Published : 21 Nov 2022 06:51 AM
Last Updated : 21 Nov 2022 06:51 AM

பன்முகக் கலாச்சாரத்தைப் போற்றுவோம்!

கே.எஸ்.அழகிரி

இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்துக்கு முன், பின் ஏற்பட்டிருக்கும் சிந்தனை மாற்றங்கள் அளப்பரியவை. இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பது என முடிவெடுத்தபின், முழுமையான நிலப்பரப்பாக அல்லாமல், குறைந்தது மூன்று பகுதிகளாகப் பிரித்துத் தர ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள்.

அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். ஜின்னாவின் முயற்சியால் பாகிஸ்தான் தோன்றியது. அப்போது ஏற்பட்ட கலவரங்கள், பிணக்குகள், சித்ரவதைகள், மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகியவற்றை நெஞ்சம் ஏற்றுக்கொள்ளாது. ஆனால் மகாத்மா காந்தி, கான் அப்துல் கஃபார் கான், ஜவாஹர்லால் நேரு, அபுல்கலாம் ஆசாத், ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற எண்ணற்ற தேசியத் தலைவர்கள் ஒரு பாலமாக நின்று இந்த அதிபயங்கர வன்முறைக்கு முடிவுகட்டி, விரைந்து சுமூக நிலையை உருவாக்கினார்கள்.

அந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் வசித்த இந்துக்களும் இந்திய முஸ்லிம்களும் சீக்கியர்களும் இன்னும் பிற மனிதாபிமானம் மிக்கவர்களும் மத வன்முறைத் தீயை அணைத்தார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 10% என்றால், அதைத் தடுக்கச் செயல்பட்டவர்கள் 90% பேர்.

அப்போது காஷ்மீரில் கூட ஓர் அற்புதம் நிகழ்ந்தது. 99% முஸ்லிம்கள் வாழ்கிற அந்த மாநிலம் நேருவின் உறுதிமொழியை ஏற்று, காந்தியின் மீது வைத்த நம்பிக்கையால் இஸ்லாமிய பாகிஸ்தானில் இணையாமல், ஜனநாயக முறைப்படி இந்தியாவுடன் இணைந்தது. கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமின்றி காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த பெருமை நேருவைச் சேரும். காஷ்மீரின் முஸ்லிம்கள் விரும்பியிருந்தால், மவுண்ட் பேட்டன் காஷ்மீரைப் பாகிஸ்தானுக்கு வழங்கியிருப்பாரே ஒழிய, இந்தியாவுக்கு வழங்கியிருக்க மாட்டார். அந்தச் சூழலில் அவர்களுக்குச் சில சலுகைகள் வழங்கப்பட்டன; ஒரு சில சலுகைகளைக் கொடுத்துப் பெரும் நிலப்பரப்பை எடுத்துக்கொள்வது சாதாரண காரியமல்ல. ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் அதைக் குறைகூறுகிறார்கள்.

நம்மோடு சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் இன்றைக்கு இரண்டு நிலப்பரப்பாக (பாகிஸ்தான், வங்கதேசம்) இருக்கிறது. ஆனால், அங்கிருப்பது ஒரே மதம். அதே நேரம், இந்தியாவில் பல்வேறு மதங்கள் இருந்தும், அதன் நிலப்பரப்பு ஒன்றாகவே இருக்கிறது. அதற்குக் காரணம், நேருவும் அவருடைய ஆட்சிமுறையும்தான். காஷ்மீரின் முஸ்லிம்கள் உலகத்துக்கே எடுத்துக் காட்டானவர்கள். இந்தியாவின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டவர்கள். எல்லா நாடுகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற சில பிரிவினைவாதப் போக்குகள் காஷ்மீரிலும் உண்டு. ஆனால், அவர்கள்தான் காஷ்மீரின் உண்மையான சக்திகள் என்று கருதக் கூடாது.

இந்தப் பின்னணியில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் கருத்துப்பேழை பகுதியில், நவம்பர் 8 அன்று ‘சிலருக்கு மட்டும் ஏன் தீவிரவாதச் சிந்தனை' என்கிற தலைப்பில் புதுமடம் ஜாபர் அலி ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். வரிக்கு வரி பொருள் பொதிந்த, சமநிலையில் நேர்மையான கருத்துகளை அவர் பதிவுசெய்திருந்தார். அவருடைய தெளிவான பார்வை பாராட்டப்பட வேண்டியது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியச் சமூகத்தில் சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் மதவெறுப்பு, புரிதலின்மை ஆகியவை பற்றிய தெளிவான கருத்துகள் அதில் இடம்பெற்றிருக்கின்றன.

ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான காரணங்களுடன் அவர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை, ஜனநாயக உணர்வுமிக்க, இந்திய அரசமைப்பை மதிக்கக்கூடிய, பெரும்பான்மை மக்கள் வாழ்கின்ற இந்தியச் சமூகத்துக்கு உண்டு. ஜாபர் அலி கூறுகிறார்: ‘மதவெறியை எதிர்க்க வேண்டிய பொறுப்பை மொத்தமாக முஸ்லிம்கள் தலையில் கட்டுவது மதச்சார்பற்ற சக்திகளே’ - ஏறக்குறைய இது உண்மையான கூற்று. ஏனென்றால், எந்தவொரு கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் பிரச்சினைகள் வருகிறபோது பிற சகோதரர்கள்தான் உதவ வேண்டும்.

இஸ்லாமியச் சமூகத்தில் வழிதவறிய சில இளைஞர்கள் வன்முறையைத் தத்துவமாகக் கையிலெடுத்துப் பல பெரிய சேதங்களைச் சமூகத்தில் உருவாக்குவதை இஸ்லாமியத் தலைவர்கள் விரும்புவதில்லை. ஆனால், அவர்கள் அழுத்தமாகக் கண்டனம் தெரிவிக்கத் தயங்குகிறார்கள். இது ஒரு மிகப்பெரிய குறைபாடு.

அதற்குக் காரணம், வன்முறையாளர்கள் அல்லது தீவிரவாதிகள் தங்களுடைய மதப்பற்றைக் குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள். கான் அப்துல் கஃபார் கானோ அபுல்கலாம் ஆசாத்தோ முஸ்லிம் லீக்கின் பாகிஸ்தான் கோஷத்தை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. காரணம், இந்திய ஒற்றுமையின்மீது அளப்பரிய நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. இன்றைய இஸ்லாமியத் தலைவர்களுக்கு அந்த நம்பிக்கை இருந்தாலும்கூட, புதுமடம் ஜாபர் அலியைப் போல அச்சமின்றி அவர்கள் கருத்துகள் சொல்வதில்லை.

இந்தியச் சமூகத்திலும் அந்தக் குறை இப்போது ஏற்பட்டிருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ஜனநாயக உணர்வுமிக்க தலைவர்கள் வருத்தமடைந்தார்கள், கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு ஒரு தீர்வை ஏற்படுத்த அவர்கள் தயங்கினார்கள் அல்லது அச்சமடைந்தார்கள். அது நம் சமூகத்தில் இருந்த மதவெறியர்களுக்கு ஒரு ஊக்கத்தைக் கொடுத்தது. ஆனால், அன்றைக்கு காந்தி உயிரோடு இருந்திருந்தால், ‘இந்திய மக்களே என்னோடு வாருங்கள், நம்முடைய சகோதரர்களுடைய வழிபாட்டுத் தலம் இடிக்கப்பட்டுவிட்டது. நாம் அதை மீண்டும் உருவாக்குவோம்’ என்று சொல்லிப் புறப்பட்டிருப்பார். அதுதான் காந்தியத் தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம்.

ஒன்று மட்டும் உறுதி. இந்தியக் கலாச்சாரம் என்பது பன்முகக் கலாச்சாரம். பல நூறு ஆண்டுகளாக இருந்துவருகிற கலாச்சாரம். இதை ஒற்றைக் கலாச்சாரமாகவோ, ஒருமொழி சார்ந்ததாகவோ, ஒரே இறைவழிபாடு உள்ளதாகவோ மாற்ற நினைத்தால், பாகிஸ்தான் எப்படி இரண்டு துண்டானதோ, அதேபோல இந்தியாவும் பல துண்டுகளாகச் சிதறக்கூடிய நிலை ஏற்படும். நம் நாட்டில் தோன்றிய மாபெரும் தலைவர்கள் தங்கள் மதத்தின்மீதும், தங்கள் கடவுளின்மீதும், தங்கள் மொழியின்மீதும் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தாலும் அவற்றைப் பிறர்மீது திணிக்காமல் இருந்தார்கள். அதுதான் இந்தியாவின் தேசியப் பண்பு, தேசியக் கலாச்சாரம். நிச்சயம் நாமும் அந்தப் பாதையில்தான் இடர்பாடின்றி எப்போதும் நடக்க வேண்டும். - கே.எஸ்.அழகிரி தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தொடர்புக்கு: tncc.media@gmail.com

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x