

மத்திய அரசு எம்.பி.பி.எஸ். மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 15 ஆண்டுகள் கழித்தும், 9 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 17 ஆண்டுகள் கழித்தும், 13 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 20 ஆண்டுகள் கழித்தும் பெறுகின்ற நிலை தற்போது நிலவுகிறது. அருகில் உள்ள கேரளம், கர்நாடகம், புதுச்சேரி போன்ற மாநிலங்களைக் காட்டிலும் சுகாதாரத் துறையில் மிகச் சிறப்பான செயல்பாட்டுக்குக் காரணமான தமிழக அரசு மருத்துவர்களின் அடிப்படை ஊதியம், குறிப்பாக 13 ஆண்டுகள் தொடங்கி மிகவும் பின்தங்கியுள்ளது.
23.10.2009 தேதியிட்ட அரசாணை 354 இன் எதிர்கால ஷரத்துகளை (Prospective Clause) அமல்படுத்தி, தற்போது உள்ள 8,15,17, 20 ஆண்டுகள்முடிந்ததும் கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை 5, 9, 11,12 ஆண்டுகள் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்பதே அரசு மருத்துவர்களின் கோரிக்கை. முக்கியமாக 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் ஊதியப்பட்டை நான்கை 12 ஆண்டுகள் முடிந்து 13ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொடுக்க வேண்டும்.
23.10.2009 தேதியிட்ட அரசாணை 354இன் எதிர்கால ஷரத்துகளை அமல்படுத்த வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். 2019 அக்டோபர் இறுதியில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அடுத்து அமையும் திமுக ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என பக்கத்தில் அமர்ந்து உறுதியளித்தார்.
ஆனால் திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், இன்னமும் அரசு மருத்துவர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டோம். அடுத்ததாக வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி கலைஞரின் நினைவிடத்தில் கோரிக்கை மனுவை வைத்துவிட்டு, மெளனப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளோம். இதனால் அரசுக்குத் தர்மசங்கடம் ஏற்படும் எனக் கருதி, தற்போது மருத்துவர்களைப் பழிவாங்கும் வகையில் அரசு செயல்படுகிறது.
அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் (LCC) தலைவரான பெருமாள் பிள்ளை, செயலாளர் டாக்டர் தாஹிர், மகளிர் அணிச் செயலாளர் டாக்டர் லதா பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது 17b குற்றக் குறிப்பாணையை அரசு வழங்கியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ததற்காகத் தண்டிக்கப்பட்டபோது அரசைக் கண்டித்து முதலில் குரல் எழுப்பியவர் இன்றைய முதல்வர்தான். ஆனால், இப்போது பதவி உயர்வு, பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதற்கே நடவடிக்கை என்பது எந்தவகையில் நியாயம்?
அதுவும் புதிதாக ஊதிய உயர்வு எதையும் மருத்துவர்கள் கேட்கவில்லை. இருக்கின்ற அரசாணையை (GO 354) நடைமுறைப்படுத்த வேண்டிதான் அரசு மருத்துவர்கள் போராடிவருகிறார்கள். அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக ரூ.300 கோடி மட்டுமே தேவைப்படுகிறது. மேலும், மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதியம் என்பது மக்களின் சுகாதாரத்துக்கான முதலீடுதானே தவிர, செலவினம் அல்ல. சுகாதாரத் துறைமீது அரசுக்கு அக்கறை இருந்தால், அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். எனவே, தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு மூன்று மருத்துவர்களின் தண்டனையை ரத்துசெய்ய வேண்டும். - எஸ்.பெருமாள் பிள்ளை தலைவர், அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு, தொடர்புக்கு: sppillai26@gmail.com