

இன்றைய அவசர உலகில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குழந்தைகளுக்குச் சிறப்பான வாழ்க்கையை அமைத்திட முடியும் என்ற நிலையில், குழந்தைகளுக்கு வெகுஜன ஊடகங்களும் திறன்பேசி உள்ளிட்ட கருவிகளும் இரண்டாம் பெற்றோர்களாகப் பரிணமித்துள்ளன. ஏனென்றால், குழந்தைகள் ஒரு நாளின் நீண்ட நேரத்தை இந்த ஊடகங்களிலும் சாதனங்களிலும்தான் செலவழிக்கின்றனர்.
குழந்தைகளுக்கும் ஊடகத்துக்குமான தொடர்பை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம்: ஒன்று, குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். இவை, குழந்தைகளின் சிந்தனையை நேர்மறையாகத் தூண்டும் அறிவியல்பூர்வமான, கல்வி-சமூக முன்னேற்றத்துக்கான நிகழ்ச்சிகளாக அல்லாமல், எதிர்மறைச் சிந்தனையை ஊக்குவிப்பதாகவும் ஏமாற்றுதல், பொய்கூறுதல், வயதுக்கு மீறிய, வரம்பு மீறிய பேச்சுகளைப் பேசுதல் போன்ற செயல்பாடுகளைப் பெருமைக்குரியனவாக முன்வைப்பதாகவும் உள்ளன.
இரண்டு, திறன்பேசியும் சமூக ஊடகங்களும் குழந்தைகளின்மீது ஏற்படுத்தும் தாக்கங்கள். திறன்பேசி மூலம் இணையத்திலிருந்து அவர்களுக்குத் தேவையற்ற தகவல்களையும் படங்களையும் அவர்களை அறியாமலேயே பார்க்க நேரிடுகிறது. மேலும், திறன்பேசி விளையாட்டுகளால் சில நேரம் உயிருக்கே ஆபத்து விளைகிறது. அவர்கள் மன-உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆக்கபூர்வமான எந்த வேலைகளிலும் ஆர்வமிழக்கும் நிலை ஏற்படுகிறது.
மூன்று, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை வீட்டின் பெரியவர்களோடு குழந்தைகளும் பார்க்க நேரிடுகிறது. இம்மாதிரியான தொடர்களின் வசனங்களும் காட்சியமைப்புகளும் குழந்தைகளுக்கு ஏற்றவையாக இல்லை. காதல் காட்சிகள் மிகவும் விரசமாகவும் உணர்வுகளை தேவையின்றித் தூண்டக்கூடியனவாகவும் அமைக்கப்படுகின்றன. இவ்வாறான காட்சிகள் பதின்பருவக் குழந்தைகளுக்கு உளவியல் சிக்கலை உண்டாக்குகின்றன.
நான்கு, சினிமா எனும் வெகுஜன ஊடகம், குழந்தைகளைப் பல ஆண்டுகளாகப் பாதித்துக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களில் காட்டப்படும் வாழ்க்கைமுறையை உண்மை என நம்பும் குழந்தைகள் இன்றளவும் ஏராளமாக இருக்கின்றனர். தங்களை ஒரு கதாநாயகனைப் போல் முன்னிறுத்திக்கொள்ளும் தன்மை இவர்களிடம் காணப்படுகிறது. இவற்றுடன், அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற அழுத்தத்தினால் பெரும்பான்மையான குழந்தைகள், குழந்தைப் பருவத்தில் அனுபவிக்க வேண்டிய விளையாட்டு, கலந்துரையாடல், பெற்றோருடன் இருப்பது போன்ற அவசியமான வாய்ப்புகளை இழக்கின்றனர்.
ஆகவே, ஒரு குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய உண்மையான மகிழ்ச்சிக்குப் பதிலாகச் செயற்கையான இயந்திரங்களையும் ஊடகங்களையும் கொண்டு இயற்கையான சூழலை நாம் கெடுத்துக் கொண்டுள்ளோம். குழந்தைகளுக்கான வளமான சமூகத்தை உருவாக்குவதற்குப் பதில் பிரச்சினைகளுடன் கூடிய குழந்தைகளையே நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.
வளமான, வலிமையான இளைஞர் சமூகத்தினை உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கான ஒருங்கிணைந்த முயற்சியைப் பெற்றோர், ஆசிரியர், அரசு, ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், வருங்காலச் சமூகமும், ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட சமூகமாகத் தொடர வேண்டியிருக்கும். சிறப்பான இளைஞர் சமூகத்தை உருவாக்க, இன்றைய குழந்தைகள்மீது நாம் முதன்மைக் கவனம் செலுத்தத் தொடங்க வேண்டியது அவசியம். - மா.அறிவானந்தன், உதவிப் பேராசிரியர், தமிழ்ப் பல்கைலக்கழகம், தொடர்புக்கு: arivanandan.iitm@gmail.com