

சிறகுகளைச் சுமையாகப் பாவிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட பறவையின் கதைதான் நிருத்யாவினுடையதும். ஆனால், தான் ஒரு பறவை என்பதையும் பறத்தல் தன் இயல்பு என்பதையும் அவர் மறக்கவில்லை. தன்னை விழுங்கத் துடிக்கும் அரசியலுக்கு எதிராகத் தொடர்ந்து கேள்விகள் கேட்டபடி இருக்கிறார். வழிவழியாக நடனத்தையே பாரம்பரியமாகக் கொண்டிருந்த பல குடும்பங்களின் மீது குத்தப்பட்ட முத்திரைகளைக் கண்டு அஞ்சாமல் தன் அடையாளத்தை நிரூபித்துவிடும் உறுதியோடு செயல்பட்டுவருகிறார். தங்களிடமிருந்த பாரம்பரியக் கலையான பரதநாட்டியம் எப்படிப் பறிக்கப்பட்டது என்பதையும், அதற்கு உழைத்துப் பங்காற்றிய கலைஞர்களின் பெயர்களையும், வரலாற்றையும் அழிக்க/ திரித்து எழுத நடக்கும் சதிகளை பற்றியும், ஒரு குறிப்பிட்ட சமூகம் அதைத் தங்களது சொத்தாகச் சொந்தம் கொண்டாட நினைப்பதையும் குறித்துக் கவனப்படுத்திவருகிறார்.
பரத நாட்டியத்தின் நீண்ட வரலாற்றில் முக்கியப் பங்காற்றிய திருவாளப்புத்தூர் கல்யாணி அம்மாள், வைத்தீஸ்வரன்கோயில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மதுராந்தகம் ஜகதாம்பாள், திருவாளப்புத்தூர் சுவாமிநாத பிள்ளை, வழுவூர் ராமையா பிள்ளை உள்ளிட்ட நாட்டிய விற்பன்னர்களின் குடும்ப வழித்தோன்றலாகத் திகழ்பவர் நிருத்யா. 90-களில் இறுதிவரை புகழின் உச்சியில் இருந்த நட்டுவனார் சுவாமிமலை கே.ராஜரத்தினத்தின் பேத்தி இவர். பரத நாட்டியத்தில் வழுவூர் பாணியின் காரணகர்த்தா எனக் கொண்டாடப்படும் வழுவூர் ராமையாவிடம் நேரடியாக நடனம் பயின்றவர் ராஜரத்தினம். ஜதியும் சலங்கை ஒலியும் நாட்டிய அடவுகளும் சூழ வளர்ந்த இவருக்கு, அவற்றை முறைப்படி யாரும் கற்றுத்தரவில்லை. இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் பரதநாட்டியக் கலைஞர்களில் பலர் தன் தாத்தாவிடம் பயின்றவர்கள் எனக் குறிப்பிடுகிறார் நிருத்யா. “அவர்களுக்குக் கற்றுத் தருவதைப் பார்த்துச் சிறுமியான நான் ஆடுகையில் அடுப்பங்கரையில் வேலையாக இருக்கும் என் பாட்டியை அழைத்து அதைப் பற்றிச் சொல்லிப் பெருமிதப்படுவார் தாத்தா” என்கிறார் அவர்.
தேவதாசி முறை ஒழிப்பும் சவால்களும்: தன் வீட்டில் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பலர் பரத நாட்டியம் கற்றுக்கொண்டதையும் தனக்கு அந்தக் கலை மறுக்கப்பட்டதையும் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் வரலாற்றையும் மிகத் தாமதமாகவே புரிந்துகொண்டதாகச் சொல்கிறார் நிருத்யா. “எங்கள் குடும்பத்தைப் போன்ற பாரம்பரிய நடனக் கலைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மீது சமுதாயம் சுமத்திய களங்கம் நீங்க, சீர்திருத்தவாதிகள் என்று சொல்லப்படுவோர் அளித்த ஒரே தீர்வு, திருமணம். குடும்ப வாழ்க்கையில் தங்களை அடக்கிக்கொள்வதன்மூலம் மட்டுமே மரியாதை பெற முடியும் என்கிற கட்டாயத்தில் ஆழ்த்தப்பட்ட எங்கள் பெண்கள் வேறு வழியில்லாமல் நடனத்திலிருந்து தங்களைத் தாங்களே ஒதுக்கிவைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். காரணம், அன்று நிலவிய சூழல் எங்கள் வீட்டுப் பெண்களுக்கு எதிராகவும் இறுக்கமாகவும் இருந்தது. நான்கைந்து தலைமுறைகளாகவே எங்கள் பெண்களின் கலைவெளிப்பாட்டைக் கலாச்சார தேசியவாதிகள் தடுத்து வந்திருக்கிறார்கள். எங்கள் பரத நாட்டியம் புதிதாகச் சுதந்திரம் அடைந்த நம் தேசத்தின் கலாச்சார அடையாளமாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், அந்தக் கலையைப் பின்பற்றிவந்த எங்கள் சமூக நடனக் கலைஞர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். எங்களை இரண்டாம்தரக் குடிமக்களாகச் சித்தரித்து, எங்கள் கலை நீசமானது என்கிற பார்வையைச் சமூகத்தில் கட்டமைத்து, ‘மரியாதைக்குரிய குடும்பங்கள்’ என்று சொல்லப்படும் மேல்தட்டு வர்கத்துப் பெண்கள் பரத நாட்டியத்தைச் சொந்தம் கொண்டாடத் தொடங்கினர்.
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது இசை மற்றும் நடனத்தையே தொழிலாகக் கொண்டிருந்தவர்களின் வாழ்வாதாரத்துக்கும் புரவலர்களை நம்பியிருந்தவர்களின் அடுத்தகட்ட நகர்வுக்கும் தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. தலைமுறை தலைமுறையாக நடனமாடி வந்தவர்கள் இனி பொதுவெளியில் நடனம் ஆடினால், அவர்கள் பாலியல் தொழிலாளிகளாகக் கருதப்பட்டுத் தண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் சொன்னது. ஆனால், அதையே வேறு பிரிவினர் செய்தபோது கலையை மீட்கவந்தவர்கள் என்று போற்றப்பட்டார்கள். இந்த முரண்பட்ட நிலைப்பாட்டுக்குப் பின்னால் இருக்கும் அரசியலைக்கூடப் புரிந்துகொள்ள முடியாமல் இருந்திருக்கிறேன்” என்கிற நிருத்யா, சிருங்கார ரசம் குறித்த கற்பிதம் பற்றிச் சொல்கிறார்.
“பொதுவாகவே பரதநாட்டியத்தில் காதல் ரசம் ததும்பும் பதவர்ணம், பதம், ஜாவளி எனும் பாடல்களுக்கு நடனமாடுவது வழக்கம். அதை ‘சிருங்கார ரசம்’ என்று அழைப்பது வழக்கம். சமுதாயத்தில் எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒதுக்குமுறையால், இந்த சிருங்கார ரசப் பாடல்களைக் கற்றுத்தருவது நட்டுவனார்களாலேயே சற்று கைவிடப்பட்டது. மேல்தட்டு வர்க்கப் பெண்கள் தங்களுக்கு மரியாதையானது என்று கருதிய பக்தி/ சிருங்கார பக்திப் பாடல்களே அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. ஒரு காலத்தில், அதே மேல்தட்டுப்பெண்கள் சிருங்காரப் பாடல்களைக் கையாள விரும்பியபோது அது மீண்டும் நாகரிகமானதாகக் கருதப்பட்டது. என் வீட்டிலேயே வெளிமாணவர்கள் படிக்கும் காதல் சுவைப் பாடல்களை எனக்குக் கற்றுத்தர தயக்கம் இருந்தது. அப்படியே கற்றுத்தந்தாலும் மிகுந்த கண்டிப்பும் இருந்தது. ‘பரம்பரை புத்தி’ என்று யாராவது எனக்கு மோசமான முத்திரை குத்திவிடுவார்களோ என்கிற அச்சம்தான் என் குடும்பத்திற்கு இருந்தது என்று இப்போது புரிகிறது. எங்கள் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் குறித்துப் புரிதலோடு பேச எந்த அரசியல் நிலைப்பாடு உள்ளவரும் முன்வரவில்லை என்பதுதான் என்னை இந்த அரசியலுக்காகக் குரல்கொடுக்கத் தூண்டியது” என்கிறார் நிருத்யா.
பரதம், நாட்டிய சாஸ்திரத்தில் இருந்து வந்ததா?: பரதம் ஆடுவதற்கான உடலமைப்பு, நிறம் போன்றவற்றை யார் கட்டமைத்தார்கள் எனக் கேட்கும் இவர் நாட்டிய சாஸ்திரம், பரத முனிவர் போன்றவை எல்லாமே பரத நாட்டியத்தத்தை சம்ஸ்கிருதமயமாக்க நடந்த ஏற்பாடுகள் என்கிறார். “நடனங்களைச் செவ்வியல் என்றும் நாட்டுப்புற நடனம் என்றும் எந்த அடிப்படையில் யார் வகைப்படுத்தினார்கள்? வழிவழியாக ஆடப்பட்டுவந்த கலையை, அதை ஆடியவர்களைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு உரிமை கொண்டாடும் கலாச்சாரத் தேசியவாதிகள் குறித்தும், இந்தப் பிரச்சனைக்குரிய வரலாற்றைப் பற்றியும் பேசுவதாலேயே நான் நடனத் துறையில் புறக்கணிக்கப்படுகிறேன். என் மூதாதையர்களின் பெயரை நான் சுயநலத்துக்காகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு வேறு. என் தாத்தாவிடம் நடனம் பயின்றவர்கள் அவரது பெயரை வைத்து வெவ்வேறு ஆதாயங்களைச் சம்பாதிக்கும்போது, எங்கள் அறிவுசார் சொத்தான கலையை நாங்கள் சொந்தம் கொண்டாடக் கூடாதா? 2019இல் கிருஷ்ண கான சபாவில் நடைபெற்ற நாட்டிய கலா கருத்தரங்கில் பேசுவதற்காக என்னை அழைத்திருந்தார்கள். கலைக்குள் இருக்கும் சாதிய, பாலினப் பாகுபாடு குறித்து நான் பேசினேன். அதை ஒருவர் ‘விஷம்’ என்று குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். என்ன செய்வது? இதையெல்லாம் தாண்டித்தான் வர வேண்டும்” என்று புன்னகைக்கும் நிருத்யா, 2009 முதல் நடனப் பயிற்சி அளித்துவருகிறார்.
“அரசவை நடனம், வேதகால நடனமாகத் திரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதைத்தான் வரும் தலைமுறையினர் உண்மையான வரலாறு எனத் தவறாகப் புரிந்துகொள்ளும் ஆபத்து நிலை வந்துவிட்டது. அதனாலேயே இது குறித்துத் தொடர்ந்து கவனப்படுத்திவருகிறேன்” என்கிறார் நிருத்யா.