

ஆனந்த குமாரசாமியைக் கலைத்திறனாய்வாளர், அல்லது கலை வரலாற்றாசிரியர்; ஆழ்ந்து அகன்ற பலதுறைப் படிப்பாளி என்று என்னவெல்லாம் சொன்னாலும் அவரைப்பற்றி ஏதோவொன்று சொல்லப்படாமலேயே விடுபட்டுப்போய்விடுகிறது. அவர் எழுதியவற்றை என்னதான் ஆராய்ந்து சொன்னாலும் இன்னும் எதுவோ வரையறுக்க முடியாமல் இருக்கிறது. அவர் நம் எல்லா வரையறைகளையும் மிஞ்சி நிற்கிறார்.
-ரவீந்திரநாத் தாகூர்.
இந்தியக் கலை வரலாற்று ஆசிரியர், இந்தியக் கலைக் கோட்பாட்டு விளக்க ஆசிரியர், தத்துவ விளக்க ஆசிரியர், சமூக விமர்சகர், மொழியியல் அறிஞர் என்று ஆனந்த குமாரசாமியைப் பல கோணங்களில் பார்க்கலாம். அவர் வாழ்க்கையை முன் நாற்பது, பின் முப்பது எனப் பிரிக்கலாம்.
அவர் வாழ்ந்த காலத்தில், ஏகாதிபத்தியத்தின் மேலைநாட்டு நாகரிகம் உச்சகட்டத்தில் இருந்தது. அவர்களது அரசியல் வலிமையாலும் அறிவியல் வளர்ச்சியை அவர்களுக்குத் தக்கப் பயன்படுத்திக்கொண்டதாலும் கீழைநாடுகள் அடிமையாகிக் கிடந்தன. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஆள்பவர்களாக அவர்களே இருந்ததால், எது பற்றியும் அவர்கள் சொல்வதே சரியென்றும் அதுவே உண்மையென்றும் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியச் சிற்பங்கள், செப்புப் படிமங்களைக் கலையே இல்லை என்றனர் அவர்கள். அந்தக் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அந்தச் சூழலில்தான், அவை நேரில் பார்த்துச் செய்யப்பட்டவை அல்ல, தத்துவத்துக்கு வடிவம் கொடுக்கப்பட்டவை என ஆனந்த குமாரசாமி விரிவாக விளக்கினார். அப்போது ‘கிழக்கு கிழக்குதான்... மேற்கு மேற்குதான். இரண்டும் ஒன்றுசேரா’ என்ற கொள்கையே மேலோங்கியிருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் கீழைநாடுகள் குறித்து அவர்கள் கொண்டிருந்த கருத்துகளை, தவறான தீர்மானங்களை, பார்வைகளை, கூற்றுகளை ஆனந்த குமாரசாமி மிகச்சரியான ஆதாரங்களோடு மறுத்தார். பிறப்பின்வழியாகத் தாயின் மூலம் அவர் மேலை நாட்டவராகவும் தந்தைவழியில் கீழை நாட்டவராகவும் இருந்ததால் அவரின் கருத்துகளை, ஆதாரங்களை, சிந்தனைகளை அறிவுலகால் புறக்கணிக்க முடியவில்லை.
ஆனந்த குமாரசாமியின் நூல்கள்: அவரது தந்தையார் முத்துக்குமாரசாமி ஓர் ஈழத் தமிழர். இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர். பிரிட்டிஷ் அரசின் நைட்ஹுட் கெளரவத்தைப் பெற்ற முதல் ஆசியர். அவரது தாய் எலிசெபத் க்ளே பீபி ஓர் ஆங்கிலேயப் பெண். ஆனந்த குமாரசாமியின் வாழ்க்கையினுடைய முதல் நாற்பதாண்டு காலகட்டத்தில் வெளியான அவரது முக்கியமான நூல்கள், ‘மத்திய கால சிலோன் கலை’ (1908), ‘இந்தியக் கைவினைஞன்’ (1909), ‘கலையும் தேசியமும்’ (1910), ‘இந்திய வரைபடங்கள்’ (1912), ‘விஸ்வகர்மா, இந்தியச் சிற்பங்கள், சில எடுத்துக்காட்டுகள்’ (1914), ‘இராஜபுதனத்து ஓவியங்கள்’ (1914), ‘சிவானந்த நடனம்’ (1910). பிந்தைய முப்பதாண்டு காலத்தில் வெளியானவை: ‘இந்திய மற்றும் இந்தோனேசியக் கலை வரலாறு’ (1927), ‘கலையில் இயற்கை மாற்றம்’ (1936), ‘வேதங்கள் – புதிய அணுகுமுறை ஆய்வு’ (1937), ‘காலமும் ஊழியும்’ (1946).
