

ஐரோப்பாவில்தான் கால்பந்தாட்டம் பிறந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அது தென் அமெரிக்காவில் அறிமுகமானது; இங்கிலாந்தில் கல்வி பயின்ற சார்லஸ் மில்லர் என்ற பிரேசிலியரால் தென் அமெரிக்காவுக்குக் கால்பந்தாட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும், தென் அமெரிக்காவில்தான் அதன் உண்மையான கலைஞர்கள் வாழ்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்து சுதந்திரம் பெற்ற இந்த நாடுகளில்தான், இந்த விளையாட்டு ஒரு கலையாக உருவானது.
உயிர்பெற்ற விளையாட்டு: கால்பந்து அவர்களுக்குக் கைமாறிக் கிடைத்த கலையாக இருந்தாலும் பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, கொலம்பியா, பெரு போன்ற நாடுகளின் முதல் தலைமுறைக் கலைஞர்கள் அதை உயிர்ப்புடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்தினர். இந்தியாவில் கிரிக்கெட்டைப் போல் அல்லாமல் கால்பந்தாட்டம் தென் அமெரிக்காவில் பரவலாக்கமடைந்தது. இன்றும் உலகம் வியந்து பார்க்கப்போகும் கால்பந்தாட்ட நாயகன் தென் அமெரிக்காவின் ஏதோ ஒரு தெருவில்தான் சுற்றிக்கொண்டிருக்கிறான்.
உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான பீலே, இப்படி பிரேசில் வீதிகளில் விளையாடிக்கொண்டிருந்தவர்தான். முறையான பந்துகூட இல்லாமல் காகித உருண்டையில் கால்பந்து விளையாடிப் பழகியவர் அவர். ஐரோப்பியர்களைப் போல் தென் அமெரிக்கர்களுக்குக் கால்பந்து விளையாட்டுப் பயிற்சிமுறை சார்ந்தது அல்ல; வாழ்க்கைமுறை. அதனால், அவர்கள் கால்பந்தாட்டத்தை விளையாட்டுக்கும் ஒருபடி மேலேதான் வைக்கிறார்கள்.
இன்றைய சர்வதேசக் கால்பந்தாட்டப் பட்டியலில் தென் அமெரிக்க நாடுகளான பிரேசிலும் அர்ஜெண்டினாவும்தான் முதன்மை பெறுகின்றன. ஆனால், இதெல்லாம் தென் அமெரிக்கர்களுக்கு ஒரு பொருட்டல்ல. உலகக் கோப்பைப் போட்டிகள், பட்டியல்களாக மட்டும் தங்கள் கால்பந்தாட்ட ரசனையை அவர்கள் குறுக்கிப் பார்ப்பதில்லை. ஆங்கிலம் கோலோச்சும் உலக இலக்கியத்தில் தென் அமெரிக்கா தன் தனித்துவத்தை உறுதிசெய்துள்ளது. அதுபோல் இந்தக் கால்பந்தாட்டம் அவர்களின் தனித்துவமான பண்பாட்டு அடையாளம். இந்தக் காரணங்களால்தான் ஐரோப்பாவின் கால்பந்தாட்டத்துடனோ ஆட்டமுறையுடனோ ஒப்பிட முடியாத தனித்துவம் தென் அமெரிக்கக் கால்பந்தாட்டத்துக்குக் கிடைத்துள்ளது.
மாய யதார்த்தவாதம்: தென் அமெரிக்காவின் கால்பந்து பாணி சுதந்திரமானது. விளையாட்டைத் தேடிச் சென்று அவர்கள் கற்கவில்லை.. அவர்கள் விளையாட்டுடனேதான் இருக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய பாணியில் கால்பந்தாட்டம் சுதந்திரத்துக்குப் பதிலாக ஒழுக்கமாக நிறுவப்பட்டுள்ளது. சுதந்திரத்தால் உருவாகும் படைப்பாக்கம் தென் அமெரிக்க விளையாட்டு முறையில் நிகழ்கிறது. ஆனால், ஒழுங்கு, கட்டுப்பாட்டை உருவாக்குவதால் ஐரோப்பிய பாணியில் படைப்பாக்கம் நிகழ்வதில்லை. அதுபோல் தென் அமெரிக்க வீரர்கள், மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் எதிர் ஆட்டக்காரர்களிடமிருந்து பந்தை நகர்த்திச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட தனித்துவத்துக்குப் பதிலாக ஒவ்வொரு வீரர்களின் பங்களிப்புடன் பந்தைக் கடத்துவதிலே ஐரோப்பியர்கள் கவனத்துடன் இருக்கிறார்கள். அப்படித்தான் பயிற்றுவிக்கவும் படுகிறார்கள்.
ட்ரிப்பிங் எனப்படும் கால்பந்தாட்ட நுட்பத்தில் தென் அமெரிக்கர்கள் தேர்ச்சிபெற்றவர்கள். இது ஒரு படைப்பூக்கச் செயல்பாடு. பந்தை முன்னும் பின்னும் உதைத்து எதிர் ஆட்டக்காரர்களுக்குப் போக்குக்காட்டி, வீரர்கள் பந்தைக் கடத்திச் செல்லும் இந்த நுட்பத்தில் பீலே, மரோடனா, மெஸ்ஸி போன்ற கால்பந்தாட்டக் கலைஞர்கள் தேர்ந்தவர்கள். தென் அமெரிக்கக் கலை, கச்சாவானது. அதனால் அது உயிர்ப்புடன் இருக்கிறது. ஐரோப்பியக் கலையோ முறைப்படுத்தப்பட்டது. அதனால், அது செயற்கையாக இருக்கிறது. இந்தியாவுடன் ஒப்பிடத் தகுந்த கலாச்சாரப் பின்னணி கொண்டது
லத்தீன் அமெரிக்க நாடுகள் என்பதை அதன் இலக்கியம்வழி அறிய முடிகிறது; அதுபோல் இந்தியாவுக்கு இணையான பல மாய யதார்த்தவாதக் கதைகளையும் கொண்டது. இதன் தொடர்ச்சி என இந்தக் கால்பந்தாட்டக் கலையைச் சொல்லலாம். தென் அமெரிக்க வீரர்கள் மைதானத்தில் ஆடும்போதுதான் இந்த மாய யதார்த்தவாதம் உண்மை என்பதை நாம் உணர முடியும்.