ஐரோப்பிய அணி நிகழ்த்திய மாயாஜாலம்!

ஐரோப்பிய அணி நிகழ்த்திய மாயாஜாலம்!
Updated on
2 min read

பயிற்சியாளர் ஒருவரால் ஓர் அணியை எவ்வளவு உயரத்துக்குக் கொண்டுசெல்ல முடியும் என்பதை 2018இல் நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நிரூபித்தன. ஐரோப்பாவின் சிறிய நாடான குரேஷியா கடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிவரை முன்னேறி ஜாம்பவான் அணிகளுக்கு ஆச்சரியமூட்டியது. அந்த அணியின் திடீர் பாய்ச்சலுக்குப் பின்னணியில் இருந்தது, தலைமைப் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிச்.

1998 முதல் (2010 தவிர்த்து) உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளில் விளையாடிவரும் குரேஷிய அணி, 1998இல் அரையிறுதிவரை முன்னேறி 3ஆம் இடத்தைப் பிடித்தது. அதன் பிறகு, பெரியளவில் சாதிக்காத அந்த அணி, 20 ஆண்டுகள் கழித்து திடீர் எழுச்சிபெற்றது. அந்த அணியின் தலைகீழ் மாற்றத்துக்கு வித்திட்டவர், ஸ்லாட்கோ டாலிச்.

2018 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்கும் முன்பு குரேஷிய அணி பத்தோடு பதினொன்றாகத்தான் இருந்தது. தொடர் தோல்விகளால் தள்ளாடிக்கொண்டிருந்தது. உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்பாகத்தான் டாலிச் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். உலகக் கோப்பை தொடங்குவதற்கு 9 மாதங்களுக்கு முன்புதான் அவர் நியமிக்கப்பட்டார். உலகக் கோப்பைக்குக் குரேஷியா தகுதிபெறுமா என்று அந்த நாடே எதிர்பார்த்திருந்த வேளையில் அவர் பயிற்சியாளரானார். ஆனால், 9 மாதங்களில் அந்த அணியைப் பூஜ்ஜியத்திலிருந்து உச்சத்துக்கு அழைத்துச் சென்றார் டாலிச்.

குரேஷியக் கால்பந்துக் கூட்டமைப்பு டாலிச்சைப் பயிற்சியாளராக நியமித்தபோது, அந்தப் பணியை முழுமையாக அவர் ஏற்கவில்லை. “தகுதிச் சுற்றைத் தாண்டி உலகக் கோப்பைக்குக் குரேஷியா அணி சென்றால் மட்டுமே தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பேன். இல்லையென்றால், வெளியேறிவிடுவேன்” என்ற நிபந்தனையின் பேரில்தான் பயிற்சியாளரானார். ஆனால், தகுதிச் சுற்றைத் தாண்டி மட்டுமல்ல, உலகக் கோப்பை இறுதியாட்டம்வரை குரேஷியா சென்றது என்றால், டாலிச் நிகழ்த்திய மாயாஜாலம் அப்படிப்பட்டது.

வெறும் 39 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட குரேஷியாவில் கால்பந்துப் போட்டிகளுக்கான பெரிய கட்டமைப்போ சொல்லிக்கொள்ளும்படியான வசதிகளோ இல்லை. சர்வதேசத் தரத்திலான மைதானம்கூட குரேஷியாவில் இல்லை. ஆனால், கால்பந்தாட்ட வெறி அவர்களின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது. அணி வீரர்கள் எல்லோருமே மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். குரேஷியா அணியில் சிறுசிறு விஷயங்கள்கூடப் பூதாகரமாக வெடிக்கும். டாலிச் பயிற்சியாளராவதற்கு முன்பு சிறு பிரச்சினைக்காக ஜெர்சியைக்கூட அணிய மறுத்தார்கள் வீரர்கள்.

டாலிச் 2017இல் பயிற்சியாளரான பிறகு, இதுபோன்ற பிரச்சினைகளால் ஏற்படும் கவனச்சிதறல்களை முடிவுக்குக் கொண்டுவந்தார். நேர்மறையான விஷயங்களை வீரர்களின் மனதில் விதைத்தார். சிறுசிறு விஷயங்களால் வீரர்களுக்கு மனச்சோர்வும் கவனச்சிதறலும் ஏற்படாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் டாலிச் செய்தார். அது மட்டுமல்ல; இளம் வீரர்களின் அணுகுமுறையை முழுமையாக மாற்றினார். அதன்மூலம் ஒட்டுமொத்த அணிக்கும் புதிய வடிவத்தைக் கொடுத்தார். பயிற்சியின்போது வீரர்களின் குறைபாடுகளைக் கண்டறிவது, அவற்றைச் சரிசெய்வது, சிறப்பாகச் செயல்படுபவர்களை ஊக்கப்படுத்துவது, அந்தத் திறமையைத் தக்கவைக்க ஆலோசனைகளை வழங்குவது எனத் தன்னுடைய பயிற்சி முறையை அமைத்துக்கொண்டார். அறிமுக வீரர், அனுபவ வீரர் என்ற வேறுபாடுகள் எல்லாம் அவரிடம் எடுபடவில்லை.

சரியாகச் செயல்படாத அனுபவ வீரர்களைத் தயக்கமின்றி வெளியேற்றினார். திறமையான அறிமுக வீரர்களை அரவணைத்தார். இதன்மூலம் அணிக்குப் புத்துயிர் ஊட்டினார். 2018 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டித் தொடர் முழுவதும் இந்த உத்திகளை மறக்காமல் பின்பற்றினார். அதற்குக் கைமேல் பலன் கிடைத்தது. வரலாற்றில் முதன்முறையாக இறுதியாட்டத்துக்கு முன்னேறியபோதும் அளவோடுதான் கொண்டாடினார்கள் குரேஷிய வீரர்கள். மிதமிஞ்சிய தன்னம்பிக்கை எதிர்மறையாகப் போய்விடும் என்பதால் கொண்டாட்டத்தைக்கூடத் தள்ளிப்போட்டனர்.

இறுதி ஆட்டத்தில் பலம்மிக்க பிரான்ஸ் அணியை எதிர்கொண்டபோதும் பயிற்சியாளர் டாலிச் தன் அணி வீரர்களைக் கடைசிக் கட்டம்வரை மெருகேற்றினார். ‘சேம் சைட் கோல்’, நடுவர் வழங்கிய சர்ச்சைக்குரிய பெனால்டி ஆகிய இரு தவறுகளால் இறுதியாட்டத்தில் குரேஷிய அணி தோல்வியடைந்தது. மற்றபடி 2018 தொடர் முழுவதுமே வெற்றிக்கொடியை அந்த அணி உயரப் பறக்கவிட்டதற்கு டாலிச்தான் முழுமுதற் காரணம்.

கம்பீரம் குறையாமல் கடந்த 4 ஆண்டுகளாகக் குரேஷிய அணியை முன்பைவிட அழகாக வார்த்திருக்கிறார் டாலிச். கத்தாரில் தொடங்கவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க, பயிற்சியாளர் டாலிச் தலைமையில் சாதிக்கும் நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளது குரேஷியா. மீண்டும் ஒரு மாயாஜாலத்தை டாலிச் நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்போடு கால்பந்து உலகம் காத்திருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in