ஃபிஃபா பேசப்படாத மறுபக்கம்!

ஃபிஃபா பேசப்படாத மறுபக்கம்!
Updated on
2 min read

உலகின் மிகப் பிரம்மாண்டமான விளையாட்டு நிகழ்வான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி, மேற்காசிய நாடான கத்தாரில் நவம்பர் 20 தொடங்கி டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. கால்பந்து விளையாட்டின் ‘நிர்வாக’ அமைப்பான உலகக் கால்பந்து சம்மேளனம் (FIFA), ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து ஊக்கம்பெற்று, 1930 தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்திவருகிறது (இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946 ஆண்டுகளில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவில்லை).

உலகில் அதிகம் பார்க்கப்படுவதும் விளையாடப்படுவதுமான கால்பந்தாட்டத்தின் கௌரவமிக்க நிகழ்வாக, உலகக் கோப்பை திகழ்கிறது. 2006 உலகக் கோப்பைப் போட்டிகளை அனைத்து வழிகளிலும் கண்டுகளித்த பார்வையாளர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26.29 பில்லியன் (2629 கோடி); அதன் இறுதிப் போட்டியைப் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 71.51 கோடி.

கசப்பான உண்மை: பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் தலா இரண்டு முறையும் உருகுவே, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், சீலே, இங்கிலாந்து, அர்ஜெண்டினா, ஸ்பெயின், அமெரிக்கா, ஜப்பான்-தென் கொரியா (இணைந்து), தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் என 17 நாடுகள் இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தியுள்ளன. 2022 உலகக் கோப்பை கத்தாரில் நடைபெற்றுவரும் நிலையில், 2026 உலகக் கோப்பையை கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நடத்த உள்ளன; இதன்மூலம் உலகக் கோப்பைப் போட்டிகளை மூன்று முறை நடத்திய முதல் நாடு என்கிற பெருமையை மெக்ஸிகோ பெறும்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான ஓர் உலகளாவியப் பெருநிகழ்வாக இந்த உலகக் கோப்பை அமைந்திருக்கிறது. கால்பந்தாட்ட ரசிகர்களைத் தாண்டி பொதுமக்களிடமும் இயல்பான உற்சாகத்தை ஏற்படுத்தும் இத்தகைய நிகழ்வுகள், தற்காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் ஏற்றுக்கொள்ள முடியாத மனித உரிமை மீறல்களும் நம்ப முடியாத ஊழல்களும் நிறைந்திருக்கின்றன. உலகக் கோப்பையை நடத்துவதற்குக் கடந்த 12 ஆண்டுகளாக கத்தார் தயாரான முறையைப் பார்க்கையில், உலகக் கோப்பையில் உதைக்கப்படுவது வெறும் கால்பந்து அல்ல, எண்ணற்ற மனித உயிர்களும் கோடிக்கணக்கானோரின் கால்பந்துக் கனவுகளும்தான் என்பது கசப்பான உண்மையாக உள்ளது.

2022 உலகக் கோப்பையை நடத்துவதற்கான வாய்ப்பை கத்தார் 2010இல் கைப்பற்றியபோது, அந்நாட்டில் இருந்தது சர்வதேசத் தரத்திலான ஒரே ஒரு கால்பந்தாட்ட மைதானம் மட்டுமே. கால்பந்து விளையாடுவதற்கு ஏற்ற தட்பவெப்பநிலை இல்லாத, வெப்பம் மிகுந்த நாடான கத்தார், ஒருமுறைகூட உலகக் கோப்பை போட்டித் தொடருக்குத் தகுதிபெற்றதில்லை என்பது கூடுதல் தகவல். 2018இல் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கு 18 பில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டது; நான்கு ஆண்டுகள் இடைவெளியில் கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பைக்குச் செலவிடப்பட்டிருக்கும் தொகையின் உத்தேச மதிப்பு: 220 பில்லியன் டாலர்கள்.

சிதைவின் வீச்சு: ‘நவீனக் கால்பந்து’ இந்தப் புள்ளியை வந்தடைந்தது எப்படி? கால்பந்து, வெறும் விளையாட்டு மட்டும்தானா என்கிற கேள்விகளுக்கு, ஃபிஃபாவின் கடந்த ஐம்பது ஆண்டு கால வரலாற்றின் பக்கங்களில் விடை தேடுகிறது, நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஆவணப்படத் தொடரான ‘FIFA Uncovered’. மிக எளிய பின்புலத்துடன், கால்பந்தாட்டத்தின் ஆன்மாவை உலகின் கடைக்கோடி ரசிகருக்கும் கடத்தும் நோக்கில் தொடங்கி நடத்தப்பட்டுவந்த ஃபிஃபாவின் உலகக் கோப்பை உள்ளிட்ட கால்பந்து முன்னெடுப்புகள், ஜோ ஹாவலாஞ்ச் என்கிற பிரேசிலியரின் வருகையால் சிதையத் தொடங்கின.

ஃபிஃபாவின் 7ஆவது தலைவராக 1974இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாவலாஞ்ச், அவரது வலதுகரமாகச் செயல்பட்ட செப் பிளாட்டரைத் தலைமைப் பொறுப்புக்கு அமர்த்திய 1998 வரையிலான காலகட்டத்திலும் அதன்பிறகும் ‘ஆடிய ஆட்டங்கள்’ இந்த ஆவணப்படத் தொடரில் பட்டவர்த்தனமாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளன; பிளாட்டரின் கதை ஹாவலாஞ்சின் கதையை விஞ்சுகிறது. 2015 வரை தலைவராகத் தொடர்ந்த பிளாட்டருக்கு, ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக ஃபிஃபாவின் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் தடைவிதிக்கப்பட்டது, இதன் உச்சம்.

நிஜ அதிர்ச்சி: கால்பந்தாட்டத்தை வணிகமயமாக்கியது தொடங்கி, உலகக் கோப்பைப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமைகள்வரை ஹாவலாஞ்ச், பிளாட்டர் உள்ளிட்ட சக்திவாய்ந்த வெகு சிலரின் நலனுக்காகக் கால்பந்தாட்டம் சீரழிக்கப்பட்ட கதையைப் புலனாய்வு இதழாளர்கள், வழக்கறிஞர்கள், (பிளாட்டர் முதற்கொண்டு) ஃபிஃபாவின் முன்னாள் ‘பெருந்தலை’களின் ‘வாக்குமூலங்கள்’ வழியாக இத்தொடர் ஆவணப்படுத்தியிருக்கிறது. நடப்பு உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டங்களில், சவுதி அரேபியா அர்ஜெண்டினாவையும், ஜப்பான் ஜெர்மனியையும் வென்றது கால்பந்து ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ‘உண்மையான ஆட்டம்’ மைதானத்துக்கு வெளியேதான் இத்தனைக் காலமும் ஆடப்பட்டிருக்கிறது என இந்த ஆவணப்படம் உணர்த்தும் உண்மையைவிடப் பெரிய அதிர்ச்சி, கால்பந்தாட்டத்தில் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in