

அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு உருவாக்கிய அரசமைப்பு வரைவு, அரசமைப்பு அவையில் விவாதிக்கப்பட்ட பிறகு திருத்தங்களுடன் ஏற்கப்பட்டது. அரசமைப்பின் வரைவை உருவாக்கியதில் அம்பேத்கர் பெரும்பங்கு வகித்தார்; முழுமையாகத் தம் தோளில் விழுந்த அரசமைப்பு வரைவினை உருவாக்கும் பொறுப்பை அம்பேதகர் எப்படித் திறம்படக் கையாண்டார் என்பதை குழுவில் இடம்பெற்றிருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி விளக்கியுள்ளார்.
அரசமைப்பின் முகவுரையை எழுதியது யார் என்கிற விவாதம் அறிவுத்தளத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தப் பின்னணியில், பேராசிரியர் ஆகாஷ் ரத்தோர் சிங் எழுதிச் சமீபத்தில் வெளியான ‘Ambedkar's Preamble: A Secret History of the Constitution of India’ என்கிற ஆய்வு நூல், இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. அரசமைப்பின் முகவுரையை எழுதியது அம்பேத்கர்தான் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் ரத்தோர் உறுதிப்பட நிறுவியிருக்கிறார்.
தனித்துவ சேர்ப்பு: ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்பது பிரெஞ்சுப் புரட்சியின் பிரகடனம். இவற்றை அடிப்படை லட்சியங்களாக ஏற்றுக்கொண்டு பல நாடுகளில் மக்களாட்சி மலர்ந்தது. இந்திய அரசமைப்பின் முகவுரையில் இடம்பெற்றிருக்கும் சகோதரத்துவம், தனிமனித மாண்பு, நாட்டுமக்களின் ஒற்றுமையை (ஒருமைப்பாடு 1977இல் சேர்க்கப்பட்டது) உறுதிப்படுத்துவதாக உள்ளது.
சகோதரத்துவம் என்கிற சொல்லும், அதைத் தொடர்ந்து இருக்கும் சொற்றொடரும் பி.என்.ராவ் உருவாக்கிய அரசமைப்பு வரைவிலோ நேருவின் குறிக்கோள்கள் தீர்மானத்திலோ, அக்காலத்தில் செயல்பட்ட பிற கட்சிகள், இயக்கங்களின் மாதிரி அரசமைப்புகளிலோ இல்லை என்கிறார் ரத்தோர்.
இந்த வரைவுகளிலோ அறிக்கைகளிலோ தன்னுரிமை, சமத்துவம் இருந்தன; சகோதரத்துவம் இல்லை. சகோதரத்துவத்தை முகவுரையில் சேர்த்தமைக்காக அம்பேத்கருக்கு, அவையின் உறுப்பினர் தாக்கூர் தாஸ் பார்கவா நன்றி தெரிவித்தார். இந்தப் பகுதியை அரசமைப்பு அவையில், ‘சகோதரத்துவம், சாதி-சமய நம்பிக்கை கடந்து, தனி மனித மாண்பை உறுதிப்படுத்தும் வகையில்’ என அம்பேத்கர் அறிமுகப்படுத்தினார் (ஆகாஷ் ரத்தோர் சிங்). பிறகு, விவாதத்தின்போது ‘நாட்டு மக்களின் ஒற்றுமை’ சேர்க்கப்பட்டது. தனிமனித மாண்பை (dignity of the individual) உறுதிப்படுத்தும் சகோதரத்துவம் என்பது முற்றிலும் புதிது. சகோதரத்துவத்துடன் இணைந்த இப்படியான ஒரு சொற்றொடர் வேறெங்கும் இல்லை.
இயற்கை உணர்வு: தன்னுரிமை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையே ஜனநாயகத்திற்கு அடிப்படை என்கிறார் அம்பேத்கர். இம்மூன்றையும் மறுக்கும் தத்துவங்களையும் சமூக அமைப்பினையும் விட்டொழித்து, நவீனமயமாக முன்னேற்றப் பாதையில் இந்தியா செல்ல வேண்டிய அவசியத்தைப் பல இடங்களில் அவர் வலியுறுத்துகிறார்.
தன்னுரிமையும் சமத்துவமும் உரிமைகள். அவற்றைச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, சில நிபந்தனைகளுடன் கருத்துகளை எடுத்துரைப்பதற்கும், விரும்பிய தொழிலைச் செய்வதற்குமான சுதந்திரத்தையும் அரசமைப்பு அனைவருக்கும் வழங்கியிருக்கிறது.