சிவானந்த நடனம்: மலேசியாவில் வாழ்ந்த துரைராஜ் சிங்கம், ஆனந்த குமாரசாமியின் எழுத்துகளைக் காலவரிசைப்படி, ஆயிரம் பக்கங்கள் கொண்ட இரண்டு பாகங்களாக வெளியிட்டிருக்கிறார். ஆனந்த குமாரசாமி எழுதிய நூல்கள் மொத்தம் 90. இவை தவிர 96 சிறு அறிக்கைகள், 999 கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், கலை சம்பந்தமாக அவர் எழுதிய ஆயிரத்துக்கும் மேலான கடிதங்கள், இன்னபிறவும் உள்ளன. இவற்றில் சில இன்னும் அச்சில் வராதவை. அவருடைய ஆங்கில நடை அறிஞர்களால் இன்றும் போற்றப்படுகிறது. பொதுவாக, அவர் எழுதியவற்றை மேலோட்டமாகப் படிக்க இயலாது. அவ்வளவு ஆழ அகலம் கொண்டவை அவரது எழுத்துகள்.
ஆனந்த குமாரசாமி என்றாலே பலரது நினைவுக்கு வரும் நூல் ‘சிவானந்த நடனம்’. பதினான்கு கட்டுரைகள் கொண்ட சிறு நூல் அது. ஆடல்வல்லானான நடராசனின் தாண்டவத்துக்குத் தத்துவ விளக்கம் சொல்லும் ஒரு கட்டுரை இந்நூலில் உள்ளது. மற்ற கட்டுரைகள் வெவ்வேறு பொருட்களைப் பற்றியவை. நடராசனின் தத்துவத்துக்குச் சைவத் தமிழ் நூல்களிலிருந்தே அவர் விளக்கம் அளித்திருக்கிறார். அது அவரின் ஆழ்ந்த சைவத் தமிழ் இலக்கிய அறிவைப் புலப்படுத்தும். இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்ற ரோமன் ரோலந்து, இந்நூலுக்கு ஒரு முன்னுரை வழங்கியுள்ளார். அதில் ஆனந்த குமாரசாமி என்ற ஆளுமையின் பன்முகத்தன்மையை எடுத்துக் கூறியுள்ளார்.
அமெரிக்கத் தஞ்சம்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒளிப்படக் கலைஞரான எதல் மேரி பார்ட்ரிட்ச்-ஐ, 1902இல் ஆனந்த குமாரசாமி திருமணம் செய்துகொண்டார். அவருடனான மணமுறிவுக்குப் பிறகு, மூன்று முறை மணமுறிவும் மறுமணமும் நடைபெற்றன. இரண்டாவது மனைவி எதல் ரிச்சர்ட்சன்வழி நாரதா, ரோகிணி என இரு மகள்களும் நான்காவது மனைவி டோனா லூயிசா ரன்ஸ்டின்வழி ராமா குமாரசாமியும் ஆனந்த குமாரசாமியின் வாரிசுகளாவர்.
தான் சேகரித்த கலைப்பொருட்களைக் கொண்டு இந்தியாவில் ஓர் அருங்காட்சியகம் நிறுவி, இந்தியாவிலேயே தங்கிவிட அவர் விரும்பினார். ஆனால், சூழல் அமையவில்லை. பாஸ்டன் நுண்கலை அருங்காட்சியகத்தின் இந்தியப் பிரிவின் காப்பாளராகவே முப்பதாண்டு காலம் அமெரிக்காவில் அவர் வாழ்ந்தார். ஆனந்த குமாரசாமி பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர அரசால் கட்டாயப்படுத்தப்பட்டபோது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தன்னாட்சி இல்லாத நிலையில், தன்னால் அது இயலாதென மறுத்தார். அதனால், பிரிட்டிஷ் அரசு மூவாயிரம் பவுண்ட் பிணைத்தொகை பெற்றுக்கொண்டு அவரை நாடுகடத்தியது. அவருடைய வீடும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதனால் அவர் 1917இல் தன் கலைப்பொருள் சேமிப்புடன் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார்.
தன் இறுதி நாட்களை இமயமலைச் சாரலின் அடிவாரத்திலிருக்கும் அல்மோராவில் கழிக்கவே அவர் விரும்பினார். ஆனால், காலம் அவரது விருப்பத்தை நிறைவேற்றித் தரவில்லை. கலைகளின் மேல் மாறாக் காதல் இருந்ததுபோலவே, அவருக்குப் பூச்செடிகள் வளர்ப்பதிலும் பெருவிருப்பம் இருந்தது. தமது வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு 1947 செப்டம்பர் 9 அன்று அந்த இடத்திலேயே காலமானார். இந்தியக் கலைச் செல்வங்களைக் கண்டுணர ஆத்மார்த்தமாக வழிகாட்டிய அவர், அமெரிக்காவின் மஸசூசெட்ஸ் மாகாணத்தின் நீதம் நகரில், தன் இல்லத்தில், தான் நேசித்த பூச்செடிகளுக்கு மத்தியில் இறந்ததும் ஒரு செய்தியைச் சொல்லிச் சென்ற ஓர் அரிய நிகழ்வுதான்.
ஆனந்த குமாரசாமி 75ஆம் நினைவு ஆண்டு