இடையிலாடும் ஊஞ்சல் - 5: நடுத்தர வர்க்கம் பெருகுவது யாருக்கு நல்லது?

இடையிலாடும் ஊஞ்சல் - 5: நடுத்தர வர்க்கம் பெருகுவது யாருக்கு நல்லது?

Published on

நம் நாட்டின் கொள்கைகளை வடிவமைப்பதிலும் திசைவழியைத் தீர்மானிப்பதிலும் நடுத்தர வர்க்கம் முக்கியப் பங்காற்றிவந்திருக்கிறது. நேர்மறை, எதிர்மறை வளர்ச்சிப் போக்குகளைத் தீர்மானிக்கும் வர்க்கமாக அது இருக்கிறது. 2004-05இல் மக்கள்தொகையில் 14% இருந்த நடுத்தர வர்க்கம், 2021இல் 31%ஆக உயர்ந்திருப்பதைச் சமீபத்தில் வெளியாகியிருக்கும் People Research on India’s Consumer Economy ஆய்வு கண்டறிந்துள்ளது. இப்போதைய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தரும்பட்சத்தில், 2047இல் நடுத்தர வர்க்கம் 63%ஆகப் பெருகியிருக்கும் என அந்த ஆய்வு கணிக்கிறது.

அந்த ஆய்வு குறித்து எதிரும் புதிருமாகச் சமூக ஆய்வாளர்கள் விவாதித்துவருகிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் பெருக்கம் வருங்காலத்தில் இந்தியாவின் அரசியல், பண்பாட்டு வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குடிமைச் சமூகத்தில் முற்போக்கான இயக்கங்கள் எழுந்துவரும் என்று ஊகிக்கிறார்கள். கடந்த காலத்தில் நடுத்தர வர்க்கம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் வரதட்சிணை, பாலியல் வன்முறை போன்றவற்றுக்கு எதிராகச் (போக்சோ உள்ளிட்ட) சட்டங்கள் இயற்றப்பட்டது உதாரணங்களாகச் சுட்டப்படுகிறது. அதெல்லாம் சரி; இப்படி நேர்மறையான திசையிலேயே யோசிப்பது மகிழ்ச்சிதரும்தான். ஆனால், எதிர்மறையான பங்களிப்பையும் நடுத்தர வர்க்கம் கணிசமாகச் செய்துவருகிறதே... அப்பக்கத்தையும் சேர்த்துத்தான் நாம் பார்க்க வேண்டும். அதற்கு முன்பாக நடுத்தர வர்க்கம் எது என்பது குறித்துச் சில வார்த்தைகள் பேசிக்கொள்ள வேண்டும்.

1848இல் மார்க்ஸும் எங்கல்ஸும் வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ பல இடங்களில் நடுத்தர வர்க்கம் பற்றிப் பேசுகிறது. தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் அப்போது முதன்மை வர்க்கங்களாக இருந்த நில உடைமையாளர்களாகவும் இல்லாமல் விவசாயிகளாகவும் இல்லாமல் இடையில் புதிதாக முளைத்த பூர்ஷ்வாக்கள் எனப்படும் வணிக வர்க்கத்தையும் பின்னர் அதிலிருந்து கிளைத்த சிறுசிறு தொழிற்சாலைகள், பட்டறைகள் ஆகியவற்றை உடைமையாகக் கொண்ட புதிய சிறு முதலாளி வர்க்கத்தையும் குறிக்க ‘நடுத்தர வர்க்கம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பின்னர், இச்சிறு முதலாளி வர்க்கத்தோடு கடைக்காரர்கள், சிறு வணிகர்கள், பெரு வணிகர்களும் மத்தியதர வர்க்கமாகக் கருதப்பட்ட காலம் வந்தது.

தொடக்கக் கால முதலாளித்துவம் எல்லா தொழில்களையும் தானே கைக்கொண்டபோது, சிறு பட்டறைத் தொழில் நடத்திய நடுத்தர வர்க்கம் அழிக்கப்பட்டு, உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக மாற்றப்பட்டது. தொழிலாளிகளின் அதிகபட்ச உழைப்பைச் சுரண்டியே முதலாளித்துவம் வளர வேண்டியிருந்த காலகட்டம் அது. ஆனால் இன்று எந்திரமயம், தனியார்மயம், தாராளமயம், டிஜிட்டல்மயம் என்கிற முழக்கத்தோடு வருகின்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு உழைக்கும் வர்க்கத்தின் எண்ணிக்கையைவிட நுகர்வோராகச் சட்டென மாற்றம் கொள்கிற நடுத்தர வர்க்கம் என்கிற பெரும் சந்தையின் பெருக்கமே தேவையாக இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தின் அளவு வீங்கிக்கொண்டே போவது குறித்து முதலில் மகிழ்ச்சி அடைபவர்களாகப் பன்னாட்டு வணிக நிறுவனங்களே இருக்க முடியும். ஐரோப்பிய நடுத்தர வர்க்கத்தைப் போன்ற ஒரு முற்போக்கு முகம் இந்திய நடுத்தர வர்க்கத்துக்கு உண்டா என்கிற கேள்வியும் எழுப்பப்பட வேண்டும். இங்கே காலனிய காலத்தில் உருவான ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வின் அடையாளமான தேசியத்தை உயர்த்திப் பிடித்த நடுத்தர வர்க்கமாக இப்போது வளர்ந்துநிற்கிறது. 1964இல் நேருவின் மரணத்தோடு இந்திய நடுத்தர வர்க்கத்தின் ‘லட்சியவாத முகம்’ மறைந்துபோனதாக ‘The Great Indian Middle Class’ நூலில் பவன் கே.வர்மா குறிப்பிடுகிறார்.

நேரு யுகத்தின் முடிவுக்குப் பிறகு, இந்திய நடுத்தர வர்க்கத்தின் ஒரே நிகழ்ச்சிநிரலாக ‘சுயநலம்’ என்பது எழுந்து நிற்கிறது. அதன் பல்வேறு பக்கங்களாகவும் பரிமாணங்களாகவுமே நுகர்வியம், சாதியம், மதவாதம், அடிப்படைவாதம் போன்றவை நீட்சிகொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட சாதியில் எப்போது கணிசமான எண்ணிக்கையில் நடுத்தர வர்க்கம் திரள்கிறதோ, அப்போதுதான் சாதியச் சங்கங்களும் ‘ஆண்ட பரம்பரை’ என்கிற வெட்டிப் பெருமிதங்களுடன் தலையெடுக்கின்றன. ‘தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்’ என்னும் நூலில் நா.வானமாமலை இந்த அம்சத்தை ஆராய்ந்திருக்கிறார். சாதி, மதப் பெருமிதங்களுக்கு மாற்றாக எழுகின்ற ஆதிமனிதன் ‘தமிழன்டா’ என்கிற கருத்தியலின் தூதுவர்களாகவும் இதே நடுத்தரவர்க்கமே திகழ்கிறது. எளிதில் ‘விலைபோகும்’ வர்க்கமாகவும் இது திகழ்ந்து, ‘தேர்தலுக்குத் தேர்தல் கட்சி மாறும்’ பண்பாட்டின் தோட்டக்காரர்களாகவும் மாறுகின்றனர்.

இந்தியாவைச் சுரண்டித் தின்றுகொண்டிருக்கும் பெருமுதலாளிகளையும் பன்னாட்டு ஏகபோகங்களையும் குற்றவாளிக் கூண்டிலிருந்து விடுவித்து, நடுத்தர வர்க்கத்தைக் கூண்டிலேற்றுவது நம்முடைய நோக்கமல்ல. செயலூக்கமுள்ள ஒரு முற்போக்கான குடிமைச் சமூகத்தைக் கட்டமைக்கும் பொறுப்பை உணராமல், சுயநலமே கதி என்று இந்திய நடுத்தர வர்க்கம் உழல்வதைச் சுட்டிக்காடுவதே நம் நோக்கம். ஏனென்றால், 2047இல் 63%ஆக நடுத்தர வர்க்கம் இருக்கும் என்கிற சேதி மனதில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. தேசிய இயக்கம், பொதுவுடமை இயக்கம், திராவிட இயக்கம், அம்பேத்கரிய இயக்கம் போன்றவற்றால் வளர்த்தெடுக்கப்பட்டதுதான் இந்திய நடுத்தர வர்க்கத்தின் முற்போக்கான மனோபாவம். ஆனால், இன்று சுயநலம் என்கிற ஒற்றை முகத்தை வரித்துக்கொண்ட நடுத்தர வர்க்கம், தன்னை வளர்த்த எல்லா முற்போக்கு இயக்கங்களின் ஓட்டுநர் இருக்கைகளில் அமர்ந்துகொண்டு, வண்டிகளைத் தாறுமாறாக ஓட்டிக்கொண்டிருப்பதை நாம் உணர வேண்டும். விடுதலை பெற்ற இந்தியாவின்-நேரு யுகத்தின் லட்சியவாத முகம் மீட்டெடுக்கப்பட வேண்டியது அவசர அவசியம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in