Last Updated : 16 Nov, 2022 06:51 AM

 

Published : 16 Nov 2022 06:51 AM
Last Updated : 16 Nov 2022 06:51 AM

ஜோஸெ ஸரமாகோவின் நெடும் பயணம்!

உலகப் புகழ்பெற்ற போர்த்துக்கீசிய எழுத்தாளரும் 1998 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஜோஸெ ஸரமாகோவின் (16.11.1922-16.11.2022) நூறாண்டு இன்று நிறைவுபெறுகிறது. படைப்பிலக்கியத் துறையைப் பொறுத்தவரை, சமுதாயத்தின் மிக அடித்தட்டைச் சேர்ந்த நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, நோபல் பரிசு பெறும் அளவுக்கு உயர்ந்தவர் இதுவரை அவர் ஒருவர் மட்டுமே. அவரது குடும்ப மரபில் முதன்முதலில் ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தவர், லிஸ்பன் நகரில் சாதாரண காவலராக குறைந்த சம்பளத்துக்குப் பணியாற்றியவர் அவர் தந்தை.

தொடக்கப் பள்ளிக் காலத்திலிருந்தே மிகச்சிறந்த மாணவராக இருந்த ஸரமாகோவுக்கு உயர்கல்வி வழங்க இயலாத அந்த ஏழைத் தந்தையால் அவரை ஒரு தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனத்தில் மட்டுமே சேர்த்துவிட முடிந்தது. விதிவிலக்காக இருந்த அந்த நிறுவனத்தில் தொழிற்பயிற்சியுடன் பிரெஞ்சு மொழியும் ஓரளவு இலக்கியமும் கற்பிக்கப்பட்டன. படிப்பு முடிந்ததும் இலவச நூலகங்களுக்குச் சென்று, தனக்குக் கிடைத்த அனைத்து நூல்களையும் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த ஸரமாகோ, பின்னாளில் ஜெர்மன் மொழியிலும் புலமைமிக்கவரானார். அந்த இரண்டு அந்நிய மொழிகளிலிருந்தும் உலகத் தரம் வாய்ந்த 80 நூல்கள் அவரால் போர்த்துக்கீசிய மொழிக்குக் கொண்டுவரப்பட்டன.

கார் மெக்கானிக்காகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், விரைவில் இதழியல் உலகிலும் நுழைந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் நாடகங்களையும் எழுதத் தொடங்கினார். இன்றுவரை பாராட்டப்படும் அவை இதுவரை மொத்தமாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படாமல் இருப்பது அவப்பேறு. போர்ச்சுகலில் பாசிச ஆட்சி நிறுவப்பட்ட பிறகு, அதை உறுதியுடன் எதிர்த்துவந்த ஒரே அமைப்பான கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, கடைசி நாள் வரை அதன் உறுப்பினராக இருந்த அவர், பல இன்னல்களை எதிர்கொண்டார். சிறையிலும் சிறைக்கு வெளியிலும் இருந்த தோழர்கள்தான் அவரைப் பாதுகாத்துவந்தனர். அவர் எழுதிய முதல் நாவல் ‘பாவங்களின் நகரம்’ பெருமளவில் வரவேற்புப் பெறவில்லை; அவரது இரண்டாவது நாவல் கணிசமான பாராட்டைப் பெற்றது. பாசிச ஆட்சிக்குத் துணைபுரிந்த பெரும் நிலவுடைமையாளர்களுக்கு எதிரான ஏழை விவசாயிகளின் எழுச்சியை அடிப்படையாகக் கொண்ட அவரது மூன்றாவது நாவலிலிருந்துதான் அவருக்கே உரிய எழுத்துநடை உருவாயிற்று. அதாவது, கால்புள்ளியைத் தவிர மற்ற நிறுத்தல்குறிகள் கிட்டத்தட்ட ஏதும் இருக்காது. அந்த எழுத்து நடைக்குக் காரணம் விவசாயிகளின் பேச்சுமொழிதான் என்றும், அவர்கள் பேசும்போது கால்புள்ளி, முற்றுப்புள்ளியோடு பேசுவதில்லையே என்றும் கூறினார் ஸரமாகோ. பொதுவாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வற்புறுத்திவந்த ‘சோஷலிச யதார்த்தவாதம்’ என்ற இலக்கிய உத்தியை நிராகரித்த அவர், மாய யதார்த்தவாதம், அதிகற்பனை (fantasy) போன்ற உத்திகளைப் பயன்படுத்தினாலும், அவை அனைத்தும் உலகில் ஒடுக்கப்பட்ட மாந்தர்களைப் பற்றியவையாக இருந்தன. அவரது நாவல்களில் பெண் கதாபாத்திரங்கள் மிகக் கண்ணியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளையும் நவதாராளவாதப் பொருளாதாரத்தையும் கண்டனம் செய்துவந்த அவர், மூன்றாம் உலக நாடுகளின் மக்கள்மீதும் பாலஸ்தீன மக்களின் விடுதலைமீதும் மிகுந்த அக்கறைகொண்டிருந்தார். போர்ச்சுகலின் காலனிகளாக இருந்த ஆப்பிரிக்க நாட்டு மக்களுடன் ஒருமைப்பாடு கொண்டிருந்தார். அவர் தனக்குக் கிடைத்த நோபல் பரிசுப் பணம், தன் படைப்புகளுக்குக் கிடைத்துவந்த உரிமைத்தொகை ஆகியவற்றின் பெரும்பகுதியைக் கொண்டு ‘ஸரமாகோ ஃபவுண்டேஷன்’ என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறந்த படைப்புகளுக்குப் பரிசு வழங்குதல், கலை இலக்கியப் பொக்கிஷங்களைப் பாதுகாத்தல், உலக அளவிலான இலக்கிய விவாதங்களை நடத்துதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்ற பல்வேறு நோக்கங்களுடன் செயல்பட்டுவரும் அந்த நிறுவனம் ஏறத்தாழ ஓராண்டு காலமாக, ஸரமாகோவின் நூற்றாண்டு விழாவையொட்டி, உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள், வரலாற்றாய்வாளர்கள் முதலியோர் பங்குபெறும் கருத்தரங்குகளை நடத்திவருகிறது.

2008இல் போர்ச்சுகீசிய, ஸ்பானிய மொழிகள் இரண்டிலும் ஒரே வேளையில் வெளிவந்ததும், 2010இல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதுமான ‘யானையின் பயணம்’ நாவல் கோவாவிலிருந்து சுப்ரோ என்ற பாகனுடன் போர்ச்சுகலுக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஒரு யானை, கடைசியில் ஆஸ்திரிய மன்னருக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டு, வியன்னாவுக்குப் போய்ச் சேர்ந்ததை (பெரிதும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில்) விவரிக்கிறது. அது அங்கு இறந்துபோனதும் அதன் கால்கள் பாடம் செய்யப்பட்டு, குடைகளை வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதை எழுதும் ஸரமாகோ, ‘சக உயிரிகளை மதிக்காத மனிதர்கள் தங்களைத் தாங்களே அவமதித்துக்கொள்கிறார்கள்’ என்று எழுதினார். அந்த நாவல் வெளிவந்தவுடன் லிஸ்பன் நகரிலிருந்து ஸ்பெயின் எல்லைவரை அந்த யானை பயணம் செய்த பாதையைச் சுட்டிக்காட்டுவதற்காக இதழியலாளர்களும் துணைவியும் நண்பர்களும் கலந்துகொண்ட ஒரு பயணத்தை நிகழ்த்திக் காட்டினார். அவருடைய நாவல்கள் கிட்டத்தட்ட அனைத்திலுமே நாயை ஒரு கதாபாத்திரமாகப் படைத்திருக்கிறார்.

18ஆம் நூற்றாண்டு போர்ச்சுகலைப் பின்புலமாகக் கொண்டு அவரால் எழுதப்பட்ட ‘பல்தசாரும் பிலிமுண்டாவும்’ நாவலில், அந்தக் கதாபாத்திரங்கள் இருவரும் ஆட்சியாளர்களை எதிர்த்துவந்த ஒரு பாதிரி ‘பறக்கும் இயந்திரம்’ ஒன்றை உருவாக்குவதற்குத் துணைபுரிகின்றனர். அந்த இயந்திரத்தைப் பரிசோதனைக்காக இயக்கிப் பார்க்கையில் எதிர்பாராதவிதமாகப் பறக்கத் தொடங்கிய அதிலிருந்த தன் கணவரைத் தேடி பிலிமுண்டா ஊர் ஊராக அலைகிறார். ஒருமுறை ஸ்பெயின் மண்ணையும் அவர் மிதிக்க வேண்டியதாகிறது. அந்தக் கற்பனை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, போர்ச்சுகலுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே ஸரமாகோவால் உருவாக்கப்பட்ட கலாச்சார வழித்தடம் ஒன்றை ‘ஸரமாகோ ஃபவுண்டேஷன்’ உருவாக்கி, சுற்றுலாப் பயணிகள் அந்த இரு நாட்டுக் கலாச்சாரத்தையும், வரலாற்றையும் அறிந்துகொள்ளச் செய்கிறது. அந்த வழித்தடம் ஸரமாகோவுக்கான இன்னொரு நினைவஞ்சலியாகவும் அமைந்துள்ளது. - எஸ்.வி.ராஜதுரை
மூத்த மார்க்ஸிய - பெரியாரியச் சிந்தனையாளர்; ‘ஸரமாகோ: நாவல்களின் பயணம்’ நூலாசிரியர், தொடர்புக்கு: sagumano@gmail.com

To Read in English: The long journey of Jose Saramago

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x