

சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை, மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அக்டோபர் மாத இறுதியில் அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்டவை, இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இனி செயல்பட வேண்டும். 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் ஊடக வழிகாட்டு நெறிமுறைகள், சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லையென்பதால், விதிமுறைகள் தற்போது கடுமையாக்கப்பட்டிருக்கின்றன.
உலகின் பெரும்பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க், ட்விட்டரை விலைக்கு வாங்கியிருக்கும் சூழலில், இந்தச் சட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. உலக நாடுகள் பலவற்றில் அரசியல் நிகழ்வுகள், மாற்றங்கள் குறித்த பல கருத்துகள் ட்விட்டரில்தான் முதலில் வெளியாகின்றன.
அவை அந்நாட்டின் அடுத்தகட்ட அரசியல் நகர்வைத் தீர்மானிக்கும் அளவுக்கு விளைவை ஏற்படுத்துகின்றன. இந்தப் பின்னணியில், இந்தியாவில் சமூக வலைதளப் பயனாளிகளின் எண்ணிக்கை ஒருவருக்கு வியப்பளிக்கும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் முறையே 53, 41, 1.75 கோடி இந்தியர்கள் இயங்குகிறார்கள். இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல; டிஜிட்டல் உலகில் நாம் எப்படியான சமூகத் தொடர்பில் இருக்கிறோம் என்பதன் வெளிப்பாடு.
50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளைக் கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட நெறிமுறைகளின்படி, பயனாளிகளின் குறைதீர்ப்பு அதிகாரிகளை அந்தந்த நாட்டிலேயே நியமிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகாரிகள் வழங்கும் தீர்வுகள் பாரபட்சமாக இருப்பதாகப் பல நேரங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது, தீர்வுகளில் மாற்றுக் கருத்து இருப்பின், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசுத் தரப்பில் தனி அதிகாரம் கொண்ட மேல்முறையீட்டுக் குழு உருவாக்கப்படும். நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்துச் சமூக ஊடகச் செயலிகளில் உள்ள தகவலை ஆய்வுசெய்வதற்காக மேல்முறையீட்டுக் குழுக்களை அரசு அமைக்கிறது. இதற்கு முன்னதாகப் பயனாளர்களின் புகார்கள் மூன்று மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டுத் தீர்வு தரப்பட வேண்டும். இனி, 30 நாட்களுக்குள் விசாரிக்கப்பட்டுத் தீர்க்கப்பட வேண்டும்.
பயனாளிகளின் பதிவுகள் தகுந்த காரணமின்றிச் சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்படுகின்றன அல்லது முடக்கப்படுகின்றன எனப் பலரும் புகாரளிக்கின்றனர். இந்தியாவில் சமீப ஆண்டுகளில் சமூக வலைதளங்கள் அனைத்தும் கட்டுப்பாடின்றிச் சுதந்திரமாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. போலிச் செய்திகள், வெறுப்பை, வன்முறையைத் தூண்டும் பதிவுகள், நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் கருத்துகள், நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள், தனிநபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் குறித்த தவறான கருத்துகள், பெண்கள் குறித்த ஆபாசப் பதிவுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் பல நேரங்களில் எழுந்துள்ளன.
சமூக வலைதள நிறுவனங்கள் இதை முறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறிவந்த நிலையில்தான், இந்தப் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனினும், சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்துவதோடு அவற்றைத் தம் கைக்குள் வைத்திருக்கும் நோக்கில் புதிய விதிமுறைகளை அரசு கொண்டுவந்துள்ளதாகச் சந்தேகிக்கிறார்கள் தனியுரிமை ஆர்வலர்கள்.
அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், களப்பணியாளர்கள், மனித உரிமைப் போராளிகள், எழுத்தாளர்கள் ஆகியோரின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கை எனப் புதிய விதிகள் பற்றி மக்கள் கருதுகிறார்கள். ஒரு செய்தியைப் போலிச் செய்தி என வரையறுப்பது எப்படி? தனிநபரின் கருத்து பிறரை அவதூறு செய்கிறது எனத் தீர்மானிப்பது எப்படி? நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் கருத்து எது என்பவை ஒரு விவாதத்துக்கான பொருளாக நம் முன் நிற்கின்றன.
குடிமக்கள் தங்கள் சொந்தக் கருத்துகளை வெகுஜன ஊடகங்களில் சுதந்திரமாகச் சொல்ல முடியாது; சமூக ஊடகங்களில் பகிர முடியும் என்ற சூழல் நிலவுகிறது. அந்தச் சுதந்திரம் குறுக்கப்படும்போது, ஜனநாயக நாட்டில் அரசமைப்பின் அடிப்படையிலான தனியுரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகிய உரிமைகளுக்கு எதிராகவும் அது அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சமூக வலைதளங்கள் தனிநபர்களின் கருத்துகளை ஜனநாயகப்படுத்தியுள்ளன. ஆனால், யாரும் எப்போதும் எந்தக் கருத்தையும் விமர்சனத்தையும் தங்குதடையின்றிச் சுதந்திரமாகப் பகிர முடியுமா? ஊடகத்தின் உள்ளடக்கத்தை உருவாக்க முடியுமா? ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுக்க முடியுமா? புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளின் பின்னணியில், சமூக வலைதளங்கள் ஜனநாயகக் கருத்துகளை வெளிப்படுத்தும் தளமாக இனி இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜனநாயகத்துக்கு இது ஆரோக்கியமானதல்ல.
மாற்றுக் கருத்துகளும் விமர்சனங்களும் எங்கே சுதந்திரமாக வலம்வருகின்றனவோ அங்குதான் அனைவருக்குமான, ஆரோக்கியமான ஜனநாயகம் மலரும் என்பதை அரசு உணர வேண்டும். - அ.இருதயராஜ் பேராசிரியர்; தொடர்புக்கு: iruraj2020@gmail.com