

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த அடுத்தகட்ட நடவடிக்கையை விவாதிப்பதற்காக தமிழக அரசு அண்மையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. முன்பு அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றாலே அங்கீகாரம் பெற்ற கட்சிகள், அங்கீகாரம் பெறாதநிலையிலும் முக்கியமான கட்சிகள் எனப் பலதரப்பட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். தேர்தல் அரசியலில் இருக்கும் அனைத்துக் கட்சியினரின் குரலுக்கும் அதில் இடமளிக்கப்படும். தற்போது அந்த மரபு கைவிடப்பட்டுவருகிறது.
எதன் பொருட்டு அக்கூட்டம் கூட்டப்படுகிறதோ அதில் ஒருமித்த கருத்துடன் எல்லா கட்சிகளும் இருக்கின்றன என்பதை உணர்த்தவே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஓரணியில், ஒருமித்த குரலில் இணையும்போது அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ள அது வழிவகுக்கும். இது தார்மிக அடிப்படையில் அரசுக்கு வலுசேர்க்கும்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. கடந்த காலத்தில் எல்லா ஆட்சியாளர்களுமே பல்வேறு விஷயங்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டங்களைக் கூட்டியிருக்கிறார்கள். ஆனால், தற்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதே ‘சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் கூட்ட’மாக மாறிவருகிறது. சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் கட்சிகள் மட்டுமே பங்கேற்கும் கூட்டமாக அது சுருங்கிவருகிறது. தற்போதைய அனைத்துக் கட்சிக் கூட்டம் மட்டுமல்ல, இந்த ஆண்டு ஜனவரியில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற கூட்டமும் சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் கூட்டமாகவே இருந்தது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2018இல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும் 2019இல் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு தொடர்பாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றபோது, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மட்டுமல்லாமல் அங்கீகாரம் பெறாவிட்டாலும் தீவிர அரசியலில் ஈடுபடும் கட்சிகளும் அழைக்கப்பட்டன. 2021இல் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டபோது, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால், திமுக, அதிமுக கூட்டணியில் இருந்த அங்கீகாரம் பெறாத முக்கியக் கட்சிகள்கூட அக்கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது. அப்போது அனைத்துக் கட்சிகளையும் அழைக்க முடியாமைக்கு நேரமின்மையையும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உடனடியாக விசாரணைக்கு வர இருந்ததையும் அரசு காரணமாகக் கூறியது. அப்போது கரோனா இரண்டாம் அலையும் உச்சத்தில் இருந்தது.
அதுபோன்ற சூழல் தற்போது இல்லாத நிலையிலும், இன்றைய திமுக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைச் சட்டப்பேரவைக் கட்சிகளின் கூட்டமாக மட்டும் கூட்டுவது ஏன்? கடந்த காலத்தில் அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக போன்ற கட்சிகள்கூட தமிழக சட்டப்பேரவையில் இடம்பெறாமல் போயிருக்கின்றன. ஏற்கெனவே மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெற்ற பாமக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் சட்டப்பேரவையில் இடம்பெறாமல் போயிருக்கின்றன. அந்த வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் கூட்டம் என்ற அளவில் சுருங்கினால், எதிர்காலத்தில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் அதில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.
சமீபத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகளும் அழைக்கப்பட்டிருந்தன. திமுக, அதிமுக கட்சிச் சின்னங்களில் நின்று வெற்றிபெற்ற இக்கட்சிகளின் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் திமுக - அதிமுக உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள். சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் அழைக்கப்படுகிறார்கள். இது முரண்பாடாகக் கருதப்பட இடமளிக்கிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாகத் தமிழகத்தில் விதிமுறைகளோ வழிகாட்டுதல்களோ இல்லை. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைக்கும் வகையில் விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று 2018இல் தொடரப்பட்டது. அதுபோன்ற விதிமுறைகள் உருவாக்கப்படுவது, எதிர்காலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாகக் கேள்விகள் எழுவதைத் தடுக்கும். பல கட்சி ஜனநாயகத்தில் அங்கீகாரம் பெறாத கட்சிகளின் கருத்துகளும் கேட்கப்படுவது ஆரோக்கியமான ஒரு நடைமுறைதானே.