

நவம்பர் 15, 2022 அன்று உலக மக்கள்தொகை 800 கோடியைத் (8 பில்லியன்) தொட்டிருப்பதாக, ஐ.நா.வின் பொருளாதார - சமூக விவகாரங்கள் துறை (UN DESA) தெரிவித்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்புவரைகூட, உலக மக்கள்தொகை 250 கோடியாக இருந்தது. அறிவியல் தொழில்நுட்பத்தின் அசாத்தியப் பாய்ச்சல், உணவு-சுகாதாரத் துறைகளை மேம்படுத்தியது. சுகாதாரம், வறுமை ஒழிப்பு, கல்வி ஆகிய தளங்களில் நேர்மறையான முன்னெடுப்புகளும் குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு மரணம் ஆகிய குறியீடுகளின் வீழ்ச்சியும் மனிதகுலத்தின் சராசரி ஆயுட்கால நீட்டிப்புக்குப் பங்களித்த முக்கியக் காரணிகளாகும்.
குறையும் வளர்ச்சி விகிதம்: இந்தப் பின்னணியில் 1987, 1999, 2011 ஆகிய ஆண்டுகளில் உலக மக்கள்தொகை முறையே 500, 600, 700 கோடியை எட்டியது. ஆனால், உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1950 முதல் குறைந்துவருகிறது; 2020இல் அது ஆண்டுக்கு 1% என்ற அளவுக்குக் குறைந்தது. உலக மக்கள்தொகை, 700இலிருந்து 800 கோடியாக உயர்வதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட நிலையில், 900 கோடியாக உயர்வதற்குச் சுமார் 15 ஆண்டுகள் (2037) ஆகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துவருவது இதன்மூலம் வெளிப்படையாகிறது.
எனினும், தொடர்ந்து உயரும் மக்கள்தொகை, 2030இல் 850 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது; 2050இல் 970 கோடியாக உயரும் மக்கள்தொகை, 2080இல் 1,040 கோடியில் உச்சம்பெற்று 2100 வரை இதே அளவில் நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2050 வரையிலான உலகளாவிய மக்கள்தொகை உயர்வுக் கணிப்புகளில் பாதிக்கும் மேல் காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளை மையப்படுத்தி இருக்கின்றன.
இந்தியாவும் சீனாவும்: இந்தியாவின் மக்கள்தொகை தற்போது 141.2 கோடியாக உள்ளது. இந்தியாவில் 15-64 வயதினரின் எண்ணிக்கை 2022இல் 68%ஆக இருக்கிறது; மக்கள்தொகையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெறும் 7%தான். 25.3 கோடி என்ற எண்ணிக்கையில் உலகின் மிக அதிக வளரிளம் பருவத்தினரைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. மேலும் 15-29 வயதினர் (27%) அதிகம் உள்ள, உலகின் இளமையான நாடாகவும் இந்தியா விளங்குகிறது.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியா, முதல் நாடான சீனாவை 2023இல் முந்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மக்கள்தொகை தற்போது 142.6 கோடி. 2050இல் இந்திய மக்கள்தொகை 166.8 கோடியாக இருக்கும் நிலையில், சீனாவின் அப்போதைய (2050) மக்கள்தொகை, 131.7 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மக்களின் சராசரி வயது 38.4; ஜப்பானில் அது 48.6 ஆகவும் உலக சராசரி 30.3 ஆகவும் இருக்கிறது. இந்தியாவின் சராசரி வயது 28.7தான்.
மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ‘ஒற்றைக் குழந்தைக் கொள்கை’யின் காரணமாகத் தற்போது மூத்த குடிமக்களின் எண்ணிக்கை சீன மக்கள்தொகையில் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 26.7 கோடியாக உயர்ந்தது; இது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 18.9%. இந்தப் பின்னணியில், 60 வயதுக்கு மேற்பட்ட சீனர்களின் எண்ணிக்கை 2035இல் சுமார் 40 கோடியாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சீன மக்கள்தொகையில் மூத்த குடிமக்கள் விகிதம் 2050இல் உச்சமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொதுசேவைகள், தேசிய சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களில் மிகப் பெரிய சவாலாக அமையும். சீனாவில் வயதுவந்தோர் எண்ணிக்கை 2035இல் 40 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள சீன மக்களை அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது.
அதிக மக்கள், ஆபத்தா?: உலக மக்கள்தொகை தற்போதுள்ள சூழலில், நீடித்த வாழ்வுக்கு நமக்கு 1.75 பூமிகளின் தாங்குதிறன் தேவை என இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) கணித்துள்ளது. அதேவேளை, உலக மக்கள் ஒவ்வொருவரும் இந்தியாவின் குடிநபரைப் போல் வாழ்வார்கள் எனில், ஆண்டுக்கு 0.8 பூமியே போதுமானது. ஆனால், அமெரிக்காவின் குடிநபரைப் போல் வாழவேண்டுமெனில், ஆண்டுக்கு 5 பூமிகள் தேவை.
மக்கள்தொகை உயர்வு என்பது முற்றிலும் ஆபத்தான விஷயமல்ல; அதிக மக்கள்தொகை என்பது கவலைக்குரிய அம்சமும் அல்ல. ஆனால், உலகின் வளங்கள் அனைத்தும், முதன்மையாக உலகின் மிகச் சில பெரும்பணக்காரர்களால் நுகரப்படுவதுதான் பிரச்சினை என்பதை, காலநிலை மாற்றத்தின் பின்னணியில் உணர்ந்துகொள்ள வேண்டியது முக்கியம். - தொகுப்பு: அபி