சூதாட்டமாக மாறிய கிரிப்டோ!

சூதாட்டமாக மாறிய கிரிப்டோ!
Updated on
2 min read

கிரிப்டோ பரிமாற்ற நிறுவனமான எஃப்.டி.எக்ஸ். (FTX) சில நாட்களுக்குமுன் திவாலானது. அதன் நிறுவனர் சாம்-பேங்க்மேன் ஃபிரைடின் (சுருக்கமாக, SBF - எஸ்பிஎஃப்) சொத்து மதிப்பு, சுமார் 16 பில்லியன் டாலரிலிருந்து (இந்திய மதிப்பில் சுமார் 13 ஆயிரம் கோடி) ஒரே இரவில் பூஜ்யத்துக்கு வீழ்ந்தது. வீடியோ கேம்கள் விளையாடிக்கொண்டே பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதித்த எஸ்பிஎஃப், ஒரு காலத்தில் ‘கிரிப்டோவின் எதிர்காலம்’ என வர்ணிக்கப்பட்டவர். விளையாட்டுப் பிள்ளையின் நிறுவனம், கிரிப்டோவின் எதிர்காலத்தை இன்று கேள்விக்குறியாக்கிவிட்டது.

‘கிரிப்டோ பரிமாற்றம்’ என்பது ஒருவர் பணம் கொடுத்து கிரிப்டோகரன்சியை விலைக்கு வாங்கும் நிறுவனமாகும். அப்படியான ஒரு ‘பரிமாற்ற’ நிறுவனம்தான் எஃப்.டி.எக்ஸ். அவர்கள் வெளியிட்ட கிரிப்டோ டோக்கன்களையும் வாங்குபவர்களுக்கு, அந்த நிறுவனத்தின் லாபத்தில் பங்கு கிடைத்திருக்கும். அந்த டோக்கன்கள் இன்று செல்லாக் காசாகிவிட்டன. இதனால் பல கிரிப்டோகரன்சிகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. எஃப்.டி.எக்ஸ். பயனாளிகளின் காணாமல்போன பணம் மீண்டும் கிடைக்குமா?

வீழ்ச்சியின் கதை: எப்.டி.எக்ஸ். பல நூறு நிறுவனங்களை ஒரு குடையின்கீழ் திரட்டியிருந்தது; இது மிகவும் சிக்கலான, குழப்பமான கட்டமைப்பாகும். பினான்ஸ் (Binance), எஃப்.டி.எக்ஸ். ஆகியவை உலகம் முழுவதும் பிரபலமான இரண்டு பரிமாற்ற நிறுவனங்கள். கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய விரும்பும் ஒருவர், இந்த நிறுவனங்களில் ஒன்றைத் தேர்வுசெய்து, அவர்களிடம் பணம் செலுத்தி, கிரிப்டோகரன்சிகளை வாங்கலாம். தேவைப்படும்போது அவற்றை விற்றுப் பணமாக்கிக்கொள்ளலாம்.

அல்மேடா எனும் நிறுவனத்தை எஃப்.டி.எக்ஸ். வைத்திருந்தது; அல்மேடாவில் பணம் செலுத்தும் ஒருவருக்கு, எஃப்.டி.எக்ஸ்.இலிருந்து கிரிப்டோகரன்சிகள் வழங்கப்பட்டன. இங்கு கிரிப்டோகரன்சி என்பது அதன் மதிப்புதான்; அதன் லாபத்தைப் பகிரும் ஓர் ஒப்பந்தம். பயனாளர்களின் பணமான சுமார் ரூ.6,500 கோடிக்கு நிகரான கிரிப்டோக்களை வாங்கிவிட்டதாகப் பயனர்களுக்கு எஃப்.டி.எக்ஸ். உறுதியளித்தது.

சரி, அந்தப் பணம் எங்கு சென்றது? அது எப்.டி.எக்ஸ்.க்குவரவில்லை; மாறாக, அல்மேடா அந்தப் பணத்தை மற்றவர்களுக்குக் கடனாகக் கொடுத்தது. மேலதிகமாகத் தங்கள் சொந்த டோக்கனில் அவர்களே முதலீடும் செய்தார்கள். இதுவொரு உத்தி. எஃப்.டி.எக்ஸ்.இன் டோக்கன் விலை (புரிதலுக்காக மட்டும்) ரூ.10 எனில், அல்மேடா (துணை நிறுவனம் என்றாலும் தனி நிறுவனம்) இதே டோக்கன்களை ரூ.30 ரூபாய் என விலையேற்றி வாங்கும்.

இதனால் சந்தையில் எஃப்.டி.எக்ஸ். டோக்கனின் விலை ஏறும். அவர்களே அவர்களுக்குள் கடனளித்துக்கொண்டார்கள். கடனை வருமானமாகச் செலவழித்தார்கள். ஒரு நாளுக்கான கேளிக்கைச் செலவு மட்டும் ரூ.40 லட்சம். பணத்தைத் தங்கமாக மாற்றிக் கடலில் எறிந்து விளையாடினார்கள். மேலும் மேலும் பல கேளிக்கைகளில் திளைத்தார்கள்.

