

அனைவருக்கும் சம உரிமை, சம மதிப்பு, சம வாய்ப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்பது இந்திய அரசமைப்பு வலியுறுத்தும் அடிப்படைக் கோட்பாடு. இக்கோட்பாட்டுக்கு உட்பட்டுதான் கல்விக்கூடங்கள் செயல்படுகின்றனவா?
நாடு விடுதலைபெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும் மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளி, மாதிரிப் பள்ளி, தகைசால் பள்ளி என்ற அளவில்தான் அரசாங்கப் பள்ளிகளின் நிலை உள்ளது. பணக்காரர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படிப்பதில் தவறில்லை; பணம் கட்ட முடியாதவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பட்டும். அரசமைப்பின் அடிப்படைக் கோட்பாடான சமத்துவத்துக்கு விரோதமான கல்வி அமைப்பைப் பாதுகாக்கும் வகையிலான கல்விக் கொள்கையே கடந்த நாற்பதாண்டுகளாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. இதன் விளைவு, கல்வியில் இன்று ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வு. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் - தொழில்முறைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கு 7.5% இடஒதுக்கீடு செயல்பாட்டில் இருக்கிறது; இது சமமான வாய்ப்புதானா? மீதி 92.5%இல் யார் பயனடைவார்கள் என யாரும் கணக்குப் போட்டுப் பார்க்கவில்லை. அறியாமை என்பது மிகக் கொடுமையானது. நாட்டில் அமைதியைப் பேணுவது என்பது அநீதிக்கு உள்ளாக்கப்படுவதை மக்கள் அறியாமலேயே வைத்திருப்பதுதான்; அநீதிக்கு எதிராகப் போராடாமல் இருக்கச் செய்வதுதான் சட்டம் - ஒழுங்குப் பராமரிப்பு. இவற்றைப் பற்றி அறிந்துகொள்ள வைக்காதது ஏட்டுக் கல்வி. இந்திய ஜனநாயகமும் கல்வியும் இன்றுவரை இப்படித்தான் செயல்படுகின்றன.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கு மாற்றாக, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கத் தமிழ்நாடு அரசு உயர்மட்டக் குழுவை அமைத்தது. தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தும், அரசியல் காரணங்களுக்காக தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள் என மத்தியக் கல்வி - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்துள்ளதைத் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மாநில அரசின் கல்விக் கொள்கை தனித்துவமானதாக அமைய வேண்டும். 15 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகள், 85 லட்சம் ஆசிரியர்கள், பல்வேறு சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட 25 கோடிக் குழந்தைகளைக் கொண்டது, இந்தியக் கல்வி அமைப்பு. கல்வியில் ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடற்ற சந்தைமயம், சமத்துவமின்மை ஒழிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் கண்ணியமும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயக வளர்ச்சிக்குக் கல்வியும் கல்வியின் வளர்ச்சிக்கு ஜனநாயகமும் பங்காற்ற வேண்டும். இதற்கான வழிகாட்டி அரசமைப்புதான். ஜனநாயகம் – அரசமைப்பு - கல்வி மூன்றின் முக்கோண இணைப்புக்கு உயிரூட்டுவதாக தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கை அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்பு!