சொல்… பொருள்… தெளிவு: தண்டனைக் குறைப்பு

சொல்… பொருள்… தெளிவு: தண்டனைக் குறைப்பு
Updated on
2 min read

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேரை உச்ச நீதிமன்றம் நவம்பர் 11 அன்று விடுவித்தது. இதே குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தின் 142ஆம் கூறு அளித்திருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, கடந்த மே 18 அன்று விடுவித்தது. பேரறிவாளனை விடுவித்த உத்தரவின் அடிப்படையிலேயே மற்ற ஆறு பேரையும் இப்போது உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதையடுத்து, சிறைத் தண்டனைக் கைதிகளைத் தண்டனைக் காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே விடுவிப்பதற்கான தண்டனைக் குறைப்பு அதிகாரம் பேசுபொருள் ஆகியுள்ளது.

குடியரசுத் தலைவர், ஆளுநரின் அதிகாரம்: இந்த எழுவரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாகச் சிறையில் இருந்தவர்கள். ஆயுள் தண்டனை என்பது எஞ்சிய ஆயுள் முழுமைக்குமான சிறைத் தண்டனை என்பதை உச்ச நீதிமன்றம் சில தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், தண்டனைக் குறைப்பு அதிகாரத்தின் அடிப்படையில் ஆயுள் தண்டனைக் குற்றவாளிகளும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இந்திய அரசமைப்பின் கூறு 72 குடியரசுத் தலைவருக்கும் கூறு 161 ஆளுநருக்கும் மன்னிப்பு (pardon), தண்டனையை நிறுத்திவைத்தல் (suspension), மிதமான தண்டனையாக மாற்றுதல்... எடுத்துக்காட்டாக, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தல் (commutation), சிறை தண்டனைக் காலத்தைக் குறைத்தல் அல்லது விடுதலைக்கு உத்தரவிடுதல் (remission) ஆகிய அதிகாரங்களைக் கொடுத்துள்ளன. மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்துடன் தொடர்புடைய சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்குக் குடியரசுத் தலைவரும் மாநில அரசின் நிர்வாக அதிகாரத்துடன் தொடர்புடைய சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆளுநரும் இந்த அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும்.

மாநில அரசின் அதிகாரம்: இதேபோல் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 432 ‘உரிய அரசு’க்குச் சிறைத் தண்டனையை முழுமையாகவோ பகுதி அளவிலோ ரத்துசெய்வதற்கான அல்லது நிறுத்திவைப்பதற்கான தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை அளிக்கிறது. பிரிவு 433 தண்டனையை மாற்றுவதற்கான அதிகாரத்தை அளிக்கிறது. மாநில அரசுகள் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறைத் தண்டனைக் கைதிகளைத் தண்டனைக் காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே விடுவிக்க முடியும். இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் தனக்கான தண்டனைக் குறைப்புக் கொள்கையை வகுத்துக்கொண்டுள்ளன. மரண தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றம் இழைத்தவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருந்தாலோ, மரண தண்டனை வழங்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தாலோ அந்தக் குற்றவாளி 14 ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகே அவருக்குத் தண்டனைக் குறைப்பு அளிக்கப்பட வேண்டும் என்று இந்தச் சட்டத்தின் பிரிவு 433 (அ) கூறுகிறது. ‘மாருராம்எதிர் இந்திய அரசு’ (1980) வழக்கில் இது உறுதிசெய்யப்பட்டது. அதேநேரம், இந்தச் சட்டத்தின் பிரிவு 435 மத்திய அரசு சட்டத்தின்கீழ் சிபிஐ உள்ளிட்ட மத்திய முகமைகளால் விசாரிக்கப்பட்ட அல்லது மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் தொடர்புடைய வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கு மாநில அரசு தண்டனைக் குறைப்பு அளித்து விடுவிப்பதற்கு முன்பாக மத்திய அரசின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்கிறது.

ஆளுநரின் அதிகாரம் எத்தகையது?: குடியரசுத் தலைவரும் ஆளுநரும் முறையே மத்திய அரசு, மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த அதிகாரத்தைச் செயல்படுத்த முடியும். பேரறிவாளனை விடுவித்த தீர்ப்பில் அரசமைப்பின் கூறு 161இன்படி தண்டனைக் குறைப்புக்கான மாநில அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையையும் ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனையையும் 1999இல் உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. 2000இல் நளினியின் மரண தண்டனையை அன்றைய தமிழ்நாடு ஆளுநர் ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். மற்ற மூவரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பினர். 2011இல் இவர்களின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இந்தப் பத்தாண்டுகால தாமதத்தைக் காரணம் காட்டி, 2014இல் உச்ச நீதிமன்றம் இவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. மேலும், அந்த வழக்கில் குடியரசுத் தலைவர்களும் ஆளுநர்களும் கருணை மனுக்கள் மீது விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தது. ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் எழுவரும் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டதால், அவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டி ஆளுநருக்கு அன்றைய தமிழக அமைச்சரவை பரிந்துரைத்தது. முன்னதாகப் பேரறிவாளன் தன்னைச் சிறையிலிருந்து விடுவிக்க ஆளுநருக்குக் கருணை மனு அனுப்பியிருந்தார். ஆளுநர் இவற்றின்மீது முடிவெடுக்காமல் இருந்தார். 2021இல் உச்ச நீதிமன்றம் இந்த எழுவரை விடுவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்று கூறியிருந்தது. ஆனால், ஆளுநர் தரப்பில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவரையும் விடுவித்தது. - தொகுப்பு: கோபால்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in