

மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி கத்தாரில் இன்று தொடங்குகிறது. உலகின் ஒட்டுமொத்த கவனமும் கத்தாரின்மேல் நிலைத்திருக்கிறது. மொத்தம் 29 நாட்களுக்கு நீடிக்கும் இந்த உலகக் கோப்பையின் 64 போட்டிகளில் 32 அணிகள், உலக சாம்பியன் பட்டத்துக்காக மோதுகின்றன. இன்றைய தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரர்களாகக் கருதப்படும் லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பை இதுவாகவே இருக்கும். கடந்த உலகக் கோப்பையில் முத்திரை பதித்த பிரான்ஸின் கால்பந்து சூப்பர் ஸ்டார் கிலியன் இம்பாப் மீண்டும் உலகக் கோப்பை களத்துக்குத் திரும்புகிறார்.
கால்பந்து விளையாட்டில் எவ்விதப் பாரம்பரியமும் அற்ற கத்தார் தனது பண பலத்தின் மூலம் உலகக் கோப்பையை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ளது என மேற்கத்திய நாடுகளால் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரம் விழாக்கோலம் பூண்டிருக்கும் கத்தாரில் உலகமெங்கும் இருந்து கால்பந்து ரசிகர்கள் வந்து குவிந்திருக்கின்றனர். விறுவிறுப்புக்கும் கொண்டாட்டத்துக்கும் குறைவற்ற இந்த உலகக் கோப்பைக் கால்பந்தாட்டம் குறித்த சில முக்கிய அம்சங்கள்:
முதல் உலகக் கோப்பை: முதல் உலகக் கோப்பை போட்டி தென் அமெரிக்க நாடான உருகுவேயில் 1930இல் நடைபெற்றது. பெல்ஜியம், பிரான்ஸ், ருமேனியா, யூகோஸ்லாவியா, பிரேசில், அர்ஜெண்டினா உள்ளிட்ட 13 நாடுகள் அதில் பங்கேற்றன. முதல் உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4–1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவைத் தோற்கடித்தது. இதில் 19ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் லூசியன் லாரென்ட் அடித்த கோல்தான், உலகக் கோப்பையில் அடிக்கப்பட்ட முதல் கோல். இறுதிப்போட்டியில் உருகுவேயும் அர்ஜெண்டினாவும் மோதின. ஜூலை 30ஆம் தேதி, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் உருகுவே 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
2022 உலகக் கோப்பை ஏன் அசாதாரணமானதாகக் கருதப்படுகிறது?: அளவுக்கு அதிகமான வெப்பநிலை, குறுகிய நிலப்பரப்பு, கட்டமைப்புப் போதாமை போன்ற காரணங்களால், அரேபியத் தீபகற்பத்தில் இதற்குமுன் உலகக் கோப்பைப் போட்டி நடத்தப்பட்டதில்லை. இந்தச் சூழலில், கத்தாரில் நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை முக்கியத்துவம் பெறுகிறது. முக்கியமாக, உலகக் கோப்பைக் கால்பந்து வரலாற்றில் குளிர்காலத்தில் நடக்கும் முதல் உலகக் கோப்பையும் இதுவே.
பொதுவாக, உலகக் கோப்பை போட்டி ஜூலை மாதத்தில்தான் நடைபெறும். கத்தாரின் அதிகப்படி வெப்பநிலையைக் கருத்தில்கொண்டு, உலகக் கோப்பை 2022 போட்டி நவம்பர் மாதம் நடத்தப்படுகிறது. இருப்பினும், நவம்பர் மாதத்திலும் கத்தாரின் வெப்பநிலை விளையாடுவதற்கு உகந்ததாக இருக்காது என்பதால், போட்டி நடக்கும் மைதானங்களில் குளிரூட்டும் வசதி நிறுவப்பட்டுள்ளது. கத்தாரின் நிலப்பரப்பு தமிழ்நாட்டின் அளவில் 8 சதவீதமே. இதுவரை உலகக் கோப்பையை நடத்திய நாடுகளில் மிகச் சிறிய நாடும் இதுவே. இந்த உலகக் கோப்பையின் அனைத்துப் போட்டிகளும் தலைநகர் தோஹாவிலும் அதைச் சுற்றியுள்ள எட்டு மைதானங்களிலும் நடைபெற இருக்கின்றன.
யாருக்கு வெல்லும் வாய்ப்பு அதிகம்?: பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒன்றுதான் வெல்லும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றுடன் அர்ஜெண்டினா, ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து அணிகள் கோப்பைக் கனவுடன் வரிசையில் நிற்கின்றன. இருப்பினும், உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, அர்ஜெண்டினா, பிரான்ஸ், உருகுவே, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய எட்டு நாடுகள் மட்டுமே உலகக் கோப்பையை வென்றுள்ளன. இவற்றில் ஏழு நாடுகள் மீண்டும் களத்தில் வலுவாக உள்ளன.
உலகக் கோப்பையின் பரிசுத் தொகை என்ன?: இந்த உலகக் கோப்பை பரிசுத் தொகையின் மொத்த அளவு இந்திய மதிப்புப்படி ரூபாய் 3,600 கோடி. இதில் வெற்றி பெறும் அணிக்கு மட்டும் 343 கோடி ரூபாய் வழங்கப்படும். இது போன்ற உலகக் கோப்பை போட்டியில், பணத்தைவிட புகழும் பெருமையுமே ஒரு வீரருக்குக் கிடைக்கும் சிறந்த வெகுமதி.