அதேபோல், குடிநபர் எவருக்கும் சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் காரணமாக வேற்றுமை காட்டக் கூடாது என அறிவிக்கலாம். ஆனால், சகோதரத்துவத்தை எவ்வாறு உறுதிப்படுத்துவது? மற்ற இரண்டையும்போல், சகோதரத்துவம் ஓர் உரிமை இல்லை; அது ஒரு அறநெறி. சட்டத்தின் மூலம் அதை உறுதிப்படுத்த முடியாது. அது தாமாகவே சமூகத்தில் உருவாக வேண்டும். சகோதரத்துவத்தை இயற்கையான உணர்வு (natural sentiment) என்கிறார் அம்பேத்கர்.
அம்பேத்கரைப் பொறுத்தவரை, இந்தியச் சமூகம் சகோதரத்துவமற்ற சமூகம். இந்தச் சமூகம் சாதிகளாகவும் மதங்களாகவும் பிரிந்திருக்கிறது. சாதியைத் தாண்டிய சகோதரத்துவம் இங்கு இல்லை. வாழ்வுக்குத் தேவையான அடிப்படை விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதே சகோதரத்துவம்; அவற்றை இந்தச் சமூகம் இதுவரை பகிர்ந்துகொண்டிருக்கிறதா என அம்பேத்கர் கேள்வி எழுப்புகிறார். ஆகவேதான், இந்திய மக்கள் தங்கள் லட்சியங்களில் ஒன்றாக, தனிமனித மாண்பை உறுதிப்படுத்தும் சகோதரத்துவத்தை வளர்த்தெடுக்க உறுதியளிக்கும்படி முகவுரை கோருகிறது.
சகோதரத்துவத்தை நீட்டிப்போம்: இந்திய அரசமைப்பு தனிநபரை அடிப்படை அலகாகக் கொண்டது. வரலாற்றுரீதியாகச் சாதியை அடிப்படை அலகாகக் கொண்ட ஒரு சமூகம், திடீரெனத் தனிநபரை அலகாகக் கொள்ளத் தொடங்குகிறது. தனி மனிதர்கள் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள், அவர்களுக்கு உரிமைகள் அளிக்கப்படுகின்றன, அவர்களின் நலனைச் சுற்றி அரசு இயங்க அறிவுறுத்தப்படுகிறது. தனி மனிதரின் நன்மைதான் முதன்மை எனும்போது, அந்தத் தனிமனிதருக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது.
அம்பேத்கர் விரும்பிய தனிமனிதர் என்போர், ஒருவருக்கு ஒருவர் உறவாடி, சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து வாழும் மனிதரே. சகோதரத்துவத்தின் மற்றொரு பெயர்தான் ஜனநாயகம். அம்பேத்கரின் மொத்தப் பயணமும் தனிமனித மாண்பினைக் காக்கும் பயணமாகவே இருந்திருக்கிறது.
சகோதரத்துவத்தைத் தாண்டியும் அம்பேத்கர் பிற்காலத்தில் சிந்திக்கத் தொடங்கினார். சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பல இடங்களில், பல்வேறு தருணங்களில் தொடர்ந்து எழுதியுள்ள அவர் பௌத்தத்தை நோக்கி நகர்ந்தார். அப்போது சகோதரத்துவத்தைவிட மேம்பட்டதாக பௌத்தத்தில் மைத்ரி என்கிற அறநெறி இருப்பதை உணர்ந்தார். ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலில், ‘உயிர்கள் அனைத்திற்கும் நண்பராய் இருப்பவர் எவரோ அவர் மட்டுமன்றி, பகைவராக இருப்பவருக்கும் மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் அன்பெனும் உணர்வைவை நீட்டித்தல் மைத்ரியாகும்’ என்கிறார். ஆக, சகோதரத்துவத்தைத் தாண்டி மைத்ரி என்னும் அறநெறி நல்லொழுக்கம் இந்தியச் சமூகத்துக்குத் தேவை எனலாம். சகோதரத்துவத்தை இப்படி நீட்டிப்பதே பொருத்தமாக இருக்கும். - ஏ.பி.இராஜசேகரன் வழக்கறிஞர், தொடர்புக்கு: rajasekaranab@gmail.com
நவம்பர் 26: இந்திய அரசமைப்பு நாள்