

கோவையில் கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம்கூடக் கடந்திருக்கவில்லை. அதற்குள், அதே பாணியில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்திருப்பது அதிர்ச்சியையும் பீதியையும் அதிகரித்துள்ளது. பொதுவாக, அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தென்னிந்தியாவில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள இச்சம்பவங்கள், தீவிரவாதிகளின் இலக்காக இப்பகுதிகள் மாறிவருகின்றனவா என்ற கேள்வியை வலுவாக எழுப்பியிருக்கின்றன.
நவம்பர் 19 அன்று மங்களூருவில் டவுன் பம்ப்வெல் அருகே நாகுரி என்ற இடத்தில், தீவிரவாதி ஷாரிக் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருந்த இடத்தை அடைவதற்கு முன்பாகவே அதிர்வுகள் ஏற்பட்டு, குக்கர் வெடிகுண்டு வெடித்திருக்கிறது என்று புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து ஒரு தீய நோக்கம் நடைபெறாமல் போயிருப்பதை உணர முடிகிறது. கோவை சம்பவம்போல அல்லாமல், மங்களூரு குண்டுவெடிப்பில் தீவிரவாதச் செயலை அரங்கேற்ற முயன்ற ஷாரிக் உயிருடன் பிடிபட்டிருக்கிறார்.
மங்களூரு சம்பவத்துக்கு முன்பாகத் தமிழகத்தில் கோவை, நாகர்கோவில், கேரளத்தில் ஆலுவா எனப் பல்வேறு பகுதிகளுக்கும் ஷாரிக் சுற்றியிருப்பதும் அவருக்கு சிம் கார்டு வாங்க உதவிய உதகையைச் சேர்ந்த சுரேந்திரன் என்கிற உடற்கல்வி ஆசிரியர் கைதாகியிருப்பதும் இச்சம்பவத்துக்கான கவனத்தைத் தமிழகத்திலும் குவித்திருக்கிறது. மேலும், ஷாரிக் என்ஐஏ-வால் தேடப்பட்டுவந்தவர் என்பது, உளவு-புலனாய்வு அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அதிகரித்திருக்கிறது.
உலகையே அச்சுறுத்திவரும் ஐ.எஸ். உட்படப் பல பயங்கரவாத அமைப்புகளினால் ஈர்க்கப்பட்டவர் ஷாரிக் என்பதை உணர்த்துவதாக, குக்கர் வெடிகுண்டுடன் அவர் காட்சியளிக்கும் ஒளிப்படம் உள்ளது. எனவே, ஷாரிக்கின் உண்மையான பின்புலம் அம்பலப்படுத்தப்பட வேண்டும். கோவை, மங்களூரு என இரண்டு தாக்குதல்களிலும் தொடர்புடைய ஜமேஷா முபின், ஷாரிக் ஆகியோரின் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரும் முழுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
கோவை கார் வெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்ஐஏ குழுதான், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கையும் விசாரிக்கிறது. எனவே, ஒன்றுபோலவே சந்தேகிக்கத் தூண்டும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு இடையேயான செயல்பாட்டுரீதியான தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். தென்னிந்தியாவின் பெருநகரங்கள், சில தீவிரவாதத் தாக்குதலுக்குக் கடந்த காலத்தில் இலக்காகியிருக்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பெரியளவில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறவில்லை. தற்போது, அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த நிகழ்வுகள் தென்னிந்தியாவையும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காக்கும் முன்னோட்டம் என்றே கருத இடமளிக்கின்றன.
தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. ஆனால், மத அடிப்படைவாதத்திலும் பழமைவாதத்திலும் ஊறிப்போன சிலர், அதில் தீவிரம் பெற்றுவருகிறார்கள் என்பதற்கான உதாரணங்கள்தான் கோவை, மங்களூரு சம்பவங்கள். இந்த இரண்டு சம்பவங்களையும் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மத்திய, மாநில உளவு-புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பும், தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான செயல்திறனும் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். எந்த வகையிலும் பொது அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் தீங்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்பட வேண்டும்.