

கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதைத் தக்கவைத்துக்கொள்ள கல்வித் துறையும் ஆசிரியர்களும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகின்றனர். அரசுப் பள்ளிகள் சிலவற்றில், குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கழிவறைப் பிரச்சினை இருக்கிறது; கழிவறை தூய்மையாக இல்லாததால் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பள்ளி நேரம் முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகே சிறுநீர் கழிக்கிறார்கள். பள்ளி நேரத்தில் தண்ணீர் குடிப்பதையும் குறைத்துக்கொள்கிறார்கள். இதனால் உடல்ரீதியான பல்வேறு பாதிப்புகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
காரணங்கள் என்ன?: தொடக்கப் பள்ளிக்கு ரூ.1,000, நடுநிலைப் பள்ளிக்கு ரூ.1,500, உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.2,250, மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3,000 என உள்ளாட்சித் துறை மூலம் துப்புரவுப் பணியாளருக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. அதிகக் குழந்தைகள் புழங்குமிடத்தில் துப்புரவுப் பணியாளர் இரண்டு வேளையும் பணியாற்றினால்தான் கழிவறை தூய்மையாக இருக்கும்.
அரசு தரும் சொற்ப ஊதியத்தில் இது சாத்தியமா?; ஆண் பிள்ளைகள் பள்ளிக் கழிவறைக் குழாய்களை உடைத்துத் தங்கள் கோபத்தைத் தீர்த்துக்கொள்கிறார்கள், எத்தனை முறை சரிசெய்தாலும் அதே நிலைதான்; பாடம் குறித்து இருக்கும் அக்கறை, பள்ளியின் தூய்மைமீது பெற்றோருக்கு இல்லை. பிள்ளைகள் சொன்னாலும் பள்ளியில் வந்து கேள்வி கேட்பதில்லை; நிர்வாகத்தின் அலட்சியமும் ஒரு முக்கியக் காரணம். பள்ளிப் பாடச் சுமை, அலுவலக வேலை, பிற வேலைகள் என ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், பிள்ளைகள்மீது அக்கறை இருந்தால் நிச்சயம் கழிவறைச் சுத்தம் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும்.
என்னதான் தீர்வு?: துப்புரவுப் பணியாளருக்கான ஊதியத்தைக் குறைந்தபட்சம் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.3,000 தொடங்கி மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.6,000 வரை உயர்த்தி அரசு வழங்க வேண்டும்; பள்ளி மேலாண்மைக் குழு மாதம் ஒருமுறை கூடுவதற்குமுன் கழிவறை, வகுப்பறை, சமையலறை ஆகியவற்றைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என கல்வி உரிமைச் சட்டம் சொல்கிறது. தமது பிள்ளைகள் உடல்நலனில் அக்கறைகொண்ட பெற்றோர் இதை நிச்சயம் தவிர்க்கமாட்டார்கள். சுத்தமான கழிவறை என்பது குழந்தையின் உரிமை.
ஆகவே, குழந்தைகளும் பள்ளியில் இது தொடர்பாகக் கேள்வி எழுப்ப வேண்டும். குழந்தைகளுக்கு உரிய வசதிகள் செய்யப்படவில்லை எனில், அது அப்பட்டமான குழந்தை உரிமை மீறலாகும்; நீரில்லாக் கழிவறைகள் அமைப்பது தண்ணீர் பிரச்சினையைக் குறைக்க உதவும். அவை பயன்பாட்டுக்கு வரும்வரை, பிள்ளைகள் கழிவறைக்குச் செல்லாமல் காத்துக்கொண்டிருக்க முடியாது. எனவே, கல்வித் துறையும் ஆசிரியர்களும் பெற்றோரும் இதில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகள் குரலெழுப்பாமல் இருப்பதால் நாமும் அமைதியாக இருந்து, அவர்கள் உடல்நலன் கெடக் காரணமாக இருந்துவிடக் கூடாது. - புவனா கோபாலன் ஆசிரியர்; தொடர்புக்கு: bhuvanaagopalan@gmail.com