

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றப் பணித்திட்டப் பேரவையின் (UNFCCC) 27ஆவது காலநிலை உச்சிமாநாடு (COP27), எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக்கில் நடந்துமுடிந்திருக்கிறது. நவம்பர் 6 தொடங்கி 18 வரை திட்டமிடப்பட்டிருந்த இந்த மாநாடு, இறுதி முடிவுகளுக்கான ஒருமித்த கருத்துகள் எட்டப்படாததால், இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டு 20ஆம் தேதி முடிவுக்குவந்தது.
190 நாடுகளைச் சேர்ந்த 90 தலைவர்கள், 35,000 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் தொடக்கத்திலேயே சர்ச்சைகள் எழுந்தன. கரிம உமிழ்வுகளை வெளியிட்டபடி நூற்றுக்கணக்கான தனியார் ஜெட் விமானங்களில் மாநாட்டின் பிரதிநிதிகள் வந்திறங்கியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அதன்பிறகு எழுந்த சில குற்றச்சாட்டுகள் முக்கியமானவை. சமகாலத்தின் மிக முக்கியமான இந்தக் கூட்டத்தை நடத்தும் தகுதி எகிப்துக்கு உண்டா என்ற கேள்வியை எழுப்பி, நயோமி க்ளைன் உள்ளிட்ட காலநிலைச் செயல்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். எகிப்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள், ஊடகங்கள் மீதான கடும் கட்டுப்பாடுகள்-தணிக்கை விதிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, அங்கு காலநிலை மாநாடு நடத்தப்படுவதே அறத்துக்கு எதிரானது என விமர்சிக்கப்பட்டது.
கவலைக்குரிய போக்கு: இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடு நடத்தப்படும்போது எகிப்து அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக, அங்கிருந்த பல முக்கிய இணையதளங்கள், குறிப்பாக சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வுகளைக் கொண்ட தளங்கள் முடக்கப்பட்டிருந்தன என்பதே எகிப்து எதிர்கொண்டிருக்கும் நிதர்சனத்துக்கான ஓர் எளிய உதாரணம். காலநிலைச் செயல்பாட்டின் அடிநாதமாகக் கருதப்படும் உண்மையான அறிவியல் தகவல்கள் கிடைக்காத இடத்தில் இந்த மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது என்பது பெரிய கசப்பைத் தந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காவில் இந்த மாநாடு மீண்டும் நடைபெறுவது என்பதே ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்டாலும், அதற்காக எகிப்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு சரிவுதான். உலகில் அதிக மாசுபாட்டை உருவாக்கக்கூடியதாகக் கருதப்படும் கோக கோலா நிறுவனம், இந்த மாநாட்டுக்கு நிதியுதவி வழங்கியதை ‘ஒரு பசுமை கண்துடைப்பு நடவடிக்கை’ என வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் புதைபடிவ எரிபொருட்களை ஆதரிப்பவர்களும் எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்; புதைபடிவ ஆதரவாளர்கள் 636 பேர் இந்த மாநாட்டில் நேரடியாகக் கலந்துகொண்டிருக்கின்றனர். புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் நேரடி வருமானம் ஈட்டுபவர்கள் பிரதிநிதிகளாக இருக்கும் ஒரு மாநாட்டில், கரிம உமிழ்வுகள் குறித்த தீர்மானமான முடிவுகளை எடுப்பதில் நிச்சயமாக இழுபறி இருக்கும்.
முடிவுகளை மாற்றியமைப்பதிலும் சொற்களைத் திருத்துவதிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தவும் வாய்ப்புகள் அதிகம். அந்தச் சூழலில் எடுக்கப்படும் முடிவுகள், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துபவையாக இல்லாமல், புதைபடிவ எரிபொருள் துறைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத சமாதானக் களிம்புகளாகவே இருக்கும். சென்ற ஆண்டைவிட இந்தப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் கவலைக்குரிய போக்குதான்.
இணைந்து எதிர்கொள்ள முடிவு: கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் தொடங்கினாலும் இந்த மாநாட்டில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது: ‘இழப்பு, பாதிப்புக்கான நிதியம்’ (Loss and Damage Fund) ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும், காலநிலைப் பேரிடர்களால் அதிகமாகப் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாகவே மூன்றாம் உலக நாடுகள் கோரிக்கை வைத்தபடி இருக்கின்றன.
ஒருவழியாக, காப்27 இல் அதற்கான ஒப்பந்தம் முடிவாகியிருக்கிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. காலநிலைப் பேரிடரால் சமீபத்தில் கடும் இழப்புகளைச் சந்தித்த பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இந்த நிதிக்கான பங்களிப்பு எப்படி இருக்கும், யார் இதை மேலாண்மை செய்வார்கள், இந்த நிதியைப் பெறுவதற்கான வரையறைகளை யார் நிர்ணயம் செய்வது என்பன போன்ற கேள்விகள் இருந்தாலும், இதுவரையில் நிதி பற்றிய பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகியே இருந்த உலக நாடுகள் முதன்முறையாக ஒரு ஒப்பந்தத்துக்கு வந்திருக்கின்றன என்பதே வரவேற்கத்தக்கது.
ஒருவகையில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரித்து, காலநிலைப் பேரிடர்களை எதிர்கொள்வதில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற புரிதலை நிலைநிறுத்துவதாகவே இந்த ஒப்பந்தம் இருக்கிறது. சமகால உலக அரசியல் களத்தில் இது ஒரு முக்கியப் பாய்ச்சல்.
பிரேசிலின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் லூலா டிசில்வா, “பிரேசிலில் காடழிப்பை 2030-க்குள் முற்றிலும் ஒழிப்போம், அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். அமேசான் காடுகளைப் பாதுகாக்காமல் உலகக் காலநிலைப் பாதுகாப்பு சாத்தியமில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
பிரேசிலின் முந்தைய அதிபர் ஜெயீர் பொல்சனாரோவின் ஆட்சிக் காலத்தில், அமேசான் காடழிப்பு பல மடங்கு அதிகரித்திருந்தது. அமேசான் காடுகளின் அழிவு என்பது, காலநிலை மாற்றத்தை மீளவே முடியாத நிலைக்கு இட்டுச்செல்லும் ஓர் உச்சப்புள்ளி (Tipping point) என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில், லூலாவின் அறிவிப்பு முக்கியமானது.
ஏமாற்றம் தரும் முடிவுகள்: இவை போன்ற இரண்டொரு நிகழ்வுகள் தவிர, இந்தக் காலநிலை உச்சிமாநாட்டின் பிற முடிவுகள் ஏமாற்றத்தையே தந்திருக்கின்றன. ‘2025 ஆம் ஆண்டுடன் உச்சபட்ச உமிழ்வுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்ற முந்தைய முடிவு விலக்கப்பட்டிருக்கிறது. மிகவும் கவலைக்குரிய ஓர் அம்சமாக, ‘குறைவான உமிழ்வுகள் உள்ள எரிசக்தியை ஊக்குவிக்க வேண்டும்’ என்ற வரி இறுதி அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
நிகர பூஜ்ய உமிழ்வை நோக்கிப் பயணிக்க வேண்டிய நாம், இன்னும் ஏன் ‘குறைவான உமிழ்வு’ என்ற கட்டத்திலேயே நின்றுகொண்டிருக்கிறோம்? இந்த வரி, புதைபடிவ எரிபொருட்களிலேயே குறைவான உமிழ்வுகள் கொண்டதாகப் பார்க்கப்படும் இயற்கை எரிவாயுவின் உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கான ஒரு மறைமுக முயற்சியா என்ற கேள்வியை எழுப்புகிறது.
10 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையில், ‘புதைபடிவ எரிபொருள்’ என்ற சொல் ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது. அதுவும், ‘புதைபடிவ எரிபொருட்களுக்கான, செயல்திறனற்ற மானியங்களைச் சிறிது சிறிதாகக் குறைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறோம்’ என்று தட்டையான வகையில் காணப்படுகிறது.
ஆகவே, புதைபடிவ எரிபொருட்கள், நிகர பூஜ்ய உமிழ்வுகள், நிலக்கரிப் பயன்பாடு போன்ற முக்கியமான அம்சங்களைப் பற்றி இந்த உச்சிமாநாட்டில் எந்த உறுதியான முடிவுகளும் எட்டப்படவில்லை. காலநிலை வல்லுநர்கள் பலரும், இந்தத் தகவல்களின் பின்னணியில்தான், ‘உலக வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற கனவு கொல்லப்பட்டுவிட்டது’ என்று விமர்சிக்கிறார்கள்.
‘இழப்பு, பாதிப்புக்கான நிதியம் முக்கியமானது. ஆனால், காலநிலைப் பிரச்சினைக்கு அது மட்டுமே பதில் கிடையாது. காலநிலை லட்சியங்களைப் பொறுத்தவரை இந்த உலகத்துக்கு ஒரு பெரிய பாய்ச்சல் தேவை’ என்று மாநாட்டின் உரையில் குறிப்பிட்டார் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டர்ஸ். அந்தப் பெரிய பாய்ச்சலை எழுத்து வடிவில், ஒரு இலக்காகக்கூட நிகழ்த்தாமல் உச்சிமாநாடு முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டிலாவது நல்ல முடிவுகள் சில எட்டப்படுமா என்று காத்திருக்க வேண்டும். ஆனால், அதுவரை காலநிலைப் பேரிடர்களும் காத்திருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
புதைபடிவ எரிபொருட்கள், நிகர பூஜ்ய உமிழ்வுகள், நிலக்கரிப் பயன்பாடு போன்ற முக்கியமான அம்சங்களைப் பற்றி இந்த உச்சிமாநாட்டில் எந்த உறுதியான முடிவுகளும் எட்டப்படவில்லை! - நாராயணி சுப்ரமணியன் கடல் உயிரின ஆராய்ச்சியாளர், தொடர்புக்கு: nans.mythila@gmail.com