‘திடீர்ப் பெருமழை நிகழ்வுகளே புதிய யதார்த்தம்!’ - நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன்

‘திடீர்ப் பெருமழை நிகழ்வுகளே புதிய யதார்த்தம்!’ - நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன்
Updated on
3 min read

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த வாரம் ஒரே நாளில் 44 செ.மீ. (440 மி.மீ.) மழை பெய்துள்ளது. 40 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதுபோல் ஒரே நாளில் மிக அதிக அளவிலான மழை பெய்வது, மழை என்றாலே மக்கள் அச்சப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டின் பேரிடர் தயார்நிலை, நிவாரணப் பணிகள், நீண்ட காலத் தீர்வுக்குத் தேவையான நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறித்து நீரியல் நிபுணர், பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் உடனான உரையாடலிலிருந்து முக்கியப் பகுதிகள்:

கடந்த ஆண்டு சென்னை, இந்த ஆண்டு சீர்காழி; ஒரே நாளில் மிக அதிக மழைப்பொழிவு ஏற்படுவது ஏன்?

தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத் தெற்காசியாவிலும் மழைபொழியும் முறையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. குறுகிய காலத்தில் பெருமழை பெய்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாக நடைபெற்றுவருகின்றன. இத்தனை ஆண்டுகளாக நாம் இதைக் கடந்து சென்றுவிட்டோம்; இனியும் அப்படிக் கடந்து போய்விட முடியாது. ஏனென்றால், இதுதான் இனி புதிய யதார்த்தம். அதாவது, அக்டோபர் முதல் டிசம்பர் வரை சிறிதுசிறிதாக மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய 60-65 சென்டிமீட்டர் மழை, 10-15 நாட்களில் பெய்யும். ஒரே நாளில் மிக அதிக மழை கொட்டித் தீர்க்கும். அதற்குத் தகுந்த வகையில் நாம் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியச் செய்தி.

சீர்காழி உள்ளிட்ட காவிரிப் பாசன மாவட்டப் பகுதிகளில் பாதிப்பு எப்படி இருக்கிறது?

சீர்காழியில் பெருமழை பெய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்யும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய காவிரிப் பாசன மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 15-20 செ.மீ.இலிருந்து 44 செ.மீ. வரை மழை பெய்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கியிருக்கின்றன. மூழ்குவது என்றால் வெறும் அரை அடி, முக்கால் அடி அல்ல இரண்டு அடி, மூன்றடி நீர் தேங்கி நிற்கிறது. இது மட்டுமல்லாமல் கடலூர், திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் மிக அதிக மழை பெய்துள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவுகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் கடல்மட்டத்திலிருந்து நிலத்தின் உயரம் நான்கு நான்கரை மீட்டருக்குள் இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடல்மட்டத்துக்குக் கீழே ஐந்து கிராமங்கள் உள்ளன. ஒரு மீட்டரிலிருந்து இரண்டு மீட்டர் வரையிலான உயரத்தில் 24 கிராமங்கள் உள்ளன. மூன்றிலிருந்து ஐந்து மீட்டர் உயரத்தில் 142 கிராமங்கள் உள்ளன. இவை அனைத்தையும் மிகமிகப் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்களாக நாம் கருத வேண்டும். எனவே, கடல்மட்டம் உயர வேண்டியதில்லை, அலையடிப்பது உயர்ந்தாலே கடல்நீர் உள்ளே வர வாய்ப்புள்ளது. கடந்த 10-15 ஆண்டுகளாகக் கால்வாய்கள் வழியாகச் சுமார் 5-6 கி.மீ. வரை கடல்நீர் உள்ளே சென்று விவசாய நிலங்களுக்குள் புகுந்துவிடுகிறது. இரவு காய்ந்து கிடக்கும் விவசாய நிலத்தில், காலையில் கடல்நீர் புகுந்திருப்பதாக விவசாயிகள் சொல்வது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. 2015, 2018, 2021 என மழைநீர் வெள்ளத்தால் காவிரிப் பாசன மாவட்டங்களும் அதன் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவது அடிக்கடி நிகழ்கிறது. மேலிருந்து வருகின்ற மழைநீர் வெள்ளம் ஒரு பக்கம், கடல்நீர் வெள்ளம் இன்னொரு பக்கம் என இருவகையான பாதிப்புகளும் நடக்கின்றன. இவை தவிர, பிச்சாவரத்திலிருந்து வேதாரண்யம் வரை நாங்கள் மேற்கொண்டிருக்கும் ஆய்வு ஒன்றின்படி, கரையோர மாற்றங்களால் (Shoreline changes) கடல்நீர் உட்புகுந்து கிட்டத்தட்ட 4,000 ஏக்கர் உள்ளே சென்றுவிட்டது. இதைக் கடலரிப்பு என்பர். சில இடங்களில் கடல்நீர் உள்வாங்கி, சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் கிடைத்திருக்கிறது (accretion). ஆனால், கடலரிப்புதான் அதிகம்.

இன்றைக்குக் காவிரிப் பாசனப் பகுதியில் ஒரு விவசாயி நாற்று நடும் பயிரை அறுவடை செய்ய முடியுமா என்பதே பெரும் கேள்விக்குறி ஆகியுள்ளது. மக்களும் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால், கடல்நீர் உட்புகுவது அதிகரித்துவிட்டது. காவிரிப் பாசன மாவட்டங்களில் 70% நிலத்தடி நீர் உப்புத்தன்மை வாய்ந்ததாகிவிட்டது. இந்த மாவட்டங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள், நிலமில்லா விவசாயத் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பும் மிகப் பெரிய கேள்விக்குறி ஆகியுள்ளது.

இதற்கு என்னதான் தீர்வு? - காவிரிப் பாசன மாவட்டங்களில் வெள்ளநீரை வடிப்பதற்கான நேர்த்தியான கால்வாய்க் கட்டமைப்பு ஒரு காலத்தில் இருந்தது. இப்போது அந்தக் கட்டமைப்பு இல்லை. பெரும்பாலான வடிகால்கள் அழிந்துவிட்டன அல்லது மிகப் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன. எனவே, காவிரிப் பாசனப் பகுதிகளில் வடிகால்களைச் சீரமைப்பது, புதிய வடிகால்களை அமைப்பது ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். சீர்காழியைப் போல் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் மிக அதிக மழை இனி பெய்யலாம். பலரும் நினைப்பதுபோல் இது மிக அரிதாக நிகழும் மேகவெடிப்பு அல்ல. மாறாக, இது நீரியல் சுழற்சியில் ஏற்படும் குலைவுகளின் (distortions in hydrological cycle) விளைவு. எனவே, தமிழ்நாடு முழுவதும் வடிகால்களைச் சீரமைத்துப் பராமரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதும் குறிப்பாகக் கடலை ஒட்டிய பகுதிகளில் வெப்பமும் அதிகரிக்கும். மழைக்காலம் முடிந்த உடனேயே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். வெப்பம் அதிகரிக்கும்போது விவசாய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்படும். இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. உலர்நிலங்கள், காவிரிப் பாசனப் பகுதிகள், மலையை ஒட்டிய பகுதிகள் (agro-climatic zones) என வெவ்வேறு வகையான நிலப்பகுதிகளுக்கு, அவற்றுக்கேற்ற திட்டங்களை யோசித்துச் செயல்படுத்த வேண்டியது கட்டாயம்.

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் சீரமைப்புப் பணிகள் பலன் அளித்துள்ளனவா? - சென்னையில் இந்த முறை மழைநீர் அதிகமாகத் தேங்கவில்லை. கடந்த 15 நாட்களில் 50-55 செ.மீ. மழை பெய்துவிட்டது. இது கிட்டத்தட்ட ஒரு மழைக் காலத்துக்கான மழை அளவு என்று சொல்லலாம். ஆனால், பெரிய அளவில் பாதிப்பில்லை. மெளலிவாக்கம், திருவள்ளுவர் நகர், மாங்காடு போன்ற போரூர் ஏரிக்குக் கீழுள்ள பகுதிகளில் மட்டுமே அதிகமாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதையும் வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, சென்னையில் இன்று ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 32-33 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். மக்கள்தொகை அடர்த்தி அதிகரிக்கும்போது, மண்ணில் தண்ணீர் இறங்குவதற்கான திறந்தவெளிப் பகுதிகள், மழைநீர் ஊடுருவுவதற்கான பகுதிகள் மிகவும் குறைந்துவிடுகின்றன. மழைநீர் நிலத்துக்குள் செல்லாமல் சிமென்ட்டும் சாலைகளுமாக வடிந்து ஓடுவதற்குத்தான் இடம் உள்ளது. 90-95% மழைநீர் இன்று வெளியில் வீணாகப் பாய்கிறது.

ஒட்டுமொத்தமாக மழை-வெள்ளப் பாதிப்பைத் தவிர்ப்பதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் என்ன? - மழை பெய்தால் எப்படியாவது மழைநீரைச் சாலைகளில் தேங்காமல் வெளியேற்றிவிடுவதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வளவு மழை பெய்தும் அதைச் சேகரிப்பதற்கான போதிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. அதற்கான கொள்கைத் தலையீடுகள் தேவை. இவ்வளவு மழை பெய்தும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 1,483 ஏரிகளில் 332 ஏரிகள் மட்டுமே நிறைந்துள்ளதாகச் செய்திகள் சொல்கின்றன. மற்ற ஏரிகள் ஏன் நிரம்பவில்லை என்ற கேள்வியை நாம் எழுப்பிக்கொள்ள வேண்டாமா? மேற்கூறிய மூன்று மாவட்டங்களில் மொத்தம் 3,600 ஏரிகள் இருப்பதாகத் தரவுகள் இருக்கின்றன. இந்த 3,600 ஏரிகளையும் ஆழப்படுத்தி மழைநீரைச் சேமித்தால் மேலிருந்து கீழே வரும் வெள்ளநீரைப் பெருமளவு தடுத்துவிடலாம். வறட்சியிலிருந்தும் தப்பிக்கலாம். இனியாவது, மழைநீரைச் சேகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அது இல்லாமல் வெள்ளம் வரும்போது தண்ணீரை வடித்துவிடுவோம், வறட்சி வரும்போது எங்கிருந்தாவது தண்ணீரைக் கொண்டுவருவோம் என்னும் அணுகுமுறை மிகத் தவறானது. இவையெல்லாம் நிலையான பாதுகாப்பையும் நீடித்த வளர்ச்சியையும் எந்தக் காலத்திலும் நமக்குக் கொடுக்காது. - நேர்காணல்: ச.கோபாலகிருஷ்ணன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in