

‘ஆசியாவின் பிரேசில்’ எனக் கால்பந்தாட்டத்தில் அழைக்கப்பட்ட நாடு இந்தியா. இன்றும் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் விளையாட்டு வகுப்பில் விளையாடப்படும் முதன்மையான விளையாட்டு கால்பந்தாட்டம்தான். பள்ளிகளில் உள்ள கால்பந்தாட்ட மைதானங்கள்தாம் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு கிரிக்கெட் மைதானங்களாகவும் பயன்படத் தொடங்கின.
தென் அமெரிக்காவில் கால்பந்தாட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்து ராணுவத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா இருந்த காலகட்டம் அது. அதனால், முதல் கால்பந்தாட்ட சங்கம் அங்கே அமைந்தது. தென்னிந்தியாவின் முதல் கால்பந்தாட்ட சங்கம் கேரளத்தில் திருச்சூரில் அமைக்கப்பட்டது. வட சென்னைப் பகுதியில் இதே காலகட்டத்தில் கால்பந்தாட்டம் பிரபலம் அடையத் தொடங்கியது.
1894இல் சென்னையில் முதல் கால்பந்துத் தொடர் ஜிம்கானா கிளப்பில் நடைபெற்றுவந்தது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியக் கால்பந்தாட்ட வரலாற்றில் சையத் அப்துல் ரஹீமின் பெயர் விசேஷமானது. இந்தியக் கால்பந்தாட்டத்தை ஆசியாவின் பிரேசிலாக்கிய பெருமை இவருக்கு உண்டு. 2-3-2-3, 3-3-4 என்றரீதியில் விளையாடப்பட்டுவந்த கால்பந்தாட்ட முறை, 4-2-4 என மாற்றியமைத்தவர் இவர்.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியக் கால்பந்தாட்ட அணிக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பை இவர் ஏற்றார். முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. 1956 மெல்பர்ன் ஒலிம்பிக்ஸில் இந்திய அணி அரையிறுதிவரை முன்னேறியது. 1962 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா தங்கம் வென்றது. அந்த 1950, 60 காலகட்டங்களில் பீட்டர் தங்கராஜ், பி.கே.பானர்ஜி, ராம் பகதூர், ஷெய்க் அப்துல் லத்தீப், தர்மலிங்கம் கண்ணன் போன்ற இந்தியக் கால்பந்தாட்ட வீரர்கள் சர்வதேசக் கவனத்தையும் ஈர்த்தனர்.
இவையெல்லாம் சையத் அப்துல் ரஹீம் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த அற்புதங்கள். அது தொடர்ந்திருந்தால் ஃபிஃபா போட்டிக்குள் இந்தியா நுழைந்திருக்கும் என உறுதியாகச் சொல்லலாம். 1963இல் புற்றுநோயால் அவர் இறக்கும்வரை இந்தியாவின் கால்பந்துப் பொற்காலம் தொடர்ந்தது. அதன் பிறகு இந்தியக் கால்பந்து அந்த உயரத்தை எட்டவே இல்லை.