐந்து விதிகள் வருங்காலத்துக்கும் பொருத்தமானவை.
1. நூல்கள் பயன்பாட்டுக்கானவை 2. ஒவ்வொரு வாசகருக்கும் அவரது நூல் 3. ஒவ்வொரு நூலுக்கும் அதன் வாசகர் 4. வாசகருடைய நேரத்தைச் சேமிக்க வேண்டும் 5. நூலகம் ஒரு வளரும் உயிரினம். நூலகம் என்பதைப் புத்தகங்களைச் சேமிக்கும் இடமாகவும் பாதுகாக்கும் இடமாகவும் மட்டுமே பார்த்த நிலையில், ஓர் உடைப்பை ஏற்படுத்தியது முதல் விதி. வாசிக்கப்படாத புத்தகம் ஓர் உயிரற்ற ஜடம்தான். வாசகரின் கண்ணும் மனமும் அதன்மீது படும் வேளையில்தான் புத்தகம் உயிர்பெற்று எழுகிறது.
சுதந்திரக் கல்வி: நம் ஊஞ்சலை இன்னும் கொஞ்சம் இழுத்துவிட்டால் அது சமணர்கள் நடத்திய பள்ளிகளில் போய் நிற்கிறது. முந்நூறு ஆண்டுக் காலம் தமிழ் நிலப்பரப்பில் அறிவு இயக்கத்தை நடத்திய சமணம், ஆண்டுதோறும் ஞானபூசை என்ற ஒன்றை நடத்தி, ஏட்டுச்சுவடிகளை வெளியில் எடுத்து, ஒருவர் வாசிக்கப் பலர் அதை மீண்டும் சுவடிகளில் எழுதிப் பிரதி எடுத்து, நூல்கள் அழிந்திடாமல் காத்தது. கல்விக்கென்று ‘வாக் தேவி’ என்கிற தெய்வத்தையும் சமணம் பிற்காலத்தில் உருவாக்கியது.
வைதிகத்தின் சரஸ்வதி தேவிக்கு முந்தையது வாக் தேவி. ஞானபூசைக்கு மாற்றாக வைதிகம் உருவாக்கியதே சரஸ்வதி பூஜை என்பார் தமிழறிஞர் தொ.பரமசிவன் ( ‘பண்பாட்டு அசைவுகள்’ நூலில்). ஞானபூசையன்று நூல்கள் பொதுவெளிக்கு வந்தன. ஞானதானம் செய்வதற்காகப் பிள்ளைகளை சமணத் துறவிகள் தாங்கள் உறைவிடமாகக் கொண்டிருந்த மலைகளுக்கு அழைத்துச் சென்றனர். துறவிகள் பள்ளி கொண்ட கற்படுகையில் குழந்தைகளை அமரவைத்தே பாடம் நடத்தினர். அங்கிருந்து வந்த சொல்தான் கல்விக்கூடத்துக்கான ‘பள்ளிக்கூடம்’ என்னும் சொல்.
‘கல்லூரி’ என்பது இன்று உயர்கல்வி நிலையத்தைக் குறிக்கிறது. ‘கல்லூரி நற்கொட்டிலா’ (995) என்ற சீவக சிந்தாமணித் தொடரிலிருந்து இந்தச் சொல் பெறப்பட்டது. சிந்தாமணி சமண நூலாகும். தென் தமிழ்நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சமணப் பள்ளிகள் இருந்தன. இங்கே ஆண் துறவிகளைப் போலவே பெண் துறவிகளும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். ‘கனகவீரக் குரத்தியர்’, ‘பட்டினிக் குரத்தியடிகள்’ எனக் கல்வெட்டுகள் ‘குரத்தி’ (குரவன் என்பதன் பெண்பாற் சொல்) எனும் பெயரோடு இவர்களைக் குறிக்கின்றன. ‘மாணாக்கன்’, ‘மாணாக்கி’ ஆகிய சொற்களும் சமணக் கல்வெட்டுகளில் தாம் பெரும்பாலும் காணப்படுகின்றன. பெண் துறவிகளிடத்தில் மாணாக்கர்களும் பயின்ற செய்தியைக் கழுகுமலைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். எனவே, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் குறிப்பாகப் பெண் கல்வி வளர்ச்சிக்கும் சமணம் தொண்டாற்றிய செய்தியை உணரலாம்.
அன்றே அனைவருக்கும் கல்வி: சமணத்தின் அளவுக்குப் பிற மதங்கள் கல்வியைப் பெருமைப்படுத்தவில்லை. கல்வி கற்பதற்குப் பிறப்பினை (சாதியை) ஓர் அளவுகோலாகச் சமணம் கொண்டதில்லை. எனவே, அனைவருக்குமான கல்வி என்ற கோட்பாடு சமணத்திலிருந்து பிறந்ததாகவே கொள்ள வேண்டும்.’ (பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்) ஆடைகளைத் துறந்து திசைகளையே ஆடைகளாகக் கொண்டமை, புலால் உண்ணாமை, காமம், காதல், களிப்பு போன்றவற்றைத் துறத்தல் எனப் பல காரணங்களாலும் வைதிக சமயங்களின் தாக்குதல்களாலும் சமணம் அழிந்திருந்தாலும், ‘அறிவுப்பரவல்’ என்கிற முற்போக்கான அம்சத்தை, அதிலிருந்து நாம் எடுத்துக்கொள்வது அவசியம்.
ஒவ்வொரு புத்தகக் காட்சியும் ஒரு ‘ஞானபூசை’தான். மாநில அரசு ஒதுக்கீடு செய்யும் தொகை சிறியதுதான். மாவட்ட ஆட்சியர் முன்முயற்சி எடுத்து, நன்கொடையாளர்கள் மூலமே இப்புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பிரம்மாண்டமான விழாக்களோடு, கூடவே குறைந்த பொருட்செலவில் இன்னும் தாலுகா - கிராம அளவில் புத்தகத் திருவிழாக்களை நடத்த அரசு திட்டமிட வேண்டும்.
சகல பிற்போக்கான மூடப்பூசைகளையும் தகர்த்தெறியும் வல்லமை இந்த புத்தகத் திருவிழாக்கள் என்னும் ஞானபூசைகளுக்கு உண்டு என்பதை அரசும் மக்களும் ஆழ்ந்து உணர வேண்டும். - ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர் - பண்பாட்டுச் செயல்பாட்டாளர் தொடர்புக்கு: tamizh53@gmail.com