

தமிழர்களின் விருப்பத்துக்குரிய ஊடகமாக விளங்கிய நாடக்கலை, கைபேசிகளின் பரவலாக்கத்தால் சுவடில்லாமல் நலிந்து கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் நாடக சபாக்களாலும் மன்றங்களாலும் தமிழகம் நிறைந்திருந்தது; கிராமத் திருவிழாக்களில் நாடகங்கள் தவறாமல் இடம்பெற்றன. திரைப்படங்கள் பரவலாகத் தொடங்கியதும் நாடக நடிகர்களே பெரும்பாலும் திரைப்பட நடிகர்களாக மாறினர். தொலைக்காட்சி வந்தது, நாடகம் வேகமாக வீழ்ந்தது.
கைபேசிகளின் பரவலான பயன்பாட்டால் மக்கள் சமூக வலைத்தளங்களிலும் காணொளித் தளங்களிலும் செலவிடும் நேரம் அதிகரித்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை மக்கள் விரும்பிய நேரடிக் காட்சி ஊடகமான நாடகக்கலை, இருந்த இடம் இப்போது தெரியவில்லை. கிராமங்கள் தோறும் காணப்பட்ட நாடக மன்றங்களும், உள்ளூர் நாடக நடிகர்களும் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை. இருப்பினும், நாடகக்கலைமீது தீவிர ஈடுபாடு கொண்ட நாடகக் கலைஞர்களும் ரசிகர்களும் சமூக, வாழ்வியல், வரலாற்று நாடகங்களை அவ்வப்போது அரங்கேற்றிவருகின்றனர். குறிப்பாக, சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் நாடகங்களின் அரங்கேற்றம் இன்றும் தொடர்கிறது.
ஆனால், இன்றைய தலைமுறையினருக்கு நாடகம் என்பது சின்னத்திரைத் தொடர்தான். நாடகம் ஒன்றை அரங்கேற்ற மேடை, பந்தல், சீன் செட்டிங், ஒளி, ஒலி அமைத்தல், நடிக-நடிகையர் சம்பளம், ஒப்பனைச் செலவுகளுடன் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம்வரை செலவாகிறது; இது நாடக ஈடுபாடு உள்ளவர்களின் கைகளைக் கட்டிப் போடுகிறது. எனவே, நலிந்துவரும் நாடகக் கலைக்குப் புத்துயிர் கொடுக்கும் நோக்கில், தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வழங்குவதைப் போல, கிராமங்களில் சமூக, வரலாற்று, வாழ்வியல் நாடகங்களை அரங்கேற்ற அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என நாடக மன்றங்கள், நடிகர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
சிறப்பாகக் கலைப்பணி ஆற்றும் கிராமப்புற நாடகக் கலைஞர்களுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுத் தொகை வழங்கியும் கௌரவித்து, இக்கலைக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டால், நாடக்கலை மட்டுமின்றி நாடகக் கலைஞர்களும் வாழ்வும் வளமும் பெறுவர். முத்தமிழின் ஓர் அங்கமான நாடகக் கலை பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவும் இக்கலையைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்கவும் புத்துயிர் ஊட்ட வேண்டியது அவசியமாகும். - தொடர்புக்கு: periyarmannan.p@gmail.com