

டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது காரணம் அல்ல; கட்டுமானப் பணிகள், தொழில்துறை வெளியிடும் மாசு, வாகனங்கள் வெளியிடும் புகை ஆகிய நகா்ப்புறக் காரணிகளே காற்று மாசு அதிகரிக்க முக்கியக் காரணம் என உச்ச நீதிமன்றம் 2021 நவம்பர் 15 அன்று கூறியுள்ளது. ஆனால், டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் பயிரின் கழிவுகளை எரிப்பதுதான் முக்கியக் காரணம் எனப் பெரும் விவாதங்கள் நடக்கின்றன.
முக்கியக் காரணங்கள்: ஏறக்குறைய கடந்த 20 ஆண்டுகளாகக் காற்று மாசுப் பிரச்சினையை டெல்லி தொடர்ந்து சந்தித்துவருகிறது. டெல்லியின் காற்றுத் தரம், வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பின் (SAFAR) சமீபத்திய தரவுகளின்படி, காற்றின் PM10, PM2.5 துகள்களின் அளவுகள் (PM என்பது Parts per million அதாவது, பத்து லட்சத்தில் ஒரு பங்கு) 100, 60 என்ற பாதுகாப்பான வரம்புகளுக்கு மேலாக, ஒரு கன மீட்டருக்கு முறையே 876 - 680 மைக்ரோகிராம்களை எட்டியுள்ளதாகக் கூறுகிறது.
பண்டிகைக் காலத்தில் அதிகளவில் பட்டாசு வெடித்தல், வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசு, விறகு அடுப்புகள் மூலம் நடக்கும் சமையல், கழிவை எரித்தல், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, மின் உற்பத்தி நிலையங்கள் - அதிகப்படி கட்டுமான நடவடிக்கைகள் போன்ற காரணிகள் இத்தகைய தீவிர மாசுபாட்டுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதுதான் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணம் என டெல்லி அரசு கூறுகிறது.
டெல்லியின் கடுமையான காற்று மாசுபாட்டுக்கு இந்த மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள் முக்கியக் காரணமாக இருந்திருந்தால் டெல்லி, பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களுக்கு இடையேயுள்ள லக்னோ, சண்டிகர், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களின் காற்று மாசு அபாயகரமாக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், இது போன்ற செய்திகள் இப்பெரும் நகரங்களிலிருந்து இதுவரை வெளிவரவில்லை. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களிலிருந்து வரும் காற்று மாசு உண்மையில் டெல்லியில் அதிக அளவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தியிருந்தால், அவர்களின் சொந்த மாநிலங்களிலும் காற்று மாசு அதிகரித்திருக்க வேண்டுமல்லவா?
குளிர்காலத்தில் டெல்லியில் காற்று மாசு அளவு அதிகரிப்பது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகும். பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் நெல், கோதுமை ஆகிய பயிர்களின் அறுவடைக்குப் பிறகு, அதன் கீழ்ப்பாகத்திலுள்ள அடிக்கட்டைகளை எரிக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், பயிர்க் கழிவை எரிப்பது டெல்லியின் காற்று மாசு அதிகரிப்பதற்கு எவ்வளவு பங்களிக்கிறது என்பதைப் பற்றி சரியான தரவுகள் இல்லை. டெல்லியிலுள்ள அறிவியல் - சுற்றுச்சூழலுக்கான மையத்தின் (CSE) தரவுகள் டெல்லியின் மாசு அளவு, பயிர்க் கழிவை எரிப்பது நிறுத்தப்பட்ட பிறகும் தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளதாகக் கூறுகிறது.
டெல்லியின் பிரச்சினை: இஸ்ரோவின் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, 20% மாசு மட்டுமே அண்டை மாநிலங்களால் ஏற்படுவதாகவும் மீதமுள்ள 80% மாசு டெல்லியிலிருந்து ஏற்படுவதாகவும் கண்டறிந்துள்ளது. ஐஐடி கான்பூர், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை, என்சிடி டெல்லி (2016) ஆகியவற்றின் சமீபத்தியக் கூட்டு அறிக்கையும், டெல்லியின் காற்று மாசுபாடு சாலைப் புழுதி, மின் உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் புகை, குப்பைகளை எரித்தல் ஆகியவற்றால் ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட உண்மைகளை ஆய்வுகள் கூறுகின்றபோது, விவசாயிகள் ஏன் தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறார்கள்?
மாசு அதிகமாக உமிழும் வாகனங்களின் சராசரி தனிநபர் பதிவு எண்ணிக்கை இந்தியாவிலேயே டெல்லியில்தான் மிக அதிகம். நகரின் பாதிக்கும் மேற்பட்ட உயர்நடுத்தர வர்க்க வீடுகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார்கள் நிற்கின்றன. இது மட்டுமல்லாமல், தொழில்துறை மண்டலங்களைச் சுற்றியுள்ள குறுகிய குடியிருப்புப் பகுதிகள் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுப்பதுடன், மாசுபட்ட காற்றின் வெளியேற்றத்துக்குத் தடையாக இருப்பதாகச் சில அறிக்கைகள் கூறுகின்றன.
தேவையற்ற செடி, புதர்களை விரைவாகவும், மலிவாகவும், எளிதாகவும் அகற்ற விவசாயிகள் தங்கள் வயல்களில் அறுவடைக்குப் பின் தீ வைக்கும் நிகழ்வு பழங்காலத்திலிருந்தே இந்தியாவில் வழக்கத்தில் இருந்துவருகிறது. பெரும்பாலும் இயந்திரங்களைக் கொண்டு நெல், கோதுமைப் பயிர்களை அறுவடை செய்வதால், சமீப ஆண்டுகளில் பயிர்க் கழிவுகளை எரிப்பது சற்று அதிகரித்துள்ளது. அறுவடை இயந்திரங்கள் நெல் பயிரின் அடிவரை சென்று வெட்ட முடியாத காரணத்தால், விவசாயிகள் வேறு வழியின்றி ரபி பருவப் பயிரான கோதுமையைப் பயிரிடுவதற்காக, நெல் பயிர்களின் கழிவை எரிக்க வேண்டியுள்ளது.
உதாரணமாக, கோதுமைச் சாகுபடி செய்யப்படும் பெரும்பாலான மாநிலங்களில், கரீஃப் பருவத்தில் செய்யப்படும் நெல் அறுவடைக்கும் கோதுமை விதைப்பதற்கும் இடையே மூன்று வாரங்களே உள்ளன. கோதுமை விதைப்பு அக்டோபர் மூன்றாவது வாரம் முதல் நவம்பர் நடுப்பகுதி வரை செய்யப்பட வேண்டும். விவசாயிகள் அதைத் தவறவிட்டால், கோதுமைப் பயிரின் மகசூல் கணிசமாகக் குறைந்துவிடும். இதனால், வேறு வழியின்றி பயிர்க் கழிவுகளைக் குறைந்த செலவில் பல காலமாக விவசாயிகள் எரித்துவருகிறார்கள்.
செய்ய வேண்டியவை: டெல்லியின் காற்று மாசுபாட்டை டெல்லிதான் ஏற்படுத்துகிறது என்பதை அம்மாநில அரசு முதலில் புரிந்துகொள்ள வேண்டும். காற்றின் மாசுபாட்டைக் குறைக்க, அங்கு குடியிருப்பவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். தற்போது பின்பற்றப்படும் நகர்ப்புற வளர்ச்சியால் ஏற்படும் சிக்கல்களை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். முக்கியமாக, காற்று மாசு பற்றிய ஆராய்ச்சி முடிவுகளைக் கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, ஒரு வீட்டுக்கான வாகனங்களின் எண்ணிக்கையில் உச்சவரம்பு விதித்தல், டீசல் வாகனப் பதிவைக் கட்டுப்படுத்துதல், பொதுப் போக்குவரத்திற்கு இயற்கை எரிவாயு இன்ஜின்களைப் பயன்படுத்துதல், பழைய வாகனங்களை அகற்றுதல், கட்டுமானத்தை ஒழுங்குபடுத்துதல், குப்பைகளைத் திறம்பட மேலாண்மை செய்தல், அனைத்து சமூக நிகழ்வுகளிலும் புகையை உருவாக்கும் செயல்களைத் தடைசெய்தல் ஆகிய நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
பயிர்க் கழிவுகளை எரிப்பதன் மூலம் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க நெல், கோதுமைப் பயிர்களின் அடிக்கட்டையை விடாமல் அறுவடை செய்யக்கூடிய புதிய இயந்திரங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். நெல் அறுவடை செய்தவுடன், அதன் வைக்கோலைத் தேவைப்படும் மாநிலங்களுக்குக் கால்நடைத் தீவனமாக அனுப்ப மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைக்கோலைப் பயன்படுத்தி பயோமாஸ் ஆலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் தேவை. இது போன்ற நீண்ட கால நடவடிக்கைகள் உறுதியாகப் பின்பற்றப்பட்டால், டெல்லியில் காற்று மாசுபாட்டை நிச்சயமாகத் தீர்க்க முடியும். அதீத காற்று மாசினால் டெல்லியில் ஏற்படும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மற்ற மாநிலங்களும் காற்றின் மாசு அதிகரிக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். - அ.நாராயணமூர்த்தி, மூத்த பேராசிரியர், முன்னாள் முழு நேர உறுப்பினா் - CACP, தொடர்புக்கு: narayana64@gmail.com