

கவிஞர் நாரணோ ஜெயராமன் கடந்த வாரம் சென்னையில் காலமாகிவிட்டார் (77). தமிழ்க் கவிதை உலகில் உத்வேகமாக இளைஞர்கள் கவிதை எழுதப் புறப்பட்ட 70-களில் கவிதை உலகுக்கு அறிமுகமானவர் இவர். அந்தக் காலகட்டக் கவிதைகளின் அக நெருக்கடிகளையே இவரது கவிதைகளும் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இவரது கவிதைகளின் தொகுப்பை ‘வேலி மீறிய கிளை’ எனும் தலைப்பில் க்ரியா பதிப்பகம் 1976இல் வெளியிட்டது.
வல்லிக்கண்ணனுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றுத் தந்த ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூலில் நாரணோ ஜெயராமன் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேராசிரியர் ஆல்பர்ட், சுந்தர ராமசாமி போன்ற ஆளுமைகள் பலரும் இவரது கவிதைகள் குறித்து எழுதியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமியின் ‘பல்லக்குத் தூக்கிகள்’ தொகுப்புக்கு இவர்தான் முன்னுரை. கவிஞர் பிரமிள் இவரது கவிதைகளுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒதுங்கியிருந்தவர். இவரது கவிதைகளை வைத்து நடந்த விவாதங்களில் பிரமிள் உட்படப் பலரும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இவர் அதற்கெல்லாம் வெளியே இருந்தவர்.
இவருடைய கவிதைகள் அரசியலும் நம்பிக்கைகளும் விழுமியங்களும் அற்ற ஒரு காலத்தில் நிகழ்பவை. ‘நீர் முத்தின்/ஜாலத்தைப் போல்/காலத்தை/கணங்கணமாய்/கைக்கொள்’ என்ற அவரது கவிதையைப் போல் கணங்கள் தரும் அனுபவங்களால் உந்தப்பட்டுக் கவிதைகள் படைத்தவர் இவர். ரயில், வீடு, கதவு, பூட்டு, கண்ணாடி எனப் பல பொருட்கள் இந்தக் கவிதைகளுக்குள் வருகின்றன. கவிதை சிருஷ்டிக்கும் உலகமும் நமக்கு அருகிலானதாக இருக்கிறது. ஆனால், அது சமூகத்துக்குச் சற்று மேலே இருக்கிறது. கவிதைக்குள் உள்ள அகமும், வியாபகம் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
நகுலனைப் போல் மிக எளிய சொற்களால் ஆன குறுங்கவிதையில் வேதாந்தப் பொருளைப் பொதிந்துவைத்திருக்கிறார். ‘நீண்ட நாளாய் எதிர்பார்த்த/மழை பெய்தது – ஆனால்/எங்கள் வீட்டு சாய்ந்த/தென்னைமரங்களின்/முதுகு நனையவில்லை.’ ‘அளவு’ என்று தலைப்பிட்ட இந்தக் கவிதையை அவரது கவிதைகளின் இப்பண்புக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
‘அமர்ந்திருக்கும் வரப்பு/வரப்பின் மேல் சிலுக்கும் செடி/அரக்குச் சிவப்பாய்/ஒளிரும்/மேற்குச் சிதறல்கள்/அண்ணாந்த கண்/தொலைவில் அதிசயிக்க/வேகம் கொள்ளும் பறவைகள்/வடப்புறத்தில் நீர்த்தடங்களாய்/முயங்கிக் கிடக்கும் உருவங்கள்’ என்ற கவிதையில் இவர் உருவாக்கும் காட்சிகள் இவரது கவிச் சித்தரிப்புக்கு உதாரணம்.
1976-க்குப் பிறகு 2018இல் இவரது இரண்டாவது தொகுப்பு ‘நாரணோ ஜெயராமன் கவிதைகள்’ என்ற பெயரில் டிஸ்கவரி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. கவிதைகளுடன் இவர் தொடர்ச்சியாகச் சிறுகதைகளும் எழுதியுள்ளார். அவரது கதைகள், ‘வாசிகள்’ என்ற தலைப்பில் அழிசி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. மீனம்பாக்கம் அ.ம.ஜெயின் கல்லூரியில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் இவர்.