எஃப்.டி.எக்ஸ்.இன் டோக்கன்களைப் பெருமளவு வாங்கிக் குவித்திருந்த போட்டி நிறுவனமான பினான்ஸ், இனி இதிலிருந்து லாபம் வராது என டோக்கன்களை விற்க முடிவெடுத்தது. அதைத் தொடர்ந்து, சிலர் டோக்கன்களை லாபத்தில் விற்றுக் காசாக்கினார்கள். கிரிப்டோ டோக்கன்களின் மதிப்பு வீழ்ந்தது; பணம் கரைந்தது. ஜூலை மாதம் சூட்டை உணரத் தொடங்கியதும், தங்கள் நிறுவனத்தை வாங்கிக்கொள்ள பினான்ஸிடம் எஃப்.டி.எக்ஸ். கெஞ்சியது. சிறு முதலீடுகூடக் காப்பாற்றும் என நினைத்தது. பினான்ஸ் முன்வந்து, எஃப்.டி.எக்ஸ்.இன் கணக்கு வழக்கைக் கேட்க, அதிர்ச்சி காத்திருந்தது.

கிரிப்டோவின் ‘எதிர்காலம்’?: பல லட்சம் பயனாளர்களைக் கொண்டு, பல ஆயிரம் கோடிகளில் இயங்கும் நிறுவனத்திடம் உண்மையில், ‘கணக்கு வழக்கு’ என்ற ஒன்றே இருக்கவில்லை. கிடைத்த நிதிநிலை அறிக்கையும் மிக மோசமாக இருந்தது. அத்தனையும் ஓட்டைகள், எல்லாமே பொய்க் கணக்குகள், போலி ரசீதுகள். பயனர்களின் பணம் கண்மூடித்தனமாக விளையாடப்பட்டிருக்கிறது. பினான்ஸ் கைகழுவிவிட்டது; அவ்வளவுதான், ஒரே இரவில் எஃப்.டி.எக்ஸ். திவாலானது.

எஃப்.டி.எக்ஸ்.வீழ்ந்தவுடன், பயத்தில் தங்களிடமிருந்த கிரிப்டோகரன்சிகளைப் பலர் விற்றார்கள். இந்தப் பரிமாற்றம் மூலம் வாங்கிய கிரிப்டோகரன்சிகளால் (கிரிப்டோகரன்சி மதிப்பு), பல கிரிப்டோகரன்சிகள் மதிப்பிழந்து, விலை குறைந்தன. கிரிப்டோகரன்சி வர்த்தகம் நிலைகுலைந்தது. எஃப்.டி.எக்ஸ்.இன் வீழ்ச்சி, கிரிப்டோகரன்சியைப் பற்றிப் பெரும் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

அரசு தலையீடின்றி, சுதந்திரமாகவும் மையப்படுத்தப்படாமலும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் கிரிப்டோகரன்சி, அரசை எதிர்க்கும் சைபர் அராஜகவாதிகளின் கனவு. ஆனால், எஃப்.டி.எக்ஸ்.இன் செயல்பாடுகள் அப்படியான ஒரு கனவு சாத்தியமா என்பதைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளன. நிதி நிறுவனங்கள் மீதான அரசுக் கட்டுப்பாடுகள் சரி என்பதையே எஃப்.டி.எக்ஸ். நிகழ்வுகள் மீண்டும் உணர்த்தியுள்ளன.

சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பம் தீர்வாகும் என்கிற சைபர் அராஜகவாதிகளின் நம்பிக்கையிலும் கீறல் விழுந்துள்ளது. சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வு, தொழில்நுட்பத்தில் மட்டும் அடங்கியிருக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. ‘பிளாக்செயின் எனும் அதிநவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, சைபர் அராஜகவாதிகளின் கனவின்மேல், கிரிப்டோகரன்சி எனும் சூதாட்ட விடுதியை எஃப்.டி.எக்ஸ். கட்டியுள்ளது’ என ‘எகானமிஸ்ட்’ இதழ் தலையங்கம் எழுதியது.

கிரிப்டோகரன்சி இப்போது சூதாட்டமாகிவிட்டது. ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடைவிதிக்கப்பட்டதைப் போல், கிரிப்டோகரன்சியின் அடிப்படையான DeFi (Decentralized finance - மையப்படுத்தப்படாத நிதி) நிறுவனங்கள் வருங்காலத்தில் தடைசெய்யப்படுமா என்பது கேள்விக்குரியது. கிரிப்டோகரன்சி முதலீடு ஒரே இரவில் ஒருவரைப் பணக்காரர் ஆக்கும் என்று சொல்லப்பட்டது; ஆனால், அதே முதலீடு ஒரே இரவில் பல்லாயிரக்கணக்கானோரை இன்று ஆண்டியாக்குகிறது என்பதுதான் நிதர்சனம்! - வினோத் கே.ஆறுமுகம் டிஜிட்டல் சமூக ஆய்வாளர், தொடர்புக்கு: write2vinod11@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in