

உணவு விடுதி ஒன்றில் எச்சில் இலையை அதற்குரிய தொட்டியில் போடப் போகிறான் ஒருவன். அதில் விழும் இலைகளுக்காகக் காத்திருந்த ஒருவனின் கை அதை எடுக்கப் பாய்ந்த வேகத்தில், இலையைப் போட வந்தவனின் கைமீது பட்டுவிட்டது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத அவன், கடை முதலாளியின் பையனிடம் புகார் கூறிவிட்டுப் போய்விட்டான். த
ன் நிறுவனத்தின் மரியாதையைக் காப்பாற்றும் வேகத்தில் சென்ற அவன், எச்சில் தொட்டியில் இலைகளை ஆராய்ந்து கொண்டிருந்தவனின் காலை வாரிவிட, அவன் எச்சில் தொட்டிக்குள் விழுந்துவிட்டான்; கரண்டியால் சில அடிகளும் விழுந்தன. அடிபட்டவனுக்காக ஆதரவுக் குரல்கள் எழுந்தன. அவ்வாறு உரக்கக் குரல் எழுப்பும் ஒருவனைக் குறித்து, ‘அவன் கூப்பாடு போடுவதைக் கவனித்தால் காலம்காலமாக அடிவாங்கி, உதைபட்டு அனாதையாக அழுது ஓலமிட்டு ஓய்ந்த நூற்றுக்கணக்கான பொறுக்கிகளுக்கெல்லாம் சேர்த்துப் பதில் கேட்பது போலிருந்தது’ என்கிறார், இக்கதையின் ஆசிரியரான சுந்தர ராமசாமி.
1953இல் தொ.மு.சி.ரகுநாதனி்ன் ‘சாந்தி’ இதழில் வெளியான இக்கதையின் தலைப்பு: ‘பொறுக்கி வர்க்கம்’. பொறுக்கி என்பது ஒரு வசைச் சொல். சில நேரங்களில் ‘எச்சில்’, ‘கந்தல்’, ‘பொம்பளை’ என்ற அடைமொழிகளுடனும் இச்சொல் வெளிப்படும். தனிப் பாடல் கவிஞர் ஒருவர் ‘நக்கிப் பொறுக்கி’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு இணையான ‘வீணன்’ என்ற சொல்லும் உண்டு. இலங்கைத் தமிழர்களின் ‘காடையர்’ என்ற சொல்லும் இதற்கு இணையானதே.
பொறுக்கி: பொறுக்குதல் என்ற வினை (தொழில்) சார்ந்தும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. சிப்பி, கிளிஞ்சல் பொறுக்கல், அரிசியில் கல் பொறுக்கல், கதிர் பொறுக்கல், சுள்ளி பொறுக்கல் என்பன இதற்குச்சான்றுகளாகும். கருமித்தனம் கொண்டவனைப் ‘பீயில அரிசி பொறுக்கி’ என்று பகடி செய்வதும் உண்டு. இழிவான செயல் மேற்கொள்ளுதலைப் பொறுக்கித்தனம் என்று சுட்டுதலும் உண்டு.
பொறுக்கி என்ற சொல்லுக்கு அகராதியில் பொருள் தேடுவதைவிடவும், பொறுக்கி என்ற வரையறைக்குள் யார் அடங்கியுள்ளார்கள் என்று கண்டறியும்போது முழுமையான பொருள் வெளிப்படும். வேலையின்றி வறுமைவாய்ப்பட்டு, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர், சமூகத் தகவுகளை (மேட்டிமையோர் வகுத்த தகவுகள் அல்ல) புறந்தள்ளி நிற்போர், மேட்டிமையோரின் எடுபிடிகளாகச் செயல்படுவோர், வர்க்க அடையாளமின்றி இருப்பதுடன் வர்க்கப் போராட்டங்களை ஒடுக்கத் துணைநிற்போர், பிச்சைக்காரர், ஊர்சுற்றிகள் எனப் பல தரத்தினர் இதில் அடங்குவர்.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட ‘பொறுக்கி வர்க்கம்’ கதை வெளியானபின், அதை வெளியிட்ட ரகுநாதனிடம் அக்கதையின் தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘வர்க்கம்’ என்ற சொல்லாட்சி குறித்துக் கேள்வி எழுப்பினராம். கேள்வி எழுப்பியவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். அவர்கள் கருத்துப்படி உடல் உழைப்பு எதுவுமின்றி, உற்பத்திக் கருவிகள் எவற்றுடனும் எவ்விதத் தொடர்புமின்றி, எச்சில் இலையில் உள்ள மிச்சம் மீதியைத் தின்று வாழ்வோருக்கு வர்க்க அடையாளம் எதுவும் கிடையாது. இச்சிந்தனையானது உதிரிப் பாட்டாளிவர்க்கம் (‘லும்பன் புராலடேரியட்’) என்ற சொல்லாட்சியின் தாக்கத்தால் உருவானதாகும்.
‘லும்பன் புராலடேரியட்’: ‘லும்பன் புராலடேரியட்’ என்ற சொல் மார்க்ஸ், எங்கல்ஸ் இருவரும் இணைந்து உருவாக்கிய ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. ‘பூர்ஷ்வாக்களும் தொழிலாளிகளும்’ என்ற தலைப்பில் இச்சொல் இடம்பெற்றுள்ள பகுதி வருமாறு: “பழைய சமுதாயத்தின் மிகக் கீழ் அடுக்குகளிலிருந்து தூக்கியெறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் உதிரிப் பாட்டாளி வர்க்கம் (லும்பன் புராலடேரியட்), பாட்டாளி வர்க்கப் புரட்சியின் காரணமாகச் சிற்சில இடங்களில் இயக்கத்துக்குள் அடித்திழுத்துக் கொள்ளப்பட்டுவருகிறது. ஆயினும் தனது வாழ்க்கை நிலைமை முழுவதற்கும் ஏற்ப அது பிற்போக்குச் சூழ்ச்சிகளுக்கு விலைபோக இசைவளித்து அதற்காகவே மேலும் தயாராக இருக்கும்.”
பாட்டாளி வர்க்கத்திடமிருந்து லும்பன் புராலட்டேரியனை மார்க்ஸ் வேறுபடுத்திக் காட்டியுள்ளார். பிரெடெர்க் பெண்டர் கருத்துப்படி ‘லும்பன் பாட்டாளி வர்க்கம் என்பது நம்பத்தகாதது, பிற்போக்கு அரசியல்வாதிகளின் துரிதமான தீர்வுகளுக்கு ஆதரவு தரக்கூடியது’ என்று மார்க்ஸ் கருதியுள்ளார் (எஸ்.வி.ராஜதுரை). என்ன சொல்லால் அழைத்தாலும் இவர்கள் எளிதில் விலைபோகக் கூடியவர்கள்.
(தமிழகத்தின் வெகுமக்கள் மொழியில் சொன்னால், குவார்ட்டர் பாட்டிலுக்கு). சில தனி மனிதர்களின் கட்டளைகளுக்கு ஆட்பட்டிருந்த இவர்கள் இன்று கொள்கைப் பிடிப்பில்லாத வெற்று ஆரவார அரசியல் மற்றும் சாதிய அமைப்புக்களின் பணியாளர்களாக மாறிவருகின்றனர். இதனால்தான் சில அரசியல் கட்சிகளும் சாதிய அமைப்புகளும் இவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. ‘வளர்த்த கிடா மார்பில் பாயும்’ என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. - பேராசிரியர், பண்பாட்டு ஆய்வாளர், தொடர்புக்கு: sivasubramanian@sivasubramanian.in