

ஊராளிப் பழங்குடிகள் வாழும் விளாங்கோம்பை என்கிற வன கிராமத்துக்குத் தோழர்களுடன் சமீபத்தில் பயணித்தேன். அடர்ந்த காடுகளின் வழியே நான்கு பெரும் ஓடைகளைத் தாண்டி அந்தக் கிராமத்துக்குள் நுழைந்து, வீடுவீடாக மக்களை அழைத்து சங்கக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்திருந்தோம். சில வீடுகள் பூட்டிக்கிடந்தன. காரணம் கேட்டபோது, கரும்பு வெட்டும் பணிக்குக் குடும்பத்துடன் வெளியூருக்கும் இளைஞர்கள் போர்வெல் லாரியில் வட மாநிலங்களுக்கும் சென்றுவிட்டார்கள். இன்னும் சிலரோ விலங்குகளிடமிருந்து உணவுப் பயிர்களைக் காக்க, இரவு நேரக் காவலுக்குச் சென்றுவிட்டார்கள் என்றனர். அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காகக் காட்டைக் காத்துவருகின்ற பழங்குடிகள் தங்கள் வாழ்விடத்தைவிட்டு நாடோடிகளாக அலைந்துகொண்டிருக்கிற அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.
தொடரும் தடைகள்: அடர்ந்த காடு எங்கும் கொட்டிக் கிடக்கும் மூலிகைகள், நெல்லி, சிகைக்காய், சாம்பிராணி, தேன், மூங்கில் என வனச் சிறுபொருட்களைச் சேகரித்து, அவற்றை விற்பனை செய்து வாழ்ந்த வாழ்க்கைமுறைக்கு என்ன கேடு வந்தது? சட்டங்களா, திட்டங்களா, ஆட்சிமுறையா?
காட்டைத் தெய்வமாக வணங்கி, காலம்காலமாக அதன் காவலர்களாக வாழ்ந்துவந்த பழங்குடிகளுக்குக் காட்டின் மீதான உரிமை ஆங்கிலேயர் காலத்தில் பறிக்கப்பட்டது; சுதந்திர இந்தியாவிலும் அது தொடர்ந்தது. 2006இல் கொண்டுவரப்பட்ட வன உரிமைச் சட்டம் இதை மாற்றியமைத்தது. இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்திப் பேசிய அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், இதுவரை பழங்குடிகளுக்கு இழைக்கப்பட்டுவந்த அநீதி இச்சட்டத்தின் மூலம் துடைத்தெறியப்படுகிறது என்று தெரிவித்தார். ஆனால், சட்டம் இயற்றப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அது செயல்பாட்டுக்கு வரப் பல்வேறு தளங்களில் தடைகள் நிலவுகின்றன.
தொடராத படிப்பு: கிழக்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் அடர்ந்த காட்டினூடே அமைந்துள்ள விளாங்கோம்பை எண்பதுக்கும் மேற்பட்ட பழங்குடிகள் வாழ்கின்ற சிற்றூர். மத்திய அரசின் தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் 30-க்கும் மேற்பட்ட ஊராளிக் குழந்தைகள் இங்கு கல்வி கற்றுவந்தனர். இப்போது அத்திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு வரவழைத்துப் பழக்கப்படுத்தி, அருகில் உள்ள பள்ளிக்கு இரண்டு ஆண்டுகளில் அனுப்பிவைப்பது இந்தத் திட்டத்தின் அடிப்படைச் செயல்திட்டமாகும். ஆனால், விளாங்கோம்பைக்கு அருகில் எந்த ஊரும், எந்தப் பள்ளியும் இல்லாத காரணத்தினால் 7 கி.மீ. தொலைவிலுள்ள வினோபா நகர் பள்ளிக்கு அனுப்பிவைக்க வேண்டிய சூழல்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கின்ற சிறார்கள் காடுகளினூடே தினமும் நடந்து பள்ளிக்குச் சென்று திரும்புவது இயலாத காரியம். ஆகவே, அவர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்து கல்வியைத் தொடரச் செய்கிறோம் என்கிறது அரசு. ஆனால், அது நடக்காதபோது ‘சுடர்’ தொண்டு நிறுவனத்தின் உதவியால் இரண்டு மாதங்களாகப் பள்ளிக்குச் சென்றுவந்த மாணவர்கள், தற்போது செல்லவில்லை. கடந்த 20 நாட்களாகப் பெய்த தொடர் மழையின் காரணமாக, அவர்கள் கடந்து செல்லும் நான்கு ஓடைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் காரணமாக வாகனம் செல்ல முடியாததால் கல்வியும் தடைபட்டு நிற்கிறது.
ஓடைகளைக் கடக்காமல் காடுகளினூடே மாற்றுப்பாதை உள்ளபோதும், அதைப் பயன்படுத்தி மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட வேண்டிய பழங்குடி நலத் துறையும் வனத் துறையும் அதைப் பற்றி சற்றும் கவலைப்படவில்லை. இதனால், பழங்குடிகளுக்குக் கல்வி எதற்கு எனச் சமூகமும் அரசும் நினைக்கின்றனவோ என்ற கேள்வி எழுகிறது.
தடைபட்ட கல்வி, தொடர வேண்டாமா?: பள்ளிக்கூடம் ஒரு கி.மீ-க்குள் இருக்க வேண்டும் என கல்வி உரிமைச் சட்டம் சொல்கிறது. ஆனால், விளாங்கோம்பையில் 7 கி.மீ. தொலைவில்தான் பள்ளிக்கூடம் உள்ளது. எங்களுக்குத் தடையில்லாக் கல்வி வேண்டும் என்கிற பழங்குடிக் குழந்தைகளின் கவன ஈர்ப்புப் போராட்டம், உதவிக் கல்வி அலுவலகம் முன்பு அக்டோபர் 30 அன்று நடந்தது. அலுவலர்கள் வந்தார்கள், விசாரித்தார்கள், சென்றார்கள். இரண்டு ஆசிரியர்கள் கொண்ட தற்காலிகப் பள்ளியை விளாங்கோம்பையில் உடனடியாகத் தொடங்க முடியாதா... அரசு மனது வைத்தால் வழியுண்டு.
என்றோ இறந்த யானையின் தந்தத்தை வைத்திருந்த இதே ஊரைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த குமார், கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கோவை சிறையில் இறந்துவிட்டார். இது விசாரிக்கப்பட வேண்டிய மரணம். காட்டை அழித்துக் கொள்ளையடித்தவர்கள், மக்கள் பணத்தைத் திருடிய அரசியல் தலைவர்களுக்குச் சிறைச்சாலையிலும் முதல் தர சிகிச்சை, முதல் வகுப்புச் சிறைக்கூடம் எனத் தனி சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், காவல் கட்டுப்பாட்டில் இறந்தவரின் சடலத்தை வாகனம் மூலம் அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப் பெருக்கெடுத்து ஓடும் ஓடை அனுமதிக்கவில்லை. 7 கி.மீ. தூரம் மாற்றுப் பாதையில் தொட்டில் கட்டித் தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. அதே நேரம் விளாங்கோம்பையின் குழந்தைகள் தங்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. பள்ளிக்கூடத்துடன் மாற்றுப் பாதை கேட்டு அடுத்தகட்டப் போராட்டத்துக்குத் தயாராகிவிட்டனர். - வி.பி.குணசேகரன் பழங்குடிகள் உரிமைச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: erodevpg@gmail.com