

காலகாலமாகவே கடல்வளத்தை மனிதன் வேட்டையாடி வந்தாலும், தனது பழங்குடித் தன்மையால் அந்த வளத்துக்கு இடையூறு வராமல் பார்த்துக்கொண்டான். ஆனால் கடந்த நூற்றாண்டுகளில் கல்வியறிவால் தொழில்நுட்பமும் வளர, இயற்கை வளங்களைச் சூறையாடும் மனிதனின் வேட்கை எண்ணெய்க்காகத் திமிங்கலங்களை வேட்டையாடியது, பொழுதுபோக்குக்காக மீன்களைக் கொன்றுகுவிப்பது என நீண்டது. மீன்பிடித்தலில் கடல்வளத்தை பாதிக்காத செவுள்வலை, தூண்டில் தொழில் மாறி, இழுவைமடிப் பயன்பாட்டால் மீன் இனப்பெருக்கமே பாதிப்புக்குள்ளானது.
அண்மைக்கடல் பகுதியில் ராட்சத ஆழ்குழாய்க் கிணறுகளைத் தோண்டி எரிவாயுவும் கச்சா எண்ணெயும் எடுத்தது கடலின் அடியாழத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. கடலோரங்களில் இயற்கையாய்ச் சேர்ந்திருந்த கனிமங்களை வியாபார வேட்கையில் பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்தது, கடலோரங்களில் கதிரியக்கத்தால் பல நோய்கள் அதிகரிக்கக் காரணமானது. ஆயுதங்களைப் பரிசோதிப்பதும் போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதும் ஆலை, சுற்றுலாக் கழிவுகளைக் கொட்டி கடலை மாசுபடுத்துவதும் தொடர்ச்சியாய் நிகழ்ந்தன.
வளர்ந்த நாடுகளின் சுயநலம்: கடந்த நூற்றாண்டிலேயே, உலக நாடுகள் கரைக்கடல், அண்மைக்கடல், ஆழ்கடல் குறித்து திட்டங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டன. கண்டத்திட்டு, பிரத்யேகப் பொருளாதார மண்டலம் எனக் கடலில் எல்லைகள் உருவாகி, ஒவ்வொரு நாடும் தன் அருகமை கடற்பரப்பைச் சொந்தம் கொண்டாடி, வாய்ப்புள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கும் நிலை வந்துவிட்டது.
இன்றைய சூழலில், எந்த ஒரு நாடும், தன் பேரியல் பொருளாதார இலக்குகளை அடைய, கடல்வளத்தைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி இருக்கிறது. வளர்ந்த நாடுகளின் வலிய கரங்கள், நீலப் பொருளாதாரம் என்ற பெயரில் கடலோர உற்பத்தி - சேவைகள், கடல்வழி வணிகம், கப்பல் போக்குவரத்து, கடலோர ஆற்றல், ஆழ்கடல் - கரைக்கடல் தாதுக்கள், மீன்வளம், சுற்றுலா போன்றவற்றைக் குறிவைத்திருக்கிறது.
அவை சுயநலத்தோடு தங்களுக்கான கடல்சார் கொள்கைகளை வகுத்துக்கொண்டு, வளரும் நாடுகளையும் அவரவர்க்கான கடல்சார் கொள்கைகளையும் வகுக்கத் தூண்டுகின்றன. வளர்ந்த நாடுகளின் கைகளிலிருக்கும் உலகப் பொருளாதாரத்துக்கு, வளரும் நாடுகளின் இருப்பு எந்த வகையிலும் ஊறுவிளைவித்துவிடக் கூடாது என்பதாலேயே, கடலாளுமை உட்பட வளரும் நாடுகளின் அனைத்து நடவடிக்கைகளுமே சர்வதேச அமைப்புகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
வளர்ச்சியின் பரிமாணம்: இந்தியாவில் 2019 இல் அறிவிக்கப்பட்ட புதிய இந்தியாவின் பார்வை, நீலப் பொருளாதாரத்தை வளர்ச்சியின் பத்து பரிமாணங்களில் ஒன்றாகக் காட்டுகிறது. மற்ற நாடுகளைப் போலல்லாமல் இந்தியத் தீபகற்பத்திற்கான 8,118 கி.மீ நீளக் கடலோரம் தனித்துவமானது. அது ஆண்டில் 365 நாட்களிலும் தொழில் செய்ய ஏதுவான கடலும், நிலமும் பூத்துக் குலுங்குகிற பூமத்திய ரேகையின் அருகமைந்த வெப்பமண்டலப் பிரதேசம். இந்தியக் கண்டத்திட்டுப் பகுதியில் ருசியான மீன்கள் பிடிக்கப்பட்டாலும், கரைக்கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தால், மலிவான விலையிலேயே நமது மீனுணவு ஏற்றுமதியாகிறது.
9 கடலோர மாநிலங்களில் பாரம்பரிய, தொழில்முறை, வணிக மீனவர்களால் கரைக்கடல், அண்மைக்கடல், ஆழ்கடலில் மீன்பிடித்தல் நடந்தபோதிலும் உணவான மீன்வளம் பெரும் பொருளாதார சக்தியாக மாறவில்லை. கடந்த காலத்தில் இந்த மீன்வளத்தை வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் சூறையாடின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே அதன் முகவர்களாக இருந்தார்கள்.
இந்தியக் கடலோரங்களில் ஏறக்குறைய 50 லட்சம் பேர் மீன்வளத்தை நேரடியாக நம்பி வாழ்கிறார்கள். அதைவிடப் பன்மடங்கு மக்கள் மறைமுக வேலை, தொழில் வாய்ப்புக்காகக் கடலோரப் பகுதிகளை நம்பியிருக்கிறார்கள். இருந்தும், கடலோரங்கள் நாட்டின் சக்திமிக்க பொருளாதார மண்டலங்களாகவில்லை. வரலாற்றுக் காலம்தொட்டே கடலோர மக்களில் ஒருபகுதியினர், கடலில் கலம் செலுத்தி கடல்வழி வாணிபத்தின் மாபெரும் சக்தியாய் இருந்திருந்த போதிலும், அவர்கள் தங்களது அடுத்தகட்ட வளர்ச்சியான சுதேசிக் கப்பலோட்டத் தொழில்முனைவோராக மாறவில்லை.
அரசின் 13 பெருந்துறைமுகங்கள், தனியார் துறைமுகங்கள், 187 சிறு துறைமுகங்கள் மூலம் சரக்குப் போக்குவரத்தும் கப்பலோட்டமும் நடைபெறுகின்றன. தீபகற்பத்தின் வர்த்தகத்தில், 95% கடல்சார் போக்குவரத்து மூலமே நடந்தும் ஏற்றுமதி, இறக்குமதிக்கான இந்தியச் சரக்கை 93% வெளிநாட்டுக் கப்பல்களே சுமந்துசெல்கின்றன. கடல் பயணக் கட்டணமாகப் பெரும் அந்நியச் செலவாணி இழப்பை ஏற்படுத்தும் இச்சூழலைச் சாதாரண புள்ளிவிவரமாகக் கடந்துவிட முடியாது.
கடலோடிகள் வாழ்வும் நலனும்: இந்தியாவின் இரண்டு பில்லியன் சதுர கி.மீ-க்கு அதிகமான பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில், கச்சா எண்ணெயும் எரிவாயுவும் பெருத்த மீன்வளமும் இருக்கின்றன. நாட்டின் இறையாண்மை, கடலோர எல்லைப் பாதுகாப்பு, கப்பலோட்டம், கடல்வழி வாணிபம், எரிவாயு, கடலோரக் கனிமங்கள் போன்றவை நீலப் பொருளாதாரத்தில் முதன்மைப்படுத்தப்படுவதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. அதேவேளையில், மீன்வளத்துக்கும் கப்பலோட்டத்துக்கும் ஆதார சக்தியாக விளங்கும் கடலோடிகளின் வாழ்வும் முன்னேற்றம் பெறவேண்டும். கடலும், கடல்வளமும் அதன் தன்மை குறையாமல், நம் தலைமுறைகளுக்கான சொத்தாகக் கடத்தப்பட வேண்டும்.
இந்தியத் தீபகற்பத்துக்கான கடல், மீன்பிடித்தலுக்கும் கப்பலோட்டத்துக்குமானது என்ற நிலையில், பெருந்துறைமுக அமைவுத் திட்டங்கள், பாரம்பரிய மீனவர் குடியிருப்புகளைப் பாதிக்கக் கூடாது என்பதில் அரசுகள் அக்கறையோடு செயலாற்ற வேண்டும். நீலப் பொருளாதாரம் என்ற பதத்துக்குச் சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரையறைகள் எதுவும் இல்லாத நிலையில், வளர்ந்த நாடுகளின் வல்லாதிக்கம், தேசத்தின் அடிப்படைப் பொருளாதார சக்திகளுள் ஒன்றான பாரம்பரியக் கடலோடிகள் வாழ்வில், ஊறுவிளைவிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
ஒருங்கிணைந்த வளர்ச்சி: தரமான வானிலை ஆய்வு நிலையம், மீன் இறங்கு தளங்கள், பதனிடு நிலையங்கள், சந்தைக் கூடங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய அமைப்பாக நீலப் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். தன்னிறைவு பெற்ற சுதேசிக் கப்பல் கட்டுமானமும், கப்பல் உரிமையும், கரைக்கடல் - தூரதேசக் கப்பலோட்டமும் பொருளாதார எழுச்சியின் உந்துசக்தியாகக் கருதப்பட்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அரசின் புதிய கல்விக் கொள்கையில் நீலப் பொருளாதாரம் குறித்த பாடதிட்டங்களை உருவாக்குவது மட்டுமல்லாது, அப்படிப்பில் கடலோடிகளுக்கு இடஒதுக்கீடு அளித்து, மீன்வளம், கப்பலோட்டுதல்சார் கடலோரப் பாரம்பரிய அறிவைத் தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்குகொள்ளச் செய்யவேண்டும்.
நீலப் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பாரம்பரியக் கடலோடி அமைப்புகளை இணைத்து, அவர்களது கருத்துக்களும் திட்ட வடிவமைப்பிலும் செயலாக்கத்திலும் பரிசீலிக்கப்பட வேண்டும். இந்த நிலையிலேயே, தேசத்துக்கான ஒருங்கிணைந்த வளர்ச்சி, நீலப் பொருளாதாரத்தின் மூலம் சாத்தியமாகும். - ஆர்.என்.ஜோ டி குருஸ் ‘கொற்கை’ நாவலாசிரியர், தